For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னி போர் முனையில்... 5 நாளில் 1000 வீரர்களை கொன்ற புலிகள்!

By Sridhar L
Google Oneindia Tamil News

வன்னி: பிப்ரவரி 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள பதிலடித் தாக்குதலில் 1000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான ராணுவத்தினர் படுகாயங்களுடன் கொழும்பு, வவுனியா மற்றும் பொலன்னருவ மருத்துவமனைகளில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து தகவல்கள் வருகின்றன.

இச் செய்தி கிடைத்த பிறகே ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கொழும்பு ராணவத் தலைமையகத்தில், போர் குறித்து நிஜ தகவல்கள் வேண்டி முற்றுகையிட்டுள்ளனர்.

இலங்கையின் வடபகுதி போர் முனையில் நடப்புது என்ன? என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களே கிடைத்து வருகின்றன. போர்க் களத்திலிருந்து ஏறத்தாழ அனைத்துப் பத்திரிகையாளர்களுமே ராணுவத்தால் வெளியேற்றப்பட்டுவிட்டனர். புலிகள் அல்லது ராணுவம் அளிக்கும் அறிக்கைகள்தான் இப்போதைக்கு செய்திகளாகின்றன.

முன்பெல்லாம் போரில் தங்களுக்குக் கிடைத்த வெற்றிகள் குறித்து உடனுக்குடன் அறிக்கைகளை அளித்து வந்தனர் விடுதலைப் புலிகள். இப்போது அந்த நிலையில் தலைகீழ் மாற்றம் தெரிகிறது. இப்போது புலிகள் தங்களது இழப்புகள் மட்டுமல்ல, வெற்றிகளையும் கூட செய்திகளாக்குவதை முழுமையாகத் தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக கல்மடுக்குள அணை உடைப்பு, அதனால் இலங்கை ராணுவத்துக்கும் அவர்களோடு களத்தில் இருந்து பிறநாட்டு ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட பெரிய இழப்புகள் குறித்து புலிகள் எந்த அறிக்கையும் தரவில்லை. பின்னர் தாமதமாகவே அந்தச் செய்திகள் ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டதாக இலங்கை பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு எப்போதும் பார்த்திராத புதிய நிலை இது.

தாங்கள் போரில் பெற்ற வெற்றிகளை மட்டுமே பெரிய அளவில் அறிக்கைகளாகத் தந்துவரும் ராணுவம், 98 சதவீத புலிகளின் நிலப்பரப்பு பிடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் மற்றும் அந்தத் தாக்குதல் நடத்திய படையணிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிற்பது போன்ற படங்களை புலிகள் ஆதரவுப் பத்திரிகையும் அதன் இணைய தளமும் நேற்று வெளியிட்டுள்ளது.

1000 ராணுவ வீரர்கள் பலி!!:

புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் இந்த செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின் பயங்கர பிரிவாகக் கருதப்படும் கரும் புலிகள் 3 ட்ரக்குகளில் வெடி மருந்துகளை நிரப்பி, ராணுவத்தினர் மீது மோதவிட்டு தாக்கியதில் பலத்த இழப்பை ராணுவத்தினர் சந்தித்துள்ளனர். பிப்ரவரி 3ம் தேதி கேப்பாப்புலவு என்னும் இடத்தில் கரும் புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தின் அந்தப் பகுதி படையணியே முற்றாக அழிக்கப்பட்டதாகவும், அந்த அணி வைத்திருந்த போர்த் தளவாட சப்ளை வாகனங்கள் 20, டாங்கிகள், மற்றும் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைப் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவற்றைத் தவிர பெரும் ஆயுதப் புதையலையே புலிகள் ராணுவத்திடமிருந்து பிடித்துவிட்டதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் இருவர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சாளை நகரை முழுவதுமாகப் பிடித்துவிட்டதாக ராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் புலிகள் நிறுத்தி வைத்திருந்த கப்பல்கள், படகுகள், ஏராளமான டாங்கிகளைக் காணவில்லை என வன்னிப் பகுதியிலிருந்து இன்னும் வெளியேறாமல் உள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனப் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். மேலும் சாளைப் பகுதியில் இன்னும் சண்டை தொடர்வதாகவும், புலிகளின் தரப்பிலிருந்து கடுமையான பதிலடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தின் போது கிளிநொச்சியில் ராஜபக்சே கொடியேற்றுவார் என்றும், அதற்கு ஏற்ப முன்கூட்டியே புலிகள் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்று ராணுவம் உறுதியாகத் தெரிவித்திருந்தது. இன்னொரு பக்கம் வன்னிப் பகுதியில் புலிகள் தலைவர்கள் யாரும் இல்லை என்றும், 1000க்கும் குறைவான புலிகளே அங்கு மக்களுடன் பதுங்கியிருப்பதாகவும் ராணுவத் தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டிருந்தது. இதை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உறுதிப்படுத்தினார்.

இந் நிலையில் புலிகளிடமிருந்து மீதியுள்ள பகுதிகளை பிப்ரவரி இறுதிக்குள் பிடித்துவிடுவோம் என தெரிவித்துள்ளது ராணுவம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X