3 ஆண்டுக்கு மேல் சிறை: சிறார்களை விடுவிக்க உத்தரவு
சென்னை: குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி, சிறுவர் சீர்திருத்த முகாம்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வி.பாலசந்தர் என்கிற சமூக சேவகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
சிறுவர் சீர்திருத்த சிறப்பு இல்லங்களில் நான் சமூக சேவை செய்து வருகிறேன். வேலூர் இல்லத்திலும், சென்னை கெல்லீஸ் சிறுமிகளுக்கான இல்லத்திலும் உள்ள ஆவணங்களை பார்க்கும்போது 3 ஆண்டுக்கும் மேலாக பலர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது இளம் சிறார்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். ஆகவே, 3 ஆண்டுகளுக்கு மேலாக காவலில் வைத்திருக்கும் சிறுவர்-சிறுமிகளை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
இளம் சிறார் பாதுகாப்பு சட்டம் 1986-ல் கொண்டுவரப்பட்டது. 2000 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. குற்றங்களுக்காக சிறப்பு இல்லங்களில் காவலில் வைக்கப்பட்டு 3 ஆண்டு தண்டனை அனுபவித்துவிட்டால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
4 வயதுக்கு குறையாத சிறுவர்களும், 16 வயதுக்கு குறையாத சிறுமிகளும் சிறப்பு இல்லங்களில் காவலில் வைக்கப்படுகிறார்கள். சிறுவர்களை 18 வயது வரையும், சிறுமிகளை 20 வயது வரையிலும் காவலில் வைக்க சட்டத்தில் இடம் உள்ளது.
அதே சமயம், 3 ஆண்டுகள் மட்டுமே இவர்களை காவலில் வைக்க முடியும். இளம் சிறார் கண்காணிப்பு இல்லங்கள் அல்லது சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டவர்கள், அந்த காவல் முடிந்ததும் விடுதலை செய்யவேண்டும். எப்படிப்பட்ட குற்றங்கள் செய்தாலும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஆகவே, இளம் சிறார் சிறப்பு இல்லங்கள் மற்றும் கண்காணிப்பு இல்லங்களில் 3 ஆண்டுக்கு மேல் காவலில் இருக்கும் இளம் சிறார்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் விடுதலையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.