For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி, ஜெ. மனுக்கள் ஏற்பு-வேதாரண்யம் பாமக வேட்பாளர் மனு தள்ளுபடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வேதாரண்யம் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் சொத்துக் கணக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.3 காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களில் குறைபாடு இருப்பதால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் பல கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் மொத்தம் 4280 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் இன்றைக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பாமக வேட்பாளரின் மனு தள்ளுபடி

வேதாராண்யம் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தின் வேட்பு மனு இன்று பரிசீலனைக்குப் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் தனது சொத்து கணக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இருப்பினும், மாற்று வேட்பாளர் சின்னத்துரையின் மனு சரியாக இருந்ததால் அது ஏற்கப்பட்டு, அவர் அதிகாரப்பூர்வ பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேலூர் ஞானசேகரனுக்கு சிக்கல்

இந்த நிலையில், வேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் அத‌ிகாரி, முறையான ஆவணங்களை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதே தொகுதியில் காங்கிரசை சேர்ந்த வாலாஜா அசேன் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். இன்று மனுக்கள் மீதான பரிசீலனை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய போது, வாலாஜா உசேன், ஞானசேகரன் மனு தாக்கலின் போது கொடுத்த சொத்து கணக்கில் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை என கடிதம் கொடுத்தார்.

அந்த கடிதத்தில் எம்.எல்.ஏ., ஞானசேகரன் திருமுல்லைவாயிலில் அவர் பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கிய நிலம் பற்றிய தகவலை மறைத்துள்ளதாகவும், நிலம் வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் ஒப்படைத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி கீதா, சொத்துக்கள் குறித்த முறையான ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

தூத்துக்குடி சுடலையாண்டிக்கும் சிக்கல்

இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ., சுடலையாண்டி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று மனு பரிசீலனையின் போது, சுடலையாண்டி முறையான ஆவணங்களை இணைக்கவில்லை என்றும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரி, அவரை எதிர்த்து மனு தாக்கல் செய்த ராணி வெங்கடேசன் கூறினார்.

ராணி வெங்கடேசன் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த மனுவில் , சுடலையாண்டி மாநகராட்சிக்கு ரூ. 5000 வரி பாக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரி , காங்., வேட்பாளர் சுடலையாண்டியிடம் மாலை 4 மணிக்குள் வரி பாக்கி செலுத்தியதற்கான ஆவணம் இருந்தால் அத‌ை தரும்படி கூறினார்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் இன்றைய பரிசீலனையின்போது ஏற்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் மொத்தம் 41 மனுக்கள் பதிவாகின. 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 29 பேர்களத்தில் உள்ளனர்.

மதுரை மேற்கு தொகுதியில் மொத்தம் 13 மனுக்கள் தாக்கலானது . இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 3 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் சுயேச்சை உள்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.

மதுரை தெற்கு தொகுதியில் மொத்தம் தாக்கலான 12 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

ராதாபுரம் வேல்துரைக்கும் சிக்கல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 188 மனுக்கள் தாக்கலானது. இந்த மனுக்களில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வேல்துரை மீது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தேவநாதன் யாதவுக்கும் சிக்கல்

நான்குனேரி தொகுதியில் போட்டியிடும் யாதவமகா சபை தலைவர் தேவநாதன் மனுவும் தள்ளுபடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள வேட்பாளர்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகளில் இதுவரை 138 மனுக்கள் பதிவாகின. இதில் 25 மனுக்கள் தள்ளுபடியானது. 4 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 109 மனுக்கள் ஏற்ககப்பட்டன.

சேலம் மாவட்டம் கெங்கைவல்லியில் மொத்தம் பதிவான 14 ல் 4 தள்ளுபடி செய்யப்பட்டது. ஆத்தூர் தொகுதியில் 16 ல் 3 தள்ளுபடி செய்யப்பட்டன.

மார்ச் 30ம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். மார்ச் 30ம் தேதி மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

English summary
Scrutiny of nomination papers for assembly polls will be held today. In Tirupur North 151 candidates have filed nomination. In Kolathur 46 have filed nomination. Deputy CM Stalin is contesting here. Candidates can withdraw their papers withing March 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X