வான் தந்த மழை நீரை தேக்க மறந்தோம்.. வழியற்று கையேந்தி நிற்கின்றோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னை வானிலை மையம் கூல் கூல் அறிவிப்பு

  சென்னை: காவிரி விவகாரம் குறித்து இங்க்பேனா சஹாயா எழுதியுள்ள கவிதை.

  பொன்னி ஆறே என் பொன்னி தாயே என
  தமிழ் கொண்டாடிய காவிரி எங்கே
  என் காவிரி ஆறு இன்று
  கர்நாடக காவிரி ஆகிப்போனது ஏனோ
  நீதி சொன்ன நீதிமன்ற குரல்களும்
  சில செவிகளை சேராமல் போனது ஏனோ
  சொன்ன நீதியை செயல்படுத்த வேண்டியவரும்
  சிலையாய் மவுனம் காப்பது ஏனோ

  தமிழா எழு எழு
  திடமாக நீ எழு
  ஒரு இனமென நீ எழு
  திறவா கதவுகளை திற
  திண்ணமாக நீ திற

  உன் குரல் கேளாத காதுகளுக்கு
  உரக்க நீ பறை வாசித்திடு
  திறவாத கதவுகளின் தடையை
  உடை நீ உடைத்திடு

  தடியொன்றும் தடையொன்றும்
  வழியில் கண்டிட்டால் அதை
  உடை நீ உடைத்திடு

  தடியடிக்கு அஞ்சிட
  நீ தலையாட்டி பொம்மை அல்ல
  தடைகளுக்கு அடைபட
  நீ ஆற்று நீரல்ல

  தஞ்சையின் தலையாட்டி
  பொம்மை நாம் அல்ல
  புஞ்சை நில புதல்வனாய்
  புது காட்டாறாய் நீ எழு
  அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம்
  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் கதையும் அது தானே

  மியாவ் பூனை என முனங்கிய காலம் அது போதும்
  மீசையை முறுக்கி விர்ரென தமிழன் எழும் நேரமிது
  மிடாசுக்கார்களின் மண்டையில் உரைக்க சொல்லிடு
  காவிரி என் தாய் என் உரிமை என்று சத்தமாக சொல்லிடு

  இந்த தமிழ்நாட்டு மண்ணும்
  அந்த கர்நாடக மண்ணும்
  காவிரி அன்னையின் மார்பை
  ஆசை தீர பசி தீர சுவைக்கும்
  சிறு மழலைகள் தானே

  அதிலொரு குழந்தை அவள் என் தாய் மட்டும்
  என்று தான் அடம்பிடித்தால் அது சரியாகுமா
  அது சிறுபிள்ளைத்தனம் தானே
  கொஞ்சம் மடத்தனமும் ஆகுமே

  தொன்று தொட்டு ஓட்டிக்கொண்ட
  தொப்புள்கொடி உறவுகள்
  தொன்மை மறந்த காலத்தின் ஓட்டத்தில்
  சகோதரம் சமத்துவம் மறந்த
  சுயநலக்காரர்கள் ஆனது ஏனோ

  ஒரு குழந்தை வயிறு நிறைய
  மறு குழந்தை பசியோடு புரள
  காவிரி தாய் தான் பொறுப்பாளோ
  காலம் தான் இதற்கு விடை சொல்லுமோ
  கரிகாலன் வாரிசு நாம் அதற்குள் சொல்வோமோ

  பொன் விளையும் பூமி என்று
  நாம் கொண்டாடிய தஞ்சையும்
  இனி வரும் காலங்களில்
  தரிசு நிலங்கள் என்று மாறிபோகுமோ.

  காவிரி ஆறு நம் உரிமை தானே
  காவிரி பால் குடித்த குழந்தைகள் தாம் நாமே
  காவிரி என் அன்னை என்று உரக்க சொல்லுவோம்
  காவிரி நீரை உரிமையோடு பெற்று வருவோம்

  காலம் கடந்து கொண்டிருக்கிறது
  விழித்தும் தூங்கியே கிடக்கிறோம்
  கல்லணை கட்டிய கரிகாலனும்
  அணை கட்டிய காமராசனும்
  இனியொரு முறை பிறந்ததுதான் வந்திடணுமோ
  தமிழ் மண்ணில் அணையொன்றை கட்டிட

  இன்றைய பிரச்சனைக்காக உரக்க கத்துகிறோம்
  நேற்றைய உண்மைகளை ஒளித்தே வைக்கிறோம்
  நாளையை எப்படி எதிர்கொள்ளத் போகிறோம்
  வறண்ட தமிழ் மண்ணாகவா
  வளம் கொழிக்கும் தேசமாகவா

  வான் தந்த மழை நீரை தேக்க மறந்தோமடா
  வழியற்று கையேந்தி நிற்கிறது என் தேசமடா
  வழியறிந்தும் பின்பற்ற மறப்பது நம் தவறல்லவா
  விடையறிந்தும் கேள்விகளோடு வாழ்வது சரியாகிடுமா.

  - Inkpena சஹாயா

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Writer Inkpena Sahaya has written a poem on Cauvery agiatations being held all over Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற