For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஸ்டார் ஹெல்த்துக்கு ரூ. 540 கோடி- கருணாநிதி குடும்பத்துக்கு பங்கு உண்டா?'

Google Oneindia Tamil News

சென்னை: ஏழை மக்களுக்கான கலைஞர் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமலாக்கும் பொறுப்பை தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு வழங்கி, அவர்களுக்கு ரூ.540 கோடி தரப்பட்டதி்ல் கருணாநிதியின் குடும்பத்துக்கு பங்கு உண்டா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

பாஜக மாநில மீனவர் அணியைச் சேர்ந்த 500 பேர், அந்தக் கட்சியில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று விஜய்காந்த் பேசுகையில்,

முன்பெல்லாம் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் உள்ளவர்கள் மாறி மாறி இணைந்து கொள்வார்கள். ஆனால், இப்போது அந்த கட்சிக்காரர்கள் தேமுதிகவில் இருந்து யாராவது வந்து இணைய மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு எங்கள் கட்சி வளர்ந்துள்ளது.

இலவச கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 59 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாகவும் 5,817 பேர் பயனடைந்துள்ளதாகவும், அவர்களது மருத்துவ செலவுக்காக ரூ.23.21 கோடி செவிடப்பட்டுள்ளதாகவும் விளம்பரம் செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

இந்த கணக்குப்படி ஆண்டுக்கு ரூ.100 கோடிதான் செலவழிக்க முடியும். அப்படி இருக்கையில் ரூ.540 கோடி மக்கள் வரிப் பணத்தை ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு வழங்கியதன் அவசியம் என்ன?. இதில் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.100 கோடி செலவில் தேவையான உபகரணங்களை அரசு வழங்கினாலே இதை விட சிறப்பான மருத்துவத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்க முடியும் என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.

தொலைத் தொடர்புத் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ, அந்த துறையின் அமைச்சர் ராசா அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

தனது துறையில் சிபிஐ ரெய்ட் வந்தவுடனேயே அமைச்சர் ராசா ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. அவர் இன்னமும் அமைச்சர் பதவியில் இருப்பது அழகல்ல. உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் முதல்வர் கருணாநிதி அவரது பத்திரிகையில் கருத்து எதையும் கூறவில்லையே, ஏன்?.

முன்னுக்கு பின் முரணாகவே பேசுவதும் செயல்படுவதும் முதல்வர் கருணாநிதிக்கு கை வந்த கலை. முதலில்
9வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப் போவதாக முதலில் கருணாநிதி சொன்னார். இப்போது, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்கிறார்.

காவிரி பிரச்சனையை 1972ம் ஆண்டிலேயே தீர்த்திருக்க முடியும். ஆனால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னார் என்பதற்காக அந்த விவகாரத்தையே கைவிட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அதன் பிறகு 1974ல் இந்திரா காந்தி கூறிவிட்டார் என்பதற்காக கச்சத் தீவை தாரை வார்க்கச் செய்தார்.

இப்படியே தனது பதவி மற்றும் தனது வாரிசுகளின் பதவிக்காக மத்திய அரசுக்கு அடிபணிந்து நடக்கும் கருணாநிதி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கண்டித்து மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் என்று முதலில் அறிவித்தார்.

ஆனால், இப்போது மத்திய அரசின் நெருக்கடியாலும் பதவி சுகத்துக்காகவும் கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று தனது போராட்டத்தை டாபிக்கையே மாற்றிவிட்டார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து டெல்லி சென்று நான் போராட்டம் நடத்தியதை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தொப்பி போட்டு போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் பிரதமரை பார்க்க முடியுமா?. அவருடைய படத்தை பத்திரிகையில்தான் பார்க்க முடியும் என்று கிண்டலடித்தார்.

நான் எனது கட்சிக்கு தலைவர். ஆனால் தங்கபாலுவோ தனக்கு பதவி இருக்கிறதா, இல்லையா என்று தினமும் பத்திரிகை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர். அவர் என்னைப் பற்றி பேசக் கூடாது.

முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து பகத் சிங்கா, சுபாஷ் சந்திரபோசா என்று கேட்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்தபோது பகத் சிங்காக இருந்தாரா? அல்லது சுபாஷ் சந்திர போசாக இருந்தாரா?
அவர் இதுவரை நம் கட்சியை தேமுதிக என்று சொன்னதே கிடையாது.

தேமுதிகவில் இன்று இணைந்துள்ள நீங்கள் பிரசார பீரங்கியாக செயல்பட வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால்தான் முடியும். அதுபோல, எனக்கு நீங்கள் கைகொடுத்தால்தான் நல்லாட்சி தர முடியும். உங்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துத்தர என்னால் முடியும். தமிழ்நாட்டில் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X