வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசலுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதி இல்லை - நேரலையில் தரிசிக்கலாம்
சென்னை: புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. அதே சமயம் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுகளை நேரடியாக யு-டியூபில் மூலம் நேரடியாக தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் அனைத்து வைணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வாடிக்கை. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து அல்லது திருவாய்மொழித் திருநாள் எனவும் வைகுண்ட ஏகாதசிக்கு பிந்தைய 10 நாட்களும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் இசைத்து பாடப்படும். பகல் பத்து தொடங்கி முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி மற்றும் அதைத்தொடர்ந்து ராப்பத்து வரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வதுண்டு.
வணக்கம்டா மாப்ள.. இந்தியாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் மதுரைக்கு 3-வது இடம்!
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா அனைத்து வைணவ கோயில்களிலும் கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் புகழ்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பகல் பத்து திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பரமபதவாசல் திறப்பு
ஜனவரி 13ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, அன்று அதிகாலை 4:30 மணியளவில் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. தற்போது ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவிவருவதால், நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வன்று காலை 6 மணிவரையிலும், பக்தர்கள், உபயதாரர்கள், கட்டளை தாரர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதியில்லை
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதாக
பார்த்தசாரதி கோயிலின் துணை ஆணையர்(பொறுப்பு) கவெனிதா கூறியுள்ளார். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், அன்று காலை 6 மணிவரை உபயதாரர்கள், பக்தர்கள், கட்டளைதாரர்கள் என யாருக்கும் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஆனால், பக்தர்களின் வசதிக்காக கோயிலுக்கு வெளியே பெரிய திரைகள் அமைத்து பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை நேரலையில் கண்டு தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தரிசனம்
அதே சமயம், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அன்று காலை 6:15 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இலவச தரிசன கட்டணம் மற்றும் ரூ.100 தரிசன கட்டணம் என இரண்டு வரிசைகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். கட்டண தரிசனம் செய்ய விரும்புவோர், அன்றைய தினம் நேரடியாக கோயிலுக்கு வந்து ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

வார விடுமுறை நாட்களில் அனுமதியில்லை
சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் உற்சவங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் வழக்கம்போல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

ஆகம விதிகள்
பொதுவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில், கோயில் மாட வீதிகளில் சுவாமி திருவீதியுலா வைபவம் நடைபெறும். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஆகம விதிகளைப் பின்பற்றி கோயில் வளாகத்திற்குள்ளேயே வீதியுலா வைபவம் நடத்த உள்ளோம். பக்தர்கள் யு-யூப் மற்றும் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வுகளை நேரடியாக கண்டு தரிசிக்கலாம். இயல்பு நிலை திரும்பும் வரையிலும் கோயில் வளாகத்திற்குள் நடைபெறும், உற்சவம், புறப்பாடு உள்ளிட்ட உற்சவங்களில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

500 போலீசார் பாதுகாப்பு
பக்தர்கள் தேங்காய், பூ, பழம், துளசி மாலை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சுவாச நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் , 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உடல்நலன் கருதி கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வருவோர் கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. பக்தர்கள் கைகளை சானிடைசர்கள் கொண்டு சுத்தம் செய்த பின்னர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் சுமார் 500 போலீசார் ஈடுபடுத்தப்படு உள்ளனர், என்று தெரிவித்தார்.