For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

80..53.. இழுபறியில் திமுக-காங் கூட்டணிப் பேச்சு!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தனது பலம், தனக்குள்ள வெற்றிவாய்ப்பு போன்ற நிதர்சனம் எதுவும் புரியாமல் காங்கிரஸ் காட்டும் பிடிவாதம் திமுகவின் கோபத்தைக் கிளற ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸின் இந்த வறட்டுப் பிடிவாதத்தால், தொகுதிப்பங்கீடு முடிந்து பிரச்சார திட்டம் வகுக்க வேண்டிய நிலையிலிருக்கும் திமுகவின் வேகத்துக்கு பெரும் முட்டுக் கட்டையாகவும் உள்ளது.

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று இரவு சென்னையில் நடந்தது. எந்த முடிவும் எடுக்கப்படாமலே இந்தப் பேச்சு முடிவுக்கு வந்துவிட்டது.

திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயக்குமார் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

முதல்சுற்றுப் பேச்சு கடந்த 19ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு தொகுதி ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு தருவது தொடர்பான உத்தரவாதம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம், அது செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க குழு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் குழுவினர் முன்வைத்தனர்.

ஏற்கெனவே பா.ம.கவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், காங்கிரஸ் கோரும் அளவுக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் குழுவினர் டெல்லி சென்று, பேச்சுவார்த்தை பற்றி அக் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்தனர்.

பிறகு சென்னை திரும்பிய பிறகு இரண்டாவது சுற்றுப் பேச்சு வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கி 9.15 மணி வரை நடந்தது. இப்போதும் தங்களின் கூடுதல் தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் விட்டுக் கொடுக்கவில்லை.

தங்களுக்கு குறைந்தபட்சம் 80 தொகுதிகள் வரை வேண்டும் என்றும், துணை முதல்வர் பதவி அல்லது 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூட்டணிக்கான நிபந்தனைகளாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், 53 சீட்டுகளுக்கு மேல் ஒரு இடம் கூட தர முடியாது என திமுக கூறிவிட்டது. மேலும் கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

கூட்டணியாக போட்டி என்பதுதான் சாத்தியமே தவிர, கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டு பேசினால், சீக்கிரம் கூட்டணி பேச்சு முடிவுக்கு வந்துவிடும் என துணை முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் குழுவிடம் கூறினார்.

இதற்கிடையில் 9 மணி அளவில் முதல்வர் கருணாநிதி அறிவாலயத்துக்குச் சென்றார். அவர் வருகை பற்றி அறிந்ததும், தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பேச்சு நடந்த அரங்கிற்குச் செல்லாமல் தனது அறையில் முதல்வர் காத்திருந்தார். பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து துணை முதல்வர் ஸ்டாலினும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் முதல்வரிடம் சென்று விளக்கினர்.

அதன்பிறகு பேச்சு நடந்த அரங்கிற்கு ஸ்டாலின் சென்ற சிறிது நேரத்தில் காங்கிரஸ் குழுவினர் வெளியில் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், இந்த விவரங்களைக் கட்சித் தலைமையிடம் தாங்கள் தெரிவிக்கப் போவதாகவும் கூறினார்.

அதேபோல திமுக தரப்பிலும் அவர்கள் தலைமையுடன் கலந்து ஆலோசித்த பிறகு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தங்கபாலு குறிப்பிட்டார். அறிவாலயத்தில் முதல்வர் இருந்தபோதிலும், காங்கிரஸ் குழுவினர் முதல்வரைச் சந்திக்கவில்லை. வெளியில் வந்தவுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

காங்கிரஸ் குழுவினர் சென்ற பிறகு திமுக குழுவினரோடு முதல்வர் கருணாநிதி அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

English summary
Tamil Nadu's ruling DMK and its ally Congress Friday held their second round of seat-sharing discussions ahead of the ensuing assembly elections but talks remained inconclusive and it was decided to meet again later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X