கருணாநிதிக்கு கரூரிலிருந்து கொலை மிரட்டல்
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு கரூரிலிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4.05 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈழத் தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும், மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் விஷம் கலக்கப்படும் என்று மிரட்டி விட்டு அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக முதல்வர் அலுவலகத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மத்திய குற்றப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
கரூரில் உள்ள பொது தொலை பேசியில் இருந்து மர்ம நபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று கரூருக்கு சென்றனர். மர்ம நபர் பேசியதாக கூறப்படும் தனியார் நிறுவன பொது தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளரிடம் தனிப்படை போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.