For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலுவின் 'ஜாதகம்'-கருணாநிதி வேதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: டி.ஆர். பாலுவின்- புராணீகர்களுடைய மொழியிலே சொல்ல வேண்டுமேயானால்- ஜாதகமோ என்னவோ- அவர் எங்கே பாலம் கட்டினாலும் அதில் பிரச்சினை வருகிறது என முதல்வர் கருணாநிதி கூறினார்.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ரூ.260 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான பல வழி மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் முதல்வராக அல்ல, முதல் ஆளாக நான் வந்து காத்திருப்பது வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர் என்னைச் சந்திக்க வந்த காரணத்தால் அவரோடு விவாதித்த விஷயம், தமிழ் நாட்டு மக்களுக்கு தொடர்புடையது என்ற காரணத்தால்- நீண்ட நேரம் அதற்காக செலவிடப்பட்டு- நான் காலம் தாழ்ந்து வந்தமைக்காக உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த கத்திப்பாரா பாலம் கூட கொஞ்சம் காலம் தாழ்ந்து தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் காலம் தாழ்ந்து வந்ததிலே தவறில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

இருந்தாலும் காலந்தாழ்ந்து கட்டி முடித்தாலும் கனகச்சிதமாக, கவர்ச்சியாக, காண்போர் வியக்கும் அளவிற்கு இந்த பாலத்தை கீழே இருந்து பார்த்துப் பயனில்லை, விமானத்திலே இருந்து பார்த்து வியக்க வேண்டுமென்கிற அளவிற்கு இதை அமைத்து அர்ப்பணிக்கும் இந்த விழாவிற்கு நம்மையெல்லாம் அழைத்துள்ள தம்பி டி.ஆர்.பாலு அவர்களுடைய ஆற்றலை திறமையை ஆர்வத்தை, அக்கறையை நான் உங்களோடு சேர்ந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாலம் என்றாலே ஒருவரையொருவர் இணைப்பது. இரண்டு பொருள்களை, இரண்டு இடங்களை இணைப்பது பாலம். பாலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது இருவருக்கும் இடையே பாலமாக இருக்கிறார் என்று சொன்னால் இருவரையும் ஒற்றுமைப்படுத்தி, ஊருக்கு நன்மை செய்யப்பாடுபடுகிறார் என்று பொருள்.

பாலமாக இல்லாதவர்கள் அகழியாக இருந்து அந்த இருவருடைய தொடர்பைத் துண்டித்து அதிலே மகிழ்ச்சி அடைபவர்களும் உண்டு.

தமிழகத்தில் இன்றைக்கு ஏராளமான பாலங்கள் காணப்படுகின்றன.

1957ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னை குளித்தலையிலே போய் நில் என்று அண்ணா கட்டளையிட்டார்.
நான் தேர்தல் சுற்றுப்பயணத்தில் சென்றபோது குளித்தலை-முசிறி இடையே ஆற்றைக் கடக்க ஒரு பாலம் வேண்டுமென்று கேட்டார்கள். நான் வெற்றி பெற்றும் கட்டித் தர முடியவில்லை. பிறகு நானே ஆட்சிக்கு வந்து முதல்வராகப் பொறுப்பேற்று, அதற்கு பிறகு தான் அங்கே கட்டப்பட்ட பாலம் தான் முசிறி- குளித்தலை பாலம்.

ஏறத்தாழ 40 அல்லது 50 கல் மைல் சுற்றிக் கொண்டு போகவேண்டிய தூரத்தை அந்த பாலம் குறைத்தது. நான் கட்டி முடித்த பிறகு எம்ஜிஆர் ஆட்சி இடையிலே வந்தது. அந்த பாலத்திற்கு அந்த ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்ந்து 'கருணாநிதி பாலம்' என்று வாய் மொழியாகச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். அது ஒன்றும் தீர்மானமாகவோ, சட்டமாகவோ, அரசாணையாகவோ ஆகவில்லை.

அவர்களுடைய ஆசைக்கு என் பெயரால் அந்த பாலத்தை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

எம்ஜிஆர் முதல்வாரனதும் அந்தப் பாலத்திற்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்று, அந்தப் பாலத்தின் பெயரை மாற்றி - என்னுடைய பெயரை மாற்றி, வேறு பெயர் வைத்தார். நான் அதற்காக கவலைப்படவில்லை, வருத்தப்படவும் இல்லை.

