For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக-சிபிஎம் சிக்கல்: திருப்பூர், மதுரையால் பிரச்சனை

By Sridhar L
Google Oneindia Tamil News

Prakash Karat with Jayalalitha
சென்னை: தொகுதி உடன்பாடு தொடர்பாக அதிமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிக்கும் இடையே உரசல் நீடித்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிபிஎம் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்த பிறகும் சிக்கல் தீரவில்லை.

திருப்பூர், மதுரை தொகுதிகள் விஷயத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

போட்டி போட்ட காம்ரேடுகள்...

வழக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் கூட்டகாவே கூட்டணி குறித்துப் பேசும். சில நேரங்களில் தனித்தனியே பேசுவதும் உண்டு.

அப்படி கூட்டணி பேசுகையில் ஒரு கட்சி கோரும் தொகுதியை இன்னொரு கட்சி கோருவதில்லை என்பது இரு தரப்பினருக்கும் இடையிலான எழுதப்படாத விதி.

ஆனால், இம்முறை ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுட், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே ஒற்றுமை இல்லை. இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பேச்சுவார்த்தையை துவக்கியவுடனேயே தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலைத் தந்தன.

ஜெயலலிதாவுக்கே அதிர்ச்சி...

இதைப் பார்த்த ஜெயலலிதாவுக்கே அதிர்ச்சி. காரணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்ட தொகுதிகளையே இந்திய கம்யூனிஸ்டும் கேட்டது தான். இதையடுத்து நீ்ங்களே உங்களுக்குள் பேசி யாருக்கு எந்தத் தொகுதி என்பதை முடிவு செய்துவிட்டு வாருங்கள் என்றார்.

ஆனால், இரு கட்சிகளும் தாங்கள் கோரிய தொகுதிகளிலேயே விடாப்பிடியாக இருந்தன. இந் நிலையில் 3 தொகுதிகளுக்கு ஓ.கே சொன்ன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தான் கேட்ட வட சென்னை, நாகப்பட்டனம், தென்காசி தொகுதிகளை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

இதி்ல் வட சென்னையும் நாகப்பட்டனமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்ட தொகுதிகள் ஆகும். ஆனால், இடதுசாரிகளிலேயே முதல் ஆளாக தன்னை சந்தித்து கூட்டணி பேச்சு நடத்திய தா.பாண்டியனுக்கு பரிசு தருவது போல அவர் கேட்ட தொகுதிகளை ஒதுக்கிவிட்டார் ஜெயலலிதா.

இது மார்க்சிஸ்ட்டுக்கு அதிர்ச்சி...

இது மார்க்சிஸ்ட் தரப்புக்கு பெரும் அதிர்ச்சி தந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் விட நாங்கள் தான் பெரிய கட்சி, எனவே ஒரு தொகுதி கூடுதலாகவாவது கொடுங்கள் என அடுத்த கண்டிசனுடன் பேச வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

ஆனால், அவர்களிடம் தமிழகத்தில் உங்கள் பலத்தை யோசித்துப் பாருங்கள். திமுக கடந்த முறை 2 தொகுதி தந்ததை ஏற்றீர்கள். நான் 3 தொகுதிகள் ஒதுக்குகிறேன். சம்மதம் தெரிவித்து உடன்பாட்டில் கையெழுத்து போடுங்கள் என்று கூறிவிட்டார் ஜெயலலிதா.

இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இழுத்துக் கொண்டே போய்க் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிக்கலைத் தீர்க்க நேற்று சென்னை வந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்.

தீராத சிக்கல்...

நிருபர்களிடம் பேசிய அவர், தொகுதி உடன்பாடு எல்லாம் மாநில நிர்வாகிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடைப்பட்ட விஷயம், நான் அது குறித்துப் பேச வரவில்லை என்றார்.

ஆனாலும் ஜெயலலிதாவுடன் அவர் தொகுதி உடன்பாடு சிக்கல் குறித்துப் பேசவே வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசிய அவராலும் சிக்கலை தீர்க்க முடியவில்லை.

''தொடருகிறது, தொடருகிறது, தொடருகிறது''...

இதையடுத்து வெளியில் வந்து காரத், தேசிய அரசியல் நிலைமை பற்றி பேசியதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

அவர் போன பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவருடன் நிர்வாகிகள் ரெங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அவர்கள் ஜெயலலிதாவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இந்தப் பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நடந்தது. ஆனாலும் சிக்கல் தீரவில்லை.

களைத்துப் போய் வெளியில் வந்த வரதராஜனிடம் நிருபர்கள் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதா என்று கேட்டதற்கு, பேச்சுவார்த்தை தொடருகிறது, தொடருகிறது, தொடருகிறது என்று மூன்று முறை கூறிவிட்டுச் சென்றார்.

தொகுதி உடன்பாடு ஏன் காலதாமதம் ஆகிறது என்று நிருபர்கள் கேட்தற்கு, அவர் சொல்லாமல் சென்று விட்டார்.

திருப்பூரை தர முடியாதே...

இதற்கிடையே, ஜெயலலிதா சொன்னபடி 3 தொகுதிகளை ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாராகிவிட்டதாகவும் ஆனால் அவை எந்தெந்த தொகுதிகள் என்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கேட்பதாகவும், ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆரம்பத்திலேயே அந்தத் தொகுதியை கேட்டுவிட்டதால் அதைத் தர முடியாது என ஜெயலலிதா கூறுவதாகவும் தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரும் மற்ற தொகுதிகள் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் ஆகியவை ஆகும். ஆனால், திருப்பூரைத் தர முடியாது என்று கூறிவிட்ட ஜெயலலிதா மதுரையைத் தரவும் யோசிப்பதாகத் தெரிகிறது.

விழுப்புரம், நீலகிரி வேணுமா?...

கன்னியாகுமரி, திண்டுக்கல் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு டிக் செய்துள்ள ஜெயலலிதா மூன்றாவதாக விழுப்புரம் அல்லது நீலகிரியை தொகுதியை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

மதுரையில் திமுக சார்பில் அழகிரி நிற்கலாம் என்று கருதப்படுவதால் அவரை சமாளிக்க அதிமுகவே நேரடியாக களமிறங்குவதே நல்லது என்று சிபிஎம் தலைவர்களிடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால், கடந்த 4 தேர்தல்களில் அங்கு நாங்கள் வென்றுள்ளோம் என்று கூறி மதுரையை விட்டுத் தர காம்ரேடுகள் தயங்குகின்றனர். மேலும் அழகிரியை திமுக நிறுத்தாது.. மதுரையை வைத்து நமக்குள் தொகுதி சிக்கல் வலுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அழகிரியை நிறுத்தப் போவது போல திமுக பாவ்லா காட்டுகிறது என்றும் காம்ரேடுகள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் இன்று மீண்டும் இரு தரப்பும் பேச்சு நடத்தவுள்ளன. அதில் தீர்வு எட்டப்பட்டலாம் என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X