சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Stalin is more Dangerous than Karunanithi- மதுரை ஆதீனத்துக்கு திமுகவின் முரசொலி கடும் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைவிட தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்ற பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவின் கருத்தை மேற்கோள்காட்டி, இடைவிடாமல் விமர்ச்சிக்கும் மதுரை ஆதீனத்துக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக முரசொலி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

முரசொலி நாளேட்டில் சிலந்தி என்ற புனை பெயரில் எழுதப்பட்டுள்ள கட்டுரை: அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்.
மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது 'குண்டக்க, மண்டக்க' என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, 'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்!

முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்! அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து - ஆன்மிகவாதியாகவோ - அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய 'கோமாளி' கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது!

சிதம்பரம் நடராசர் கோவிலில் ரகசியம் ஏதுமில்லை..விசாரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது - முரசொலி சிதம்பரம் நடராசர் கோவிலில் ரகசியம் ஏதுமில்லை..விசாரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது - முரசொலி

 கிரிமினல் நிதியானந்தா

கிரிமினல் நிதியானந்தா

நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி! நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின! அப்போது நெல்லை கண்ணன் தலைமையில் ஆதின மீட்புக்குழுவே அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

 ஜெ. பிரதமராவார் பேச்சு

ஜெ. பிரதமராவார் பேச்சு

எல்லா சைவ மடங்களும் மதுரை மடத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தன. ஆதினம் அருணகிரி, அதைவிட அத்துமீறி அ.தி.மு.க.வை ஆதரித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நடத்தியது கேலிக்கூத்துக்களாகும்! நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருணகிரி பேசியது இன்றும் வலைதளங்களில் உள்ளது. நாகர்கோவில், வடிவீஸ் வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசிய நகைச்சுவைகளை கீழே தருகிறோம்; நீங்களும்ரசியுங்கள். "தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோயில்களில் இதுவரை எழுந்தருளியவன் அம்மா பிரதமராகிட இன்று குமரி மக்களிடம் வாக்குசேகரிக்க உங்கள் முன் எழுந்தருளியுள்ளேன். இந்த வரத்தை கொடுத்தது இறைவன். அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்தப் போறாங்க, அதுவும் இறைவன் கொடுத்த வரம். அதை நிறைவேற்ற இந்த சன்னிதானத்தை இறைவன் அனுப்பியுள்ளார்.அம்மா பிரதமர் ஆவார் என அவர் ஜாதகம் சொல்லுகிறது" ஜெயலலிதா பிரதமராவார் என்பது ஆண்டவன் கட்டளை - ஜாதகம் சொல்லுகிறது என்றெல்லாம் பேசி ஜாதகத்தைப் பொய்யாக்கி, ஆண்டவனுக்கும் அவப்பெயர் உருவாக்கிவிட்டு திருமிகு மதுரை ஆதினத்தின் திருவை சீரழித்துச் சென்றார்!

 சேகர்ப்பாபுவுக்கே கோபம்

சேகர்ப்பாபுவுக்கே கோபம்

இப்போது மதுரை ஆதினமாகியுள்ள அரிகர தேசிகர் ஞான சம்பந்தமோ முன்னாள் பீடாதிபதி 'அருணாகிரியை' விட தான் குறைந்தவறில்லை என்பது போல அபத்தங்களைப் பேசி வருகிறார். கழக அமைச்சரவையில் அடக்கத்துக்கும் பொறுமைக்கும் பக்திக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையே கோபம் கொள்ளச் செய்யும் அளவு ஆதினம் அரிகரதேசிகரின் பேச்சும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, கழக ஆட்சி!

 தருமபுர பட்டினப்பிரவேசம்

தருமபுர பட்டினப்பிரவேசம்

இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்திலேதான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதின குரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினபிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்து மனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை ஒட்டி, அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் - அதனை ஒட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், இதனை வைத்து குளிர் காய நினைத்த சில மதவெறிக் கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் அவரும் பேசி, அவர்களை முதலமைச்சரையும் சந்திக்க வைத்து - ஒரு சுமூக நிலையை உருவாக்கினார்! சம்பந்தப்பட்ட தருமபுர ஆதினகர்த்தரும் அதற்கு நன்றி தெரிவித்தார். மற்ற மற்ற ஆதினங்களும் இந்த சுமூக முடிவை வரவேற்றனர்! ஆனால் மதுரை ஆதினம் மட்டும் குறுக்கு சால் ஓட்டி - அந்தப் புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்!

