For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களும் 'என்கவுண்ட்டரில்' சுட்டு வீழ்த்தப்பட்டனர்!

Google Oneindia Tamil News

Chennai Encounter
சென்னை: சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் வைத்து இன்று சுட்டு வீழ்த்தினர். ஹாலிவுட் திரைப்படங்களையும் மிஞ்சும் வகையில் இன்று அதிகாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த என்கவண்ட்டர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரு பெரும் வங்கிக் கொள்ளைகள் தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. ஜனவரி 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் புகுந்து ரூ. 20 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 14 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்களை பெரும் சவாலாக கருதிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பிறவங்கிகளில் பதிவான கண்காணிப்பு காமரா பதிவுகளையும் போலீஸார் ஆராய்ந்ததில் கொள்ளையர்கள் இருவர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டதை உணர்ந்த போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டனர்.

மேலும் கொள்ளையர்கள் குறித்த விவரத்தையும் வெளியிட்ட போலீஸார் கொள்ளைக் கும்பலின் தலைவன் என்று கருதப்படும் நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இதற்கு உடனடி பதில் கிடைத்தது.

சென்னை வேளச்சேரி பகுதியில் ஹவுசிங் போர்டு காலனி, ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன.

இதையடுத்து பெரும் போலீஸ் படை அந்த வீட்டுக்கு விரைந்தது. உள்ளே பதுங்கியிருந்த கொள்ளையர்களை நாலாபுறமும் முற்றுகையிட்ட போலீஸார் கொள்ளையர்களை சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கொள்ளையர்கள் வரவில்லை. மாறாக, போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த சண்டையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி மற்றும் ரவி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் மற்றும் சரிகர் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் சரிகர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன்.மற்ற நால்வரும் உ.பி. அல்லது பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

ரூ. 14 லட்சம் மட்டும் சிக்கியது

என்கவுண்ட்டர் நடந்த வீட்டிலிருந்து ரூ. 14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7 துப்பாக்கிகளும் கிடைத்தன. இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்டவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவன். படித்து முடித்து விட்டு ஊருக்குச் செல்லாமல் இங்கிருந்தபடி கொள்ளைச் சம்பவத்தை நடத்தியுள்ளான்.

இரு வங்கிகளிலும் கொள்ளை போன பணம் மொத்தம் ரூ. 34 லட்சமாகும். இதில் ரூ. 14 லட்சம் மட்டும்தான் கிடைத்துள்ளது. இது கீழ்க்கட்டளை வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தெரிய வந்துள்ளது. பெருங்குடி வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. அதை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கொடுத்து வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதிகளில் சோதனையிட போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

English summary
5 robbers who shocked the Chennai city police were shot dead in an apartment in Velachery, Chennai this morning. They looted two banks in the city within a month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X