12 ஆண்டுக்கு முன்பே செய்த கருணாநிதி.. நேற்று அண்ணாமலை சொன்னதை பேசிய அமித்ஷா! வரலாறு சொல்வது இதான்
சென்னை: தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று உரையாற்றிய நிலையில், 2010 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ் வழியில் பொறியியல் கல்வியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 75 வது ஆண்டு விழாவில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இதன் பவள விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அமித்ஷா பேச்சு
நேற்று இந்த விழாவில் பங்கேற்க அவர் சென்னைக்கு வருகை தந்தார். இந்த விழாவில் பேசிய அமித்ஷா, "பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த மாநிலத்தின் முன்னேற்றம் குறித்தும், செயல்படுத்தும் திட்டங்கள் பற்றியும் அவர் உற்று நோக்கி வருகிறார்.

வரி
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் வரி பகிர்மான தொகை 90% உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு தேசிய நெடுஞ்சாலைகளுக்காக ரூ.8,900 கோடி மத்திய அரசு சார்பாக உயர்த்தி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட பணிகளுக்காக ரூ.3.7 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.

தமிழ் மொழி
தமிழ்நாட்டில் 11 மருத்துக் கல்லூரிகள் ரூ. 1,456 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ளன. நான் தமிழக அரசுக்கு இங்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். உலகின் மிக மூத்த மொழியாகவும் பழமையான மொழியாகவும் இலக்கிய செழுமை வாய்ந்த மொழியாகவும் தமிழ் உள்ளது. தமிழ் மொழியால் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை.

தமிழ் வழிக்கல்வி
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்கிலத்தில் மருத்துவம் பொறியியல் படிப்பு இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே தமிழ் மொழியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை கற்கலாம்.

கருணாநிதி திட்டம்
எனவே இதற்கான பாடத்திட்டங்களை தமிழில் அமைக்குமாறு தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த வேண்டும்." என்றார். ஆனால், அமித்ஷாவை வைத்த இந்த கோரிக்கையை கடந்த 2010 ஆம் ஆண்டே தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி நிறைவேற்றிவிட்டார்.

தமிழ் வழி பொறியியல்
அப்போது திமுக ஆட்சியில் இருந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் படிப்பு கொண்டு வரப்பட்டது. மூன்று பாடப்பிரிவுகளில் 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வழிக்கல்வி அமல்படுத்தப்பட்டு இன்று வரை மாணவர்கள் பயின்று பட்டம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத்தில் தமிழ்
அதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்வி தமிழில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. நவீன மருத்துவத்திலும் தமிழ் வழிக்கல்வியை கொண்டு வருவதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கு பொன்முடி பதிலடி
கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "2010ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொறியியல் கல்வி கூட தமிழில் இல்லை என்று கூறுகிறார். அவருக்கு கடந்த கால அரசியலும் தெரியவில்லை, நிகழ்கால அரசியலும் தெரியவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications