For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோரள அணை-பொதுவுடைமை கட்சி போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசுக்கு புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் போராட்டம் நடக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

தமிழகத்தின் சட்டப்படியான உரிமையை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பறிப்பதாகும். இந்திய அரசின் இச்செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இப்பொழுதுள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. முதற்கட்டமாக 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு உடைக்கப்படுகிறது...

சிற்றணையில் வலுப்படுத்தும் பணிகள் சிலவற்றைச் செய்தபின் முழு அளவான 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு முரட்டுத்தனமாக மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த இந்திய அரசு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை.

இப்பொழுதுள்ள அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்குத் தடை கோரித் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கேரள அரசு முல்லை பெரியாற்றில் புதிய அணைகட்ட வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ஆட்சியாளர்களே இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உடைப்பதாக உள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நடுவண் அரசின் முக்கியத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர், ஈழத்தமிழர் உள்ளிட்ட எல்லாச் சிக்கல்களிலும் இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பதைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

இந்தியாவுக்குள் உள்ள ஒரு மாநில மக்களை எதிரிகள் போல் இந்திய ஆட்சியாளர்களும், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முல்லை பெரியாறு உரிமையை பறிக்கும் சூழ்ச்சி...

செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைகட்டுவது என்பது, முற்றிலுமாக முல்லைப்பெரியாறு உரிமையைத் தமிழகத்திற்கு இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சித் திட்டம் தவிர வேறு அல்ல.

வெள்ளையர் ஆட்சியில் 999 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் தமிழகத்திற்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்காகவே புதிய அணை என்று கேரள அரசு வலை விரிக்கிறது.

பழைய அணையை இடித்தபின், 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பழைய அணைக்குத்தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரள அரசு கைவிரித்துவிடும். புதிய அணையும் உடனடியாகக் கட்டாது.

வைகை அணை வரண்டு போகும்...

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குப் பாசன நீர் இல்லாமல் போகும் குடிநீரே இல்லாமல் போகும். தண்ணீர் வரத்தின்றி வைகை அணை முற்றிலும் வற்றி விடும்.

எனவே இந்திய அரசு உடனடியாக, கேரளத்திற்குக் கொடுத்துள்ள ஒப்புதலை இரத்துச்செய்து, செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்க ஆணை இடவேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாற்றில் இப்பொழுதுள்ள அணையை இடிக்க வகை செய்யும் சூழ்ச்சித்திட்டமான புதிய அணைகட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இந்திய அரசை எதிர்த்து மதுரையில் வரும் 30.09.2009 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X