For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்-விஎச்பி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அயோத்தியில் ராமர் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் வி.எச்.டி.வி என்ற வெப் டிவி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டூடியோ சென்னை தியாகராய நகர் ராமானுஜம் தெருவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவில் விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக தலைவர் அசோக் சிங்கால், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி, விசுவ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சிங்கால் பேசுகையில்,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடமாக கூறப்படும் இடம் மசூதியே அல்ல. இங்கு 1934ம் ஆண்டில் இருந்தே தொழுகை எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து தொழுகை நடைபெறவில்லை என்றால் அது மசூதியாக கருதப்படாது. இந்த சர்ச்சைக்குரிய இடம் இந்து கோவிலாக இருந்து இருக்கிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது.

இது தொடர்பான வழக்கு 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் பைசாபாத் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த தீர்ப்புக்காக கரசேவகர்கள் காத்திருந்தனர். தீர்ப்பு வராததால் அங்கு ஏற்கனவே கூடியிருந்த கரசேவர்கள் கட்டிடத்தை தள்ளி விட்டு விட்டனர். இதில் லிபரான் கமிஷன் கூறுவது போல் எந்த சதியும் நடக்கவில்லை.

இந்து தர்மத்தின்படி நாங்கள் எந்த மத வழிப்பாட்டு தலங்களையும் இடிக்க மாட்டோம். ஆனால் கடந்த காலங்களில் 30,000 இந்து வழிப்பாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன. தற்போது சர்ச்சைக்குரிய இடங்களாக கருதப்படும் இடங்களில் இந்து கோவில்கள் உருவாக வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அயோத்தி, காசி, மதுரா உள்ளிட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் கோவில்கள் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இடித்ததற்காக வருந்தவில்லை-ஆர்.எஸ்.எஸ்.

இதற்கிடையே, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக தாங்கள் வருத்தப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் எந்த சதியும் கிடையாது. கரசேவகர்களின் தன்னிச்சையான, கட்டுப்படுத்த முடியாத விளைவே அதற்கு காரணம். அவர்களுடைய உணர்வுகளும் மன எழுச்சிகளும் புண்படுத்தப்பட்டன. ராமர் கோவில் கட்டுவது தொடர்பான இயக்கம் குறித்து என்னென்ன நடந்தன என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏராளமான முஸ்லிம்கள் உட்பட, கர சேவகர்களை பலரும் பல வழிகளில் புண்படுத்தினர். எனவே, பாபர் மசூதி இடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.

யார் வருத்தம் தெரிவிக்க வேண்டுமோ, அவர்கள் தெரிவிக்கட்டும். கர சேவகர்களில், பாஜகவைச் சேர்ந்த சில முஸ்லிம் தலைவர்களும் இருந்தனர் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

ராமர் கோவில் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஆதரவு அளிக்கிறது. கடந்த காலத்தை போலவே, தன்னுடைய ஆதரவை தொடர்ந்து வழங்கும். அரசு ஆதரவிலோ அல்லது கோர்ட்டு உத்தரவினாலோ அல்லது அனைத்து மக்களின் மனமாற்றத்தாலோ ராமர் கோவில் கட்டப்படலாம். ராமர் கோவிலை கட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு பிற சமுதாயத்தினரிடமும் ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எந்த மதத்தினரிடமும் நாங்கள் விரோதம் பாராட்டவில்லை. எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது.

பாஜகவை நாங்கள் இயக்கவில்லை. அது ஒரு தன்னிச்சையான அரசியல் அமைப்பு. மேலும் அந்த கட்சியின் விவகாரங்களையும் கவனிக்கும் அளவுக்கு எங்களுக்கு போதிய நேரம் கிடையாது. எனினும், மிகவும் முக்கியமான விஷயங்களில் எங்களுடைய உதவியை பாஜக கேட்கும்போது அது தொடர்பாக விளக்கம் அளிப்போம்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கையானது தவறுகளாலும், உண்மை சம்பவத்துக்கு முரணான தகவல்களாலும் நிரம்பிய தொகுப்பாக உள்ளது
என்றார்.

மத கலவர தடுப்பு மசோதா-பாஜக எதிர்ப்பு:

இந் நிலையில், மத‌க் கல​வ​ர‌ங்​களைத் தடு‌ப்​ப​த‌ற்​ககாக கொண்டு வரப்படவுள்ள சட்ட மசோதாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல். இது அரசியமைப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று பாஜகவின் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ச‌ட்​ட‌ம்,​ ஒழு‌ங்கு என்பது மாநில அரசின் விவகாரம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எப்படி சட்டம் இயற்ற முடியும் என்றார்.

இந்த சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் இது தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த சட்டத்தின் படி ஒரு இடத்தில் மதக் கலவரம் மூண்டால் அது மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநில அரசின் அனுமதியைக் கூட பெறாமல் மத்திய அரசு அங்கு படைகளை அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X