For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் 26.1.2021 அன்று நடைபெற்ற தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட "தமிழக நலன்களுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்!" என்ற தீர்மானத்தில், "ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்சினை எழுகின்ற நேரத்தில்கூட - மத்திய அரசு இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல் மவுனம் சாதிக்கிறது.

ஆகவே, இப்பிரச்சினையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். அக்கடித விவரம்:

MK Stalin urges India should support to Srilankas war-crimes to International Court

இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமானதொரு விசாரணை நடத்தி - பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக கடந்தகாலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்க நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் 46 ஆவது கூட்டம் தொடர்பாக இக்கடிதத்தை தங்களுக்கு தற்போது எழுதுகிறேன்.

கடந்த 6.1.2021 அன்று இலங்கை சென்ற நமது வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் திரு. ஜெய்சங்கர் அவர்கள், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. தினேஷ் குணவர்த்தனே அவர்களைச் சந்தித்தபிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது.

"இலங்கையில் இன ஒற்றுமையை நிலைநாட்டும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகிய தமிழ் இன மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே உகந்தது. பயனுள்ள அதிகாரப் பகிர்வினை அளித்து - 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதும் இலங்கை அரசு அளித்துள்ள உத்தரவாதத்தில் அடங்கும். இதன் விளைவாக இலங்கையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் நிச்சயம் மேம்படும்" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்திக் குறிப்பு - இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்த இந்திய அரசின் வழக்கமான நிலைப்பாட்டை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அதிலும் ஆக்கபூர்வமான தீர்வினை நோக்கி எந்தவித முன்னேற்றத்தையும் தந்துவிடவில்லை. அதே நேரத்தில், நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடர்பாக, நமது வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் - அந்நாட்டு அதிபர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடனான தனது சந்திப்பின் போது, உண்மையில் - அர்த்தமுள்ள வகையில் விவாதித்தாரா என்பதும் தெரியவில்லை.

பிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்பிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆக்கபூர்வமான - சுதந்திரமான - சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் விசாரணையை நடத்திட நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் 40/1-ஐ இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதும் - அந்தத் தீர்மானத்தின்படி மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த உத்தரவாதத்தை இலங்கை அரசு மீறி விட்டது என்பதும் தற்போது தெளிவாகத் தெரிகிறது.

ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை நிலைநாட்டிடும் வகையில் நிர்வாக மற்றும் அரசியல் சட்ட ரீதியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதிலும் இலங்கை அரசு படுமோசமாகத் தோற்று விட்டது.

13-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் தொடர்பாகக் கூட- அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 34 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், மாகாணக் கவுன்சில்களின் அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளையே அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் மேற்கொண்டு - அந்நாட்டின் அரசியல் சட்டத்தினையே அவமதிக்கும் வகையில் மாகாண நிர்வாகத்தை இலங்கை அரசு நடத்தியிருக்கிறது.

இலங்கையில் உள்ள அரசுகள் ஈழத்தமிழர்களின் சட்டபூர்வமான விருப்பங்களை நிறைவேற்றாமல் - ஈழத்தமிழர்களுக்கு அந்நாட்டில் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் - 1987 ஆம் ஆண்டு உருவான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்த உத்தரவாதத்திற்கு எதிராகவே இலங்கையில் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அரசும் நடந்து கொண்டிருக்கின்றன.

தத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலிதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி

இந்தத் தருணத்தில், "ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க - இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் - ஒருங்கிணைந்து, ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளதை பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு - இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் அவர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு பிரதமர் அளவிலும் - தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதுடன் - இதைவிட அதிக அதிகாரம் பெற்று, இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது - உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் என்பதை பிரதமர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் அவர்களின் உடனடி முயற்சியும் - தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK President MK Stalin has urged that India should support to Srilanka's war-crimes to International Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X