ஏனென்றால் பாலத்திற்கு என் பெயர் இருந்தாலும், இல்லா விட்டாலும் அங்கேயிருக்கின்ற மக்கள் இது யார் காலத்தில், யார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, வாக்கு கொடுத்து, கட்டிய பாலம் என்பதை உணர்ந்திருப்பார்கள், ஆகவே அதற்காக நான் கவலைப்படவில்லை, அந்த பாலம் இன்றைக்கும் இருக்கிறது.

இன்றைக்கும் பாதசாரிகளுக்கு- குளித்தலையிலேயிருந்து முசிறி சந்தைக்கு போகின்றவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த பாலங்களைக் கட்ட வேண்டுமென்கிற ஆர்வம் சாதாரண கிராமத் தொகுதி குளித்தலையிலே நின்றபோதே எனக்கு ஏற்பட்டது.

அது தான் இன்றைக்கு சென்னை மாநகரத்திலே கத்திப்பாரா சந்திப்பிலே இவ்வளவு பெரிய மேம்பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அளவிற்கு ஆர்வம் எனக்கு ஏற்பட்டு இந்த ஆர்வத்தை செயல்படுத்தக்கூடிய ஆற்றலாளர் யார் என்று பார்த்து, தம்பி டி.ஆர்.பாலு அவர்களால்தான் அது முடியுமென்ற எண்ணத்தோடு அவரிடத்திலே இது ஒப்படைக்கப்பட்டு அந்த பாலம் இன்றைக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

பாலங்கள் ஒரு நாட்டில் எவ்வளவு முக்கியமானவை என்பது அங்கேயிருக்கின்ற சாலைகளைப் பார்க்கும்போது தான் தெரியும். பல சாலைகள் இணைப்பே இல்லாமல் மக்கள் படுகின்ற அவதியும், பல சாலைகளுக்கு இணைப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் ஒரு ஊரிலேயிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல முடியாமல் படுகின்ற வேதனையும் பாலத்தால் தான் தவிர்க்கப்படுகிறது.

இன்றைக்குக் கூட பாலம் தான் தமிழ்நாட்டிலே பெரிய பிரச்சினை. நம்முடைய பாலு அவர்களுடைய- புராணீகர்களுடைய மொழியிலே சொல்ல வேண்டுமேயானால் -ஜாதகமோ என்னவோ - அவர் எங்கே பாலம் கட்டினாலும் அதிலே ஒரு பிரச்சினை வருகிறது.

பாருங்களேன். சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஒரு பாலம் கட்டுகிறார், அதிலே எவ்வளவு பெரிய பிரச்சினை வந்திருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

பாலு கட்டுகின்ற அந்தப் பாலம் உச்ச நீதிமன்றம் வரையிலே சென்று தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

அந்த பாலம் நாம் நினைத்தபடி சேது சமுத்திரத் திட்டத்திற்கான பாலமாக அமைய வேண்டுமேயானால் பாலத்திற்கு 'கால்' ஒடிய வேண்டும். அதாவது பாலத்திற்கு 'காலை' ஒடித்து பார்த்தீர்களேயானால் பாலம் என்பது 'பலம்' என்று ஆகும்.

அந்த பலத்தை நாமெல்லாம் பெற வேண்டும். அந்த பலத்தைப் பெறுவதற்குத் தான் இங்கே பேசிய நம் தம்பி ஜி.கே.வாசன் அவர்கள் சொன்னார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் செய்துள்ள சாதனைகளை யெல்லாம் எண்ணிப் பார்த்து எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தாருங்கள் என்று கேட்டார்கள்.

அது தான் பாலத்தை பலம் என்று ஆக்குதல். அந்தப் பலத்தை நாம் பெறுவோமேயானால், ஒரு பாலம் அல்ல, சேது சமுத்திரப் பாலம் அல்ல, பல பாலங்கள் நாம் அமைக்க முடியும், அதற்கான வழிவகைகள் உங்களுடைய கையிலே தான் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லி விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.

விழாவுக்கு மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X