For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை''...!

By Staff
Google Oneindia Tamil News

Stalin with Karunanidhi
சென்னை: எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திருக்குறளால் வாழ்த்திய சபாநாயகர்...

இன்று காலை சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஆவுடையப்பன் வழக்கம் போல் திருக்குறளை வாசித்தார். இன்று ''மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல்'' என்ற குறளை வாசித்து அதற்கான விளக்கம் அளித்தார்.

''மகன் தந்தைக்கு செய்யக்கூடிய உதவியானது, இவருடைய தந்தை இவரைப்பெற என்ன தவம் செய்தாரோ'' என்ற அளவுக்கு இருக்க வேண்டும் என சபாநாயகர் விளக்கம் தர திமுக எம்எல்ஏக்கள் அதன் 'அர்த்தத்தை' புரிந்து கொண்டு மேஜைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

'மாப்பிள்ளை' இளையவராகத்தான் இருக்கனும்...

அடுத்துப் பேசிய நிதியமைச்சர் அன்பழகன், முதல்வர் கருணாநிதி துணை முதல்வராக மு.க. ஸ்டாலினை நியமனம் செய்ததை நீங்கள் வரவேற்கிறீர்கள். கருணாநிதி தனது உடல் நிலையை கருதி அதிக ஓய்வு எடுக்க வேண்டும், சுற்றுப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் தனது கடமைகள், பொறுப்புகளை நிறைவேற்ற துணை முதல்வரை நியமிக்க விரும்பிய நேரத்தில் நீண்ட நாள் நண்பரான என்னையும், பல அமைச்சர்களையும் அழைத்துப் பேசி எடுத்த ஒருமித்த கருத்துப்படி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பை அளித்தார்.

இந்தப் பொறுப்புக்கு ஸ்டாலின் ரொம்பவும் தகுதியானவர். தொண்டு, தியாகம் நிறைந்தவர். மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் சிறப்பாக பணிபுரிந்தார். 20 வயது முதலே சிறைச்சாலை சென்று தியாகங்கள் செய்து இயக்கப் பணியாற்றி வருபவர்ர். பொறுமையும், பொறுப்பும், அறிவும், ஆற்றலும் உடையவர். சிறந்த முறையில் நிறைவாக அவர் பணியாற்ற வேண்டும்.

86ன் கீழ் (முதல்வர் கருணாநிதியின் கீழ்) 87 வயதான நான் இருக்கிறேன். என்னை விட மு.க.ஸ்டாலின் இந்த பொறுப்புக்கு தகுதியானவர். மாப்பிள்ளை இளையவராகத்தான் இருக்க வேண்டும். மு.க. ஸ்டாலினுக்கு 57 வயதாகிறது. மணிவிழா காணும் வயது. அவருக்கும் சிறந்த அனுபவம் இருக்கிறது. அவரை வாழ்த்துகிறேன் என்றார்.

கருணாநிதியோடு ஒப்பிடுவார்கள்.. பீட்டர்:

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கடந்த முறை சட்டசபை நடைபெறும்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த
ஸ்டாலின் இப்போது துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பு என்பது கடமை. வெறும் பதவி அல்ல. ஸ்டாலின் கால் நூற்றாண்டு அனுபவம் உள்ளவர். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றவர். சென்னையின் மேயராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பெரும் தலைவர்களின் வாரிசாக வருபவர்களுக்கு பெருமை கிடைக்கலாம். ஆனால் தகுதியை தருமா?, என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். கருணாநிதி 70 ஆண்டுகளாக அரசியல் அனுபவம் பெற்றவர். அவரது வாரிசாக வருவது பெருமை என்பதை விட சவாலாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு செயலுக்கும் கருணாநிதியை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அந்த பெருமையை இவர் நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தற்போது இளம் தலைமுறையினருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் துணை முதல்வரும் பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் துணையாக இருக்கும் என்றார்.

'அதிமுக சார்பில்' அல்ல 'அதிமுக உறுப்பினர்'..

இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதல்வராக முதல்வர் கருணாநிதி என்னை நியமித்திருக்கிறார். அதற்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ், அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவித்த எஸ்.வி. சேகர்.... (அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்).

இதையடுத்து தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 'அதிமுக சார்பில்' என்பதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். 'அதிமுக உறுப்பினர்' எஸ்.வி. சேகர் வாழ்த்தினார். அனைவருக்கும் நன்றி.

இங்கு வாழ்த்த முடியாத 'சிலர்'...

சிலர் இங்கு வாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கும் நன்றி.

கட்சியினரிடம் முதல்வர் எப்போதும் பதவியை பதவியாக நினைக்க கூடாது. பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும் என்பார். அவர் சொல்லிக் கொடுத்த பாடத்தின்படி பொறுப்பாக கருதி பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக எப்படி நான் பணியாற்றினேனோ, அப்படியே துணை முதல்வர் பொறுப்பிலும் பணியாற்றுவேன்.

பாகுபாடு பார்க்க மாட்டேன்..

முதல்வர் உடல் நலிவுற்ற வேலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து இடைவிடாமல் உழைத்து வருகிறார். அதை மனதில் கொண்டு உழைப்பேன். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறுபாடு காட்டாமல் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உறுதுணையாக இருப்பேன்.

முதல்வருக்கும் உங்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவேன். உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவனாக என்னை உருவாக்கி கொள்வேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X