 மிரட்டல் பேச்சு

மிரட்டல் பேச்சு

தமிழக அரசும், முதலமைச்சரும், துறை சார்ந்த அமைச்சரும் - தமிழகம் அமைதிப் பூங்காவாக - அனைத்து மதத்தினரும் அண்ணன் - தம்பிகளாக ஒன்று இணைந்து வாழவேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதினகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில் தொடர்ந்து கிறுக்குத் தனமாகப் பேசிவருகிறார்! "அமைச்சர்கள் வெளியேநடமாட முடியாது" என்கிறார். அரசியல்வாதிகளுக்கு ஆதினத்தில் என்ன வேலை என்று மிரட்டுகிறார்"அமித்ஷாவையும் மோடியையும் காட்டி பயமுறுத்த நினைக்கிறார்.மதுரை ஆதினம் இருப்பது தமிழ்நாடு! இந்த மண்ணில் பல சைவ ஆதினங்கள் உள்ளன! அவை அனைத்தும் தங்கள் பணிகளை எந்தவித சலசலப்புமின்றி செய்து வருகின்றன! அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! ஆனால் மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார்! பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும். அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்!

 காஞ்சி சங்கர மடத்துக்கு கதி

காஞ்சி சங்கர மடத்துக்கு கதி

காஞ்சி மடத்தில் - அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்ன என்பதை அவர் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறோம். இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் முதல் மாநில, மத்திய அமைச்சர்கள் பலரும் அந்த காஞ்சி பீடத்துக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் பெயரை உச்சரிக்கக் கூடமாட்டார்கள் - பெரியவாள், "சின்னவாள்" என்று பயபக்தியுடன்தான் அழைப்பார்கள்!அந்த சங்கராச்சாரியார் தரிசனம் கிடைப்பதே பெரும் பாக்யம் என்று நாட்டிலே பலர் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்துக் கிடப்பர்! ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சின்னவாள், ஜெயேந்திர ருக்கு என்ன கதி ஏற்பட்டது? அந்த மகாகுருவையே சிறைக்கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகிறோம்! கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறோம்! இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; "பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்" - என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்!

 நித்யானந்தா நிலைமை

நித்யானந்தா நிலைமை

இவர் பிரதமரைத் தேடிச் செல்லும் நிலையில் உள்ளார்; ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களைப் பிரதமர், குடியரசுத்தலைவர் போன்றவர்கள் எல்லாம் காத்திருந்து, தேதி வாங்கி பேட்டி கண்டு சென்றவர்கள்! அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்ட நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து பேச்சில் மதுரை ஆதினம் சிறிது நிதானம் காட்ட வேண்டும்! காஞ்சி சங்கராச்சாரியாருக்கு இருந்த அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலம் இவற்றோடு ஒப்பிட்டால் அரிஹர தேசிக ஞான சம்பந்தர் ஒரு 'ஜீரோ'! மதத்தலைவர் என்ற போர்வையினால் பாதுகாப்பு கிடைக்கும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருத வேண்டாம். தன்னை சிவபெருமானின் மறு அவதாரம் என்று கூறித் திரிந்து கொண்டிருக்கும் நித்யானந்தாவை கருநாடகப் போலிஸ் கைது செய்தது. ஒரு தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவுக்குள்ளே நுழைய முடியாத அளவு ஓடி ஒளிந்து திரிகிறார் அவர்! அவர்கூட மதுரை ஆதினத்தின் ஆதின கர்த்தராக முடிசூட்டப்பட்டவர்.

 ஆதீனத்துக்கு எச்சரிக்கை

ஆதீனத்துக்கு எச்சரிக்கை

பொது அமைதிக்கு ஊறுதேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை - அவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்க்கஇயலாது; சட்டம் தனது கடமையை செய்திடும் என்பதை மதுரை ஆதினம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மேலே கண்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், மதவெறிப் பேச்சுக்கள் பேசுவதை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்! தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம். "Stalin is more Dangerous than Karunanithi" எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும். இவ்வாறு முரசொலி நாளேடு எழுதியுள்ளது.

English summary
DMK mouthpiece Murasoli has warned Madurai Aadheenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X