For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம்

By Staff
Google Oneindia Tamil News

Books
-புன்னியாமீன்

ஏப்ரல் 23- இத்தினம் உலக நூல் மற்றும் பதிப்புரிமை (Word Book and Copyright Day) தினமாகும்.

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் முன்னேற்றம் பெருமளவில் நூல் வெளியீட்டிலும் வாசிப்புப் பழக்கத்திலுமே தங்கியிருந்தன. அந்நாடுகள் தெளிவான நூல்வெளியீட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தமை இதற்கு அடிப்படையாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய திட்டவட்டமான நூல்வெளியீட்டுக் கொள்கைகள் இருக்கவில்லை. இது வாசிப்புப் பழக்கத்திலும் ஒரு குறைபாட்டினை தெளிவுபடுத்தியது.

இதனை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1972ம் ஆண்டினை சர்வதேச நூல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தமக்கென நூல் கொள்கைகளை உருவாக்கியது..

இருந்தும் சர்வதேச நூல் ஆண்டில் குறிப்பிட்ட இலக்கை எய்தாத நிலையில் பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25ம் தேதி ஆரம்பமாகி நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் 28வது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஏப்ரல் 23ம் தேதியை உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினமாகப் பிரகடனப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதினால் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் 23ம் தினத்தன்று இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்பு நல்கி வருகின்றன. இவற்றுள் நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions) அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association) உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் ஆகியவற்றின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

இங்கு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (The International Federation of Library Associations and Institutions (IFLA)) எனும்போது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூலகத்தில் இயங்கி வருகிறது.

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படும் ஏப்ரல் 23ன் முக்கியத்துவம் என்ன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616ம் ஆண்டு இந்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற நாடக எழுத்தாளரான வில்லியம் ஷேக்ஸ்பியர் மரணித்தார்.. 1951ம் ஆண்டில் - சார்ல்ஸ் டோவ்ஸ், (நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்- பிறப்பு 1865) மற்றும் இந்தியாவில் 1992 - சத்யஜித் ராய், (உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் -பிறப்பு 1921) போன்றோரும் மரணித்த தினம் இதுவாகும்.

இதே நாளில் 1858 - மாக்ஸ் பிளாங்க், (நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் - இறப்பு 1947) 1867 - ஜொகான்னெஸ் ஃபிபிகர், (நோபல் பரிசு பெற்றவர்- இறப்பு 1928) 1897 - லெஸ்டர் பியர்சன், (நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் - இறப்பு. 1972) 1902 - ஹால்டோர் லாக்ஸ்னெஸ், (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் -இறப்பு 1998) போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்துள்ளனர்.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும், பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே ஏப்ரல் 23ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவந்தாலும் கூட, அச்சு ஊடகங்கள் அறிவை வழங்குவதற்கும் தகவலைப் பரப்புவதற்கும் மிக முக்கிய சாதனமாகத் தொடர்ந்துமிருப்பது உணரப்பட்டுள்ளது.

நூல்களும் மற்றும் எழுத்து ஆவணங்களும் மக்களின் முதுசொங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும் பிற் சந்ததியினருக்கு அவற்றை வழங்குவதற்கும் பொருத்தமான கருவிகளாக அமைந்துள்ளன.

இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இவை பேணப்பட்டாலும்கூட, அச்சு ஊடகங்களில் காணப்படும் நம்பகத்தன்மையைப்போல் இவையிருப்பதில்லை என்பது பரவலான கருத்தாகும்.

எனவேதான் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட அச்சு ஊடகங்கள் தொடர்ந்தும் தனித்துவ வளர்ச்சி கண்டு வரும் அதேநேரத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் மேலும் முன்னேறிக் காணப்படுகின்றன. அதேநேரம், அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகளில் மிகத் தாமதமாகவே அச்சு ஊடக வளர்ச்சி நடைபெறுகின்றது.

