சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Flash Back: இன்று அருணா ஜெகதீசன் அறிக்கை- அன்று பால் கமிஷன் அறிக்கையால் எம்ஜிஆரை திணறடித்த கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்னரே அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள் எப்படி ஊடகங்களில் வெளியானது என அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்து வருகின்றன.

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் 100-வது நாளின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

Flash Back: Justice Paul commission Report and MGR, Karunanidhi

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை, தமிழக அரசு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் ஊடகங்களில் அருணா ஜெகதீசன் அறிக்கையின் கருத்துகள், பரிந்துரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இன்னொரு பக்கம் அறிககை லீக் ஆனது தொடர்பாக ஆளுநர் தரப்பும் அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்ற ஒரு சூழ்நிலை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசியல் களத்தில் இருந்ததுதான் விசித்திரம். 1982-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்ற தருணத்தில் பால்கமிஷன் அறிக்கையையே வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது என்ன பால் கமிஷன் அறிக்கை விவகாரம்?

தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே.. கூலிப்படையால் வாலிபர் வெட்டி கொலை.. கொலையாளிகளில் இருவர் சிறுவர்கள்தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே.. கூலிப்படையால் வாலிபர் வெட்டி கொலை.. கொலையாளிகளில் இருவர் சிறுவர்கள்

1980-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திருச்செந்தூர் முருகன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுப்பிரமணியபிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றது எம்ஜிஆர் அரசு. ஆனால் திருச்செந்தூர் கோவில் உண்டியலை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணியம் பிள்ளை வரும் முன்னரே சிலர் திறந்து அதில் இருந்த வைரவேலை திருடிவிட்டனர்; இதை தட்டிக்கேட்டதால் சுப்பிரமணிய பிள்ளை படுகொலை செய்யப்பட்டார் என்பது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி குற்றச்சாட்டு. எம்ஜிஆர் ஆட்சியில் அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், சுப்பிரமணியம் பிள்ளை படுகொலைக்கு காரணம் என அரசியல் களம் பரபரத்தது. இதனால் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, நீதிபதி சிஜேஆர் பால் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார். இதுதான் தமிழக வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட பால் கமிஷன் என்பதாகும்.

நீதிபதி பால் கமிஷனும் விசாரணை நடத்தி எம்ஜிஆர் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதனை வெளியிட கருணாநிதி வலியுறுத்திப் பார்த்தார். எம்ஜிஆர் அரசு இறங்கிவரவில்லை. இதனால் அதிரடியாக பால் கமிஷன் அறிக்கையை கருணாநிதியே பகிரங்கமாக வெளியிட எம்ஜிஆர் அரசு ஆடிப் போனது. பால் கமிஷன் அறிக்கையில், திருச்செந்தூர் கோவில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை படுகொலை செய்யப்பட்டதாகவே கூறப்பட்டிருந்தது. இதனால் கருணாநிதிக்கு பால் கமிஷன் அறிக்கை கிடைக்க காரணமாக இருந்த இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

ஆனாலும் கருணாநிதி இதனை விடுவதாக இல்லை. அப்போதுதான் மதுரையில் இருந்து நீதிகேட்டு நெடும்பயணத்தை திருச்செந்தூருக்கு நடந்தே சென்று நடத்திக் காட்டினார் கருணாநிதி. 1982 பிப்ரவரி 15-ல் மதுரையில் இருந்து 200 கி.மீ. தொலைவு திருச்செந்தூருக்கு நடந்தே சென்றார் கருணாநிதி. 8 நாட்கள் இந்த நீதிகேட்டு நெடும்பயணம் நடைபெற்றது. 1982 பிப்ரவரி 22-ல் திருச்செந்தூரை கருணாநிதி சென்றடைந்தார். இந்த நடைபயணத்தால் கருணாநிதியின் கால்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கருணாநிதியின் இந்த நீதிகேட்டு நெடும்பயணம் எம்ஜிஆர் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது என்பது வரலாறு.

English summary
Here is Flash Back Story on 1982's Justice Paul commission Report and MGR, Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X