ரயில் தாமதம்: அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள்
வள்ளியூர்: கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் வள்ளியூர் ரயில் நிலையத்தி்ல் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகளும் மாணவர்களும் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் கடந்த ஒரு வார காலமாகவே தினமும் சுமார் 1 முதல் 2 மணி நேரம்வரை தாமதமாகவே நாகர்கோவில் சென்றடைகிறது.
இந்த ரயிலில் நெல்லை, கோவில்பட்டியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பயணம் செய்கின்றனர்.
நேற்று இரவு 7 மணி்க்கு வள்ளியூரிலிருந்து வந்து 8.25க்கு நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டிய இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக வள்ளியூர் ரயி்ல் நிலையம் வந்தது. ஆனால் சுமார் 2 மணி நேரம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகளும் மாணவர்களும் ஆத்திரம் அடைந்தனர்.
அவர்கள் ஆவேசமாக வள்ளியூர் ரயில் நிலைய மேலாளர் அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு என்ன காரணத்திற்காக ரயி்ல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த நிலைய மேலாளர், ''நாகர்கோவிலில் இருந்து டெல்லி செல்லும் நீஜாமூதின் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் வழி விடுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகவும், சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த வண்டிகள் தொடர்ந்து காலதாமதமாக வருவதால் இப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரி்வித்தார்.
ஆனால் அதை ஏற்று கொள்ளாமல் பயணிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.