இதற்குக் காரணம் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் தேசிய ரீதியில் நூல் வெளியீட்டுக் கொள்கை ஒன்று காணப்படாமையே. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமக்கென நூல் வெளியீட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள யுனிசெப் தொடர்ச்சியான ஆலோசனைகளை கூறி வருவதுடன் அதற்கான குறிக்கோள்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா, சிங்கப்பூர், நைஜீரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில் தலைசிறந்த நூல் வெளியீட்டு நாடுகளாக திகழ்கின்றன. அண்மைக்காலமாக இலங்கையும் நூல் வெளியீட்டில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இருப்பினும் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் நூல் வெளியீட்டின்போது சர்வதேச தராதரங்கள் பேணப்படாமை இன்றுவரை காணப்படக்கூடிய ஒரு குறைபாடாகவே உள்ளது. குறிப்பாக அச்சகங்கள் இலாப நோக்கத்தைக் கருத்திற்கொண்டு செயற்படுவதினால் நூல்களின் அச்சீட்டுத் தரம் பெருமளவுக்கு குறைவடைகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

விசேடமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச புத்தக தராதர எண்ணை (ISBN) பெற்றுக்கொள்வதில் கரிசனை காட்டுவதில்லை. இந்நாடுகளில் அச்சிடப்படக்கூடிய ஏனைய மொழி நூல்களைவிட தமிழ்மொழி நூல்களில் இத்தகைய குறைபாட்டினை பெருமளவுக்குக் காணலாம். கலை, விஞ்ஞான, இலக்கியப் படைப்புக்களின் பதிப்புரிமை சம்பந்தமான பேர்ண் உடன்படிக்கைக்கும் (1886) , 1979ஆம் ஆண்டின் 52ம் இலக்க Code of intellectual Property Act எனப்படும் அறிவாண்மைச் சொத்துகள் கோவைச் சட்டத்துக்கும் அமைய நூல் வெளியீடுகள் பாதுகாப்பைப் பெற வேண்டும்.

பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் வாசகர்களை வாசிப்புத்துறையில் ஈடுபடுத்தும்முகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப் பெரும் பணியாகக் காணப்படுகின்றது.. புத்தகங்கள் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்களை இவ்விடத்தில் தொகுத்து நோக்குவது பயனுடையதாக இருக்கும்.

வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தவை புத்தகங்கள் தான் - சார்ல்ஸ் கிங்ஸ், நூலகம் மூளைக்கான மருத்துவமனை - யாரோ, பிரதிபலிக்காத வாசிப்பு, ஜீரணிக்காத உணவினைப்போன்றது - எட்மண்ட் ப்ரூக், புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் - சீனப் பழமொழி, சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல. அது நாம் நுழைய முடியாத உலகிற்று அழைத்துச் செல்லும் காட்சி-யாரோ, புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்து - அடுத்த தலைமுறையினருக்கு தரப்போகும் சிறந்த சொத்து - ஹென்றி. மேற்படி சில கருத்துக்கள் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

இவ்விடத்தில் இலங்கையின் தமிழ்மொழி புத்தக வெளியீடு சம்பந்தமாக சில கருத்துக்களையும் பதிவாக்குதல் வேண்டும். இலங்கையில் தமிழ்மொழி நூல் வெளியீட்டுக்கான தனிப்பட்ட நிறுவனங்கள் மிகக் குறைவு. இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக செயற்பட வேண்டிய நிலைப்பாடு உண்டு. இந்தியாவைப் போல ஒரு எழுத்தாளரால் பதிப்பிக்கப்படக்கூடிய நூல்களை கொள்வனவு செய்ய அரச மட்டத்தில் நிலையான திட்டங்களில்லை. எனவே ஒரு தமிழ் நூலை வெளியிடக்கூடிய எழுத்தாளன் தான் அச்சிட்டப் புத்தகங்களை சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் நட்டப்படும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

இலங்கையில் இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றன சுமார் 5000 ரூபாவுக்கு உட்பட்ட தொகையில் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்தாலும்கூட, இங்கு ஒரு தேசிய கொள்கையின்மை காரணமாக இனவாதம், பிரதேசவாதம், அரசியல் செல்வாக்கு என்பன ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள்.

மறுபுறமாக ஒரு தேசிய கொள்கையின்மையாலும், மேற்படி திணைக்களங்களின் அடாவடித்தனப் போக்கினாலும் இலங்கையில் காணப்படக்கூடிய யுத்த நிலை காரணமாகவும் இலங்கையின் தமிழ்மொழி நூல் வெளியீடு என்பது ஒரு நீண்ட இடைவெளியை வளர்க்கப் போகின்றது என்பது உறுதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X