• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி லேகியம்: தன திரயோதசி நாளில் அவதரித்த தன்வந்திரி பகவான் - விரதமுறை

|

வேலூர்: மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி நாளாகும். அன்று உலக ஆயுர்வேத தினம் என்பதால் நவம்பர் 5ஆம் தேதி வேலூர் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி வெளிவந்தார். ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க வந்த இவரை உலக மருத்துவர்கள் மானசீகக் குருவாகவும் கடவுளாகவும் ஏற்று வணங்கி வரும்போது தான் சார்ந்த மருத்துவ துறைகளில் உயர்நிலை பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இதற்காக ஆயுள் ஸ்திர தந்திரம் என்கிற வழிபாட்டு விதிகளே தன்வந்திரி பகவானைப் பற்றி இருக்கிறது.

கல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்துக்கு லட்சுமிதேவி, வீரத்துக்கு பார்வதிதேவி, ஞானத்துக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய் தீர்க்கும் கடவுளாக, மாமருத்துவராக நம்மால் வணங்கப்படுபவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராணங்கள்.

Dhantrayodashi 2018: Dhanvantari Jayanthi day

தன்வந்திரி ஜெயந்தி விழா

திங்கள்கிழமை, உத்திர நக்ஷத்திரம், திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மாபெரும் தன்வந்திரி ஹோமமும் 108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசையுடனும் மந்திர ஜபத்துடன் தன்வந்திரி லேகியம் தயாரிக்கும் வைபவமும் சிறப்பு ஸஹச்ர நாம அர்ச்சனையும், சதுர்வேத பாராயணமும் நடைபெறவுள்ளது.

தீபாவளிக்கும் தன்வந்திரிக்கும் தொடர்பு

'பாற்கடல் கடையப்பட்டபோது வெளியானவர் தன்வந்திரி’ என்கிறது பாகவதம். பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன் பின் அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் தேவர்கள் அனைவரும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்கி இல்லத்தில் சேர்ப்பது வட இந்தியர்களின் வழக்கம். தீபாவளிக்கு முந்தைய திரயோதசி தினத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரகத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும்.

தீபாவளி மருந்து

தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும். எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன.

வைத்தியராக தரிசனம் தரும் பகவான்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது. சற்றுக் கீழே ஸ்ரீகஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும் கைக்கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்பில் பெல்ட்டுமாக, தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார் இந்த தன்வந்திரி பகவான். இவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடத்தில் தன்வந்திரி மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் தன்வந்திரி

தீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, 'டாக்டர் தன்வந்திரி’ என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார். அன்றைய தினம் திரளான பக்தர்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வருகிறார்கள். தன்வந்திரியின் மகா மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறார்கள். நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து லேகியமாக தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதிக்கப்பட்ட விசேஷ மருந்து, தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதை நீர், தேன், பாலில் கலந்து உட்கொண்டால் சரீரம் பலம் பெறும். பித்தம், வாதம், சிலேத்துமம் போன்ற முத்தோஷங்களைப் போக்கும் கண்கண்ட மருந்தாகும்.

விரதம் முறை

அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு அன்று முழுவதும் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு அவரை பற்றிய துதிகளை படிக்க வேண்டும். மாலைப் பொழுது சாயும் முன் நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபடுவார்கள். விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு மண் எடுத்துப் பசும்பாலில் கலந்து இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு மறுபடியும் கலக்கித் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்வார்கள். இந்த விரத நாளன்று வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் மரணங்கள் துர்மரணங்களில் இருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என நம்பப்படுகிறது.

lok-sabha-home

 
 
 
English summary
Bhagavata Purana state that Dhanvantari emerged from the Parkadal and appeared with the pot of amrita during the story of the Samudra.His birthday is celebrated by the practitioners of Ayurveda every year, on Dhanteras, two days before Deepavali.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more