For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ- ராமதாஸ் மீது கருணாநிதி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையி்ல் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் வழங்கப்படும் இணைப்புகளுக்கான கட்டணம் ரூ. 100 ஆகத்தான் இருக்கும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: அரசு கேபிள் டிவி இணைப்புக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு மட்டும் அதிக கட்டணம் என்று அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பேட்டி கொடுத்ததாக செய்திகள் வந்துள்ளதே?

பதில்: இதர நகரங்களிலும், கிராமங்களிலும் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் முறைக்கும், சென்னையில் வழங்கப்படும் முறைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. சென்னையில், கண்டிஷனல் ஆக்செஸ் சிஸ்டம் என்ற நடைமுறை இருப்பதால், இரண்டு வகையான இணைப்புகள் வழங்கும் முறை உள்ளது.

ஒன்று, செட்டாப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் இணைப்பு பெற்று குறிப்பிட்ட சில சேனல்களைக் காண்பது. இந்த நடைமுறை தான் சென்னையில் அதிகம். இதுபோன்ற இணைப்புகளை அரசு கேபிள் நிறுவனமும் வழங்கும். அதற்கான கட்டணம், மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல் மாதம் 100 ரூபாய்க்கு மிகாமல் இருக்கும்.

இரண்டாவது முறையில், செட்டாப் பாக்ஸ் மூலமாக இணைப்புகள் பெறுவது. தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மத்திய அரசின் டிராய் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

சென்னையில் செட்டாப் பாக்ஸ் முறையில் இணைப்புகள் பெற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. எப்படியிருந்தாலும் பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அரசு கேபிள் நிறுவனம் கண்டிப்பாக வசூலிக்காது. சென்னை நகரில் செப்டம்பரில் அரசு கேபிள் இணைப்புகள் வழங்க உள்ளோம்.

சென்னையில் செட்டாப் பாக்ஸ் மூலம் கூடுதல் சேனல்களைப் பார்க்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை பற்றித்தான் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, எதிலும் குறை காண்பதில் இன்பம் காணும் ஒரு கட்சியின் தலைவர் (ராமதாஸ்), 100 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயம் செய்திருப்பது தனியாரை ஊக்குவிக்கும் செயல் என்று ஏனோதானோவென்று அறிவித்திருக்கிறார். அது எந்த அளவிற்கு அறியாமை என்பதை தமிழக மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: கேபிள் இணைப்புகளை அரசு நேரடியாக வழங்குமா? அல்லது இதுவரை இருந்ததைப் போல் மாவட்டத்திற்கு ஒருவர், இருவர் ஏஜென்டுகளைப் போல் செயல்படுவார்களா?

பதில்: கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக அரசு நிறுவனத்திடம் இருந்தே இணைப்பைப் பெற்று வீடுகளுக்கு வழங்கலாம். அல்லது மாவட்டத்திற்கு ஒருவர், இருவர் என்ற நிலையில் இப்போது நிறுவனங்களை அமைத்துச் செயல்படுபவர்கள் மூலமாகவும் இணைப்புகளைப் பெற்று மக்களுக்கு வழங்கலாம். எந்த முறையில் வழங்கினாலும் நிர்ணயிக்கப்பட்டபடி 100 ரூபாய்க்கு பொதுமக்கள் இணைப்புகளைப் பெறுவர்.

கேள்வி: சென்னை தரமணி பகுதியில் டாடா நிறுவனத்திற்கு 25 ஏக்கர் நிலத்தையும், டி.எல்.எப். நிறுவனத்திற்கு 35 ஏக்கர் நிலத்தையும் தாரை வார்த்துள்ளது தமிழக அரசு. அந்த இடத்தில் ஒரு ஏக்கர் 100 கோடி ரூபாய் போகும் என்கிறார்கள். அந்த இடத்திற்கான சந்தை விலை என்ன? டாடா, டி.எல்.எப். நிறுவனங்களுக்கு என்ன விலைக்குத் தரப்பட்டது என்பதை அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்: கண்ணை மூடிக்கொண்டு நிலத்தை வாரி வழங்கிவிடவில்லை. டாடா நிறுவனத்திற்கு நிலத்தை விலைக்கு கொடுக்கவில்லை. 99 ஆண்டு குத்தகைக்குத் தான் தரப்பட்டுள்ளது. குத்தகைத் தொகையும் ஒன்றும் குறைவில்லை. 25.27 ஏக்கர் நிலத்திற்குக் குத்தகையாக ரூ. 1,321 கோடி கொடுப்பதற்கு முன் வந்திருக்கின்றனர்.

25.27 ஏக்கர் நிலம், டிட்கோ நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்வதற்காகத் தரப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒருவருக்கு எந்தவித நடைமுறையும் பார்க்காமல் தரப்படவில்லை. முறைப்படி டெண்டர் கோரி, யார் அதிகத் தொகை தர முன்வந்தார்களோ அவர்களுக்குத் தான் தரப்பட்டுள்ளது.

டி.எல்.எப். நிறுவனத்திற்கு 26.64 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. அந்த நிலமும் குத்தகைக்குத் தான் தரப்பட்டுள்ளது. டெண்டரில் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 25.7 கோடி தருவதற்கு டி.எல்.எப். நிறுவனம் முன் வந்ததால் அந்நிறுவனத்திற்கு நிலம் வழங்கப்பட்டது. டி.எல்.எப். நிறுவனம் ரூ. 725.3 கோடி செலுத்தியிருக்கிறது.

இந்தத் தொகையை விட வேறு யாரும் அதிகத் தொகைக்குக் கேட்கவில்லை. எனவே, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பழி சுமத்தக் கூடாது.

கேள்வி: கடந்த இரண்டு ஆண்டுகளில் என்கவுன்டர் என்ற பெயரில் 68 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்: இதை அவர் நிரூபிக்கத் தயாரா? 68 பேரையும் பெயர், முகவரியுடன் ராமதாஸ் வெளியிடத் தயாரா? இரண்டு ஆண்டுகளில் போலீசாரால் சுடப்பட்ட சம்பவங்கள் 14. அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 மட்டுமே.

இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X