For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரக்கு கட்டண உயர்வால் பருப்பு, டீசல், சமையல் எண்ணெய், கேஸ், சிமெண்ட் விலைகள் அதிகரிக்கும்!

By Chakra
Google Oneindia Tamil News

Goods train
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் ரயில் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் உணவு பொருள்கள், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் உணவு பொருள்கள், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ், யூரியா, இரும்பு-எஃகு, சிமெண்ட், நிலக்கரி உள்ளிட்ட பல சரக்குகளின் கட்டணம் 5.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் கட்டணம் டன்னுக்கு 1326.80 ரூபாயில் இருந்து 1403.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடலை எண்ணெய்க்கான சரக்கு கட்டணமும் டன்னுக்கு ரூ.1746-ல் இருந்து ரூ.1849 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் யூரியா உரத்துக்கான சரக்கு கட்டணம் டன்னுக்கு ரூ.869ல் இருந்து ரூ.920 ஆக உயர்ந்துள்ளது. அதிவேக டீசலின் கட்டணம் டன்னுக்கு 984.80 ரூபாயில் இருந்து 1041.80 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் கேஸ் கட்டணம் டன்னுக்கு 886.30 ரூபாயில் இருந்து 937.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வால் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய், உரம் ஆகியவற்றின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி உள்ளது.

ரயில் மூலம் கொண்டு வரப்படும் இந்த பொருட்களுக்கு வியாபாரிகள் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுமையும் கடைசியில் பொதுமக்கள் மீது தான் விழும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும்.

மேலும் சிமெண்டுக்கான சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலையும் அதிகரிக்கும். 50 கிலோ மூட்டை ஒன்றின் தற்போதைய விலை ரூ.330 ஆக உள்ளது. இது 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் இவைகளின் விலையும் உயரும். இப்படி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு பொருட்கள் முதல் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்வதன் மூலம் மத்திய ரயில்வே பட்ஜெட் பொதுமக்களை பாதிக்கும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.

பயணிகள் ரயில் கட்டணத்தை மட்டும் நேரடியாக உயர்த்தாமல் சரக்கு போக்குவரத்து விலையை உயர்த்தியுள்ளதன் மூலம், மறைமுகமாக மத்திய அரசு மக்களின் மீது சுமையை கூட்டியுள்ளது என்பதே உண்மை.

English summary
Food grains, cooking gas, kerosene, diesel and steel prices may go up by 5-8 per cent from April due to 5.8 per cent increase in rail freight charges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X