For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா-6 யோசனைகளை சொல்லி குழப்பும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி!

Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானா விவகாரத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

ஆனால், அந்த அறிக்கையில் எந்த உறுதியான தீர்வும் கூறப்படவில்லை.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலாமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 மாதம் ஆய்வு நடத்தி 800 பக்க அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த 30ம் தேதி தாக்கல் செய்தது.

அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆந்திரா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்திய பின்னர் இன்று அந்த அறிக்கை விவரம் வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பரிந்துரை 1: ஆந்திராவை பிரிக்காமல் ஐக்கிய ஆந்திராவாக தொடர்ந்து நீடிக்க வைக்கலாம். அதில் தெலுங்கானாவைச் சேர்ந்தவரை முதல்வர் அல்லது துணை முதல்வராக்கலாம்.

பரிந்துரை 2: ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இதில் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திர மாநிலங்கள் இருக்கலாம். ஹைதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்கிவிடலாம். இரு தனி மாநிலங்களுக்கும் தங்களுக்கென தனி தலைநகர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

பரிந்துரை 3: ஆந்திராவின் ராயலசீமா பகுதி மற்றும் தெலுங்கானாவை இணைத்து ராயல-தெலுங்கானாவை உருவாக்கலாம். கடலோர ஆந்திராவை தனி மாநிலமாக்கலாம்.
ஹைதராபாத்தை ராயல-தெலுங்கானா பகுதியோடு இணைக்கலாம்.

பரிந்துரை 4: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரித்துவிட்டு, ஹைதராபாத்தை மேலும் விரிவாக்கலாம். ஹைதராபாத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவின் மேலும் பல பகுதிகளை இணைத்து அதை தனி யூனியன் பிரதேசமாக்கலாம்.

பரிந்துரை 5: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரித்து அதில் ஹைதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக்கலாம். ஆந்திராவுக்கு தனி தலைநகரை உருவாக்கலாம்.

பரிந்துரை 6: ஆந்திராவை பிரிக்காமல் தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு தனி கவுன்சிலை உருவாக்கலாம்.

இவ்வாறு 6 பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி முன் வைத்துள்ளது.

இந் நிலையில் இந்த அறிக்கை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது.
இக் கூட்டத்தில் பங்கேற்க ஆந்திர மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் தெலுங்கான ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், பாஜக ஆகியவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆளும் காங்கிரஸ், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம், மஜ்லிஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் ஆகிய 5 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன.

காங்கிரஸ் சார்பில் ராயல்சீமாவைச் சேர்ந்த ஒருவரும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் கூட்டத்தில் பங்கேற்று இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் 'டபுள்-ஆக்ட்டை' வெளிப்படையாகவே வெளிப்படுத்தினர்.

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் ப.சிதம்பரம் 2 பக்க கடிதம் ஒன்றை அனைத்து கட்சி தலைவர்களிடமும் வழங்கினார்.

பின்னர் சிதம்பரம் பேசுகையில், தெலுங்கானா பிரச்சனைக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெளிவான தீர்வை சொல்லியிருக்கிறது. இதன் அடிப்படையில் உரிய முடிவெடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் எந்த பாகுபாடும் காட்டாமல், பிரச்சனைகளை ஏற்படுத்தாமல், திறந்த மனதுடன் சுமூக முடிவு காண உதவ வேண்டும்.

இக் கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காதது வேததனை அளிக்கிறது. இப்போது அறிக்கை நகலை உங்களிடம் கொடுக்கிறோம். இதை படித்து பாருங்கள். இந்த மாத இறுதியில் மீண்டும் ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் அதில் அடுத்த முடிவுகளை எடுக்கலாம் என்றார்.

தொடர்ந்து போராடுவோம்-ராவ்:

முன்னதாக ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறுகையில்,

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை கால தாமதப்படுத்தத்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்த அறிக்கை விவரத்தை வெளியிடுவதை கூட இழுத்தடிக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்த வரையில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி கவலை இல்லை. இன்னும் 20 நாளில் தெலுங்கானா தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களை ஸ்தம்பிக்க செய்வோம்.

காங்கிரஸ் தலைவர் சோனியா மனது வைத்தால் தனி மாநிலம் கிடைத்து விடும். அவர் தெலுங்கானா தர ஒப்புக்கொண்டால் அவரது பாதத்திற்கு பாலாபிஷேகம் செய்யத் தயார் என்றார்.

தற்போது ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் 6 பரிந்துரைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் தொண்டர்கள் மத்தியில் பேசவுள்ளார் ராவ் என்று அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது போராட்டத்தை தொடருவது குறித்த அறிவிப்பை சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என்று தெரிகிறது. மீண்டும் ஒரு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் குதிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

ஆனால் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தவிர வேறு எந்த தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியும் தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி, எம்.எல்.ஏக்கள், தலைவர்களும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையின் முழு விபரம்

English summary
Five member Telangana panel gives out 6 options.1. Maintaining status quo, 2. Bifurcation of the State into Seemandhra and Telangana with Hyderabad as a Union Territory and the two States developing their own capitals in due course, 3. Bifurcation of State into Rayala-Telangana and coastal Andhra regions with Hyderabad being an integral part of Rayala-Telangana, 4. Bifurcation of Andhra Pradesh into Seemandhra and Telangana with enlarged Hyderabad Metropolis as a separate Union Territory, 5. Bifurcation of the State into Telangana and Seemandhra as per existing boundaries with Hyderabad as the capital of Telangana and Seemandhra to have a new capital, 6. Keeping the State united by simultaneously providing certain definite Constitutional/Statutory measures for socio-economic development and political empowerment of Telangana region and creation of a statutorily empowered Telangana Regional Council.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X