For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு; 2073ம் ஆண்டை நோக்கி விலைவாசி!

By Chakra
Google Oneindia Tamil News

Rupee
-ஏ.கே.கான்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம்.

இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது.

டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது.

நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது.

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது:

ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார்.

ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும்.

இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும்.

அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும்.

ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும்)

இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம்.

மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

English summary
The Indian rupee slumped to a new all-time low against the U.S. dollar Tuesday as importers continued to scoop up the greenback on fears that the local currency would weaken further in the absence of aggressive central bank intervention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X