நெல்லை அருகே தொழிலதிபர் வெட்டிக் கொலை
பணகுடி: நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த கோழிப்பண்னை உரிமையாளர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறை சேர்ந்த மனோகர் மகன் அந்தோணி மகேஷ் பிரபு. திருமணமாகவில்லை. கோழிப்பண்ணை வைத்திருந்தார்.
கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே ஊரில் காங்கிரஸ் பிரமுகரான சேவியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அந்தோணி பிரபு முக்கிய குற்றவாளி. இவர் மீது மும்பை மற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு இவர் ஆஜாராகவில்லை. இதனால் மும்பையிலும், நெல்லை மாவட்டத்திலும் இவர் மீது பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவர் சுதந்திரமாக சுற்றி வந்தார். இதுகுறித்து 2004ல் படுகொலை செய்யப்பட்ட சேவியரின் தங்கை அரசி நெல்லை மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார். இதையடுத்து எஸ்பியின் உத்தரவின்பேரில் பணகுடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அந்தோணி மகேஷ்பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தார். இதிலும் அவர் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார். இது சேவியரின் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காவல்கிணறு-வடக்கன்குளம் சாலையில் அந்தோணிபிரபு பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சேவியரின் சித்தி மகன் ராஜு, அவரது மருமகன் செல்லத்துரை ஆகியோர் அந்தோணி மகேஷ்பிரபுவின் பைக்கில் பின்புறம் மோதினர். இதில் நிலைதடுமாறி அவரை கிழே விழ செய்தனர். பின்னர் காரிலிருந்து இறங்கிய அவரை சராமரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் அவருக்கு முகம் சிதைந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட அவர்கள் மின்னல் வேகத்தில் காரில் ஏறி தப்பி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.