For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்க் கட்சிகளை என்றும் மதிக்கும் திமுக-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பண்பாட்டை என்றுமே திமுக மதிக்கத்தவறியது இல்லை. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய மரியாதையை திமுக தருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் செல்வேந்திரன்- ராஜராஜேஸ்வரி ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

கேரள சட்டமன்ற சபாநாயகர் ராதாகிருஷ்ணன், ஆந்திர மேலவை சபாநாயகர் சக்கரபாணி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சட்டசபைத் தலைவர் சிவபுண்ணியம். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் வரதராஜன் பேசுகையில்,

சபாநாயகர் பதவி ஒரு பொதுவான பதவி. அவருடைய இல்ல திருமண விழாவில் நாங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அரசியல் அதிகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பொதுவான முறையாகும்.

அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். பொது நிகழ்ச்சிகளில் அந்த வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தமிழ் கலாச்சாரம் என்று நாம் உரத்த குரலில் பேசி வருகிறோம். அது என்ன என்பதை நாம் செயலிலும் பின்பற்ற வேண்டும். அரசியல் வேறுபாடுகளை மறந்து சர்வகட்சியினரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசியல் பண்பாடு தமிழகத்தில் வளர வேண்டும். இதில் திமுகவும் தன் பங்கை ஆற்ற வேண்டும் என்றார்.

சிவபுண்ணியம் பேசுகையில், அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் நட்பு முறையில் நாங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்தத் திருமணத்திற்கு வருவோமா என்று சிலருக்கு சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு பங்கேற்பது தான் சரியான பண்பாடு என்றார்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி,

திமுக தொண்டர்களுக்கு பதவியை விட கட்சிப் பொறுப்புதான் பெரிது. இதை நிரூபிக்கும் வகையில் சபாநாயகர் என்று நான் ஆவுடையப்பனை அழைத்தபோது எழுந்த ஆரவாரத்தை விட அவர் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்று சொன்னபோதுதான் அதிக ஆரவாரம் எழுந்தது.

ஒருவர் வகிக்கும் பதவியை விட அவர் தொண்டராக இருந்து மக்களுக்கு செய்யும் பணிதான் பெரிது. மக்களுக்காக உழைக்கின்ற உழைப்பும் தொண்டும்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் இங்கு பேசும்போது, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுவாக பின்பற்ற வேண்டிய பண்பாடு, நாகரீகம் பற்றி கூறினார். திமுகவும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

திமுக என்றுமே எல்லா கட்சிகளையும் மதிக்கும் கட்சி என்பது வரதராஜனுக்கு தெரியும். அதை யார் கடைபிடிக்கவில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

தமிழ்நாட்டில் 2 பெரிய கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் உள்ளன. 1996ல் இருந்தே திமுக எந்த அளவுக்கு மாற்றுக் கட்சிகளை மதிக்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறலாம்.

2001ல் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். அதிமுக ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்தபோது பதவியேற்பு விழாவுக்கு எங்களுக்கும் அழைப்பு வந்தது.

அதை மதித்து திமுக சார்பில் பொதுச்செயலாளர் அன்பழகனும், அப்போது மேயராக இருந்த மு.க. ஸ்டாலினும் விழாவுக்கு செல்ல முடிவு செய்தோம். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது.

அந்த விழாவுக்கு சென்ற அன்பழகனுக்கு 17வது வரிசையில் ஒரு இருக்கையும், மு.க.ஸ்டாலினுக்கு அதற்கு அடுத்த வரிசையில் ஒரு இருக்கையும் கொடுக்கப்பட்டது. வரவேற்க யாரும் இல்லை.

இதையெல்லாம் அறிந்தபோது, இது போன்ற விழாக்களுக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. திமுக எப்போதுமே அனைத்துக் கட்சிகளையும் மதித்து வருகிறது.

இது போன்ற வீட்டு திருமண விழா மட்டுமல்ல, அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு கூட திமுக மதிப்பு அளிக்கிறது.
அது போன்ற சர்வ கட்சி கூட்டங்களுக்கு அழைக்கும்போது வரதராஜன் வருகிறார், சிவபுண்ணியம் வருகிறார். ஆனால் யார் வரவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

வராதது மட்டுமல்ல, அந்தக் கூட்டங்களையே 'கபட நாடகம்' என்று கூட கூறுகிறார்கள். வெள்ளம், மக்கள் பிரச்சனை, இலங்கை பிரச்சினை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு கூட அனுப்பிய அழைப்பை அவர்கள் புறக்கணித்து விட்டு கபட நாடகம் என்று அறிக்கையும் விடுகிறார்கள்.

திருமண விழாவில் அரசியல் பேசக்கூடாது. என்றாலும் வரதராஜன் திமுக என்று குறிப்பிட்டு சொன்னதால், நான் பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது.

பண்பாட்டை என்றுமே திமுக மதிக்கத்தவறியது இல்லை. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய மரியாதையை திமுக தருகிறது.

ஆவுடையப்பன் பேரவைத் தலைவர் என்கிற பொறுப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். இந்த அளவுக்கு அவர் பெற்ற உயர்வால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X