• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அமீரக எழுத்தாளர், வாசகர் குழுமம் அறிமுகப்படுத்திய 8 நூல்கள்.. களைகட்டிய விழா

|

துபாய்: அமீரகத்தில் இயங்கி வரும் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 22 பிப்ரவரி 2019 எட்டு நூல்களின் அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பு இதோ: கடந்த ஓராண்டாக நவீன இலக்கியம், எழுத்து மற்றும் வாசிப்பு சார்ந்த தொடர் நிகழ்வுகளை இந்த 'வாட்சப்' குழுமம் நடத்தி வருகிறது. வெளிநாடு வாழ் இலக்கிய நிகழ்வுகளின் பொதுத் தன்மையாகவே மாறிப்போய்விட்ட பல வழமைகளை இந்தக் குழுமம் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருகிறது.

Books introduction at UAE writers and readers forum

கவிதை,சிறுகதை, நாவல் என அனைத்துதளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும்அமீரக எழுத்தாளர்களின் படைப்புகள் விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து புத்தகத்தின் வெளியீடும், எழுத்தாளர்களின் ஏற்புரையும் நடந்தேறியது.

நிகழ்வை எழுத்தாளர் ஆசிப் மீரான் ஒருங்கிணைக்க, வரவேற்புரையை ரமாமலர் நிகழ்த்தினார். நாடக இயக்குனர் சசிக்குமார், குழுமத்தின் இலக்கியச் செயல்பாடுகளை குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டில் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் நடத்திய பல்வேறு இலக்கிய நிகழ்வுகளின் காணொளி ஒளிபரப்பப்பட்டது. இந்தக் காணொளியை விஜய் நெருடா தொகுத்திருந்தார். ஆசிப் மீரானின் குரலில் இந்தக் காணொளி மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தது.

முதல் நூலாக எழுத்தாளர் தெரிசை சிவாவின் 'குட்டிகோரா' சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நூலறிமுகத்தை பிரபு கங்காதரனும் ஏற்புரையை சிவாவும் வழங்கினர். சிவா தன்னுடைய நூல் ஏற்புரையில் சக எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் பழி நாவலை சிலாகித்துப் பேசியது பலரையும் வியப்பிற்குள்ளாழ்த்தியது. எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தில் இயங்கும் ஒவ்வொருவரும் தன்னை முன்னிருத்துவதை விட படைப்புகளையே முதன்மையாகக் கருதுவர் என ஆசிப் மீரான் கூறியது நிரூபணமாகிற்று.

Books introduction at UAE writers and readers forum

இரண்டாவது நூல் எழுத்தாளர் ஜெஸிலாபானு எழுதிய மூஸா நபி வரலாறு வெளியிடப்பட்டது. நூல் அறிமுகத்தை குறிஞ்சி நாதன் வழங்கினார். நிகழ்வு நடந்த ரெக்டாங்கில் அரங்கத்தில் காலணிகள் அனுமதியில்லை. மூஸா நூல் வெறுங்கால்களால் வெளியிடப்பட்டது பொருத்தமாக இருந்ததாகவும் மூஸா சிறார்களுக்கான நூல் மட்டுமல்ல மூஸா நபி அவர்களை அறிந்திராத நம் அனைவருக்குமான நூல் எனவும் முத்தாய்ப்பாக பேசி முடித்தார்.

ஏற்புரையில் ஜெஸிலா பானு இந்நூல் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களால் வெளியிடப்பட்டதையும், இந்நூல் உருவாகுவதற்கு காரணமாக அமைந்த நண்பர்களையும் நினைவு கூர்ந்து நன்றி உரைத்தார். மேலும் இந்தக் குழுமத்தைச் சார்ந்த தற்போது இந்தியாவில் வசிக்கும் கவிஞர் ஹேமலதாவும் காணொளி வழியாய் மூஸா நூல் குறித்துப் பாராட்டிப் பேசினார். கம்சனின் கதையும் மூஸாவின் கதையையும் தொடர்புபடுத்தி மதங்கள் கடந்த சிந்தனையை உருவாக்க எழுத்தாளர்களால் மட்டும்தான் முடியும் என தன் பேச்சை நிறைவு செய்தார்.

மூன்றாவதாக எழுத்தாளர் தேவ சுப்பையாவின் 'சுவாசமே காதலாக' மற்றும் 'யாரோ எழுதிய கதை' ஆகிய இரண்டு தொகுப்புகள் வெளியிடப்பட்டன. சுவேசமே காதலாக நூலை சான்யோவும், யாரோ எழுதிய கதையை கவிஞர் சோஃபியாவும் அறிமுகப்படுத்திப் பேசினர். ஏற்புரையில் தேவா இந்த இரண்டு நூல்களை வெளிக் கொண்டு வந்ததின் பின்னணியில் நிகழ்ந்த சிக்கல்களைக் குறித்துப் பேசினார். பதிப்பகங்கள் என்கிற பெயரில் சிலர் அறிமுக எழுத்தாளர்களை எல்லா விதங்களிலும் அலைக்கழிக்கும் சம்பவங்களையும் தான் அதில் பாதிக்கப்பட்டதையும் குறித்துப் பேசினார்.

Books introduction at UAE writers and readers forum

நான்காவதாக துபாய் 89.4 தமிழ் பண்பலையின் தொகுப்பாளர் RJ நாகா எழுதிய இசையின் நிறம் தேடும் தூரிகைகள் என்கிற கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. சசிக்குமார் அறிமுக உரையை நிகழ்த்த நாகா ஏற்புரை வழங்கினார். சென்னை மற்றும் ஷார்ஜா புத்தகத் திருவிழாக்களில் தன்னுடைய கவிதை நூல்கள வெளியிடப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஐந்தாவதாக எழுத்தாளர் முஹம்மது யூசுப் எழுதிய மணல் பூத்த காடு நாவல் வெளியிடப்பட்டது. சவுதி அரேபியாவை கதைக் களமாகக் கொண்ட நாவல் என்பதால் வாசகரிடத்தில் அதிக கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நூலுக்கான அறிமுக உரையை எழுத்தாளர் ராம் சுரேஷ் வழங்கினார். யூசுப் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததால் அவர் சார்பில் பிலால் அலியார் ஏற்புரையை வழங்கினார். மேலும் முகம்மது யூசுப்பின் ஒலிப் பேச்சும் நிகழ்வில் இடம்பெற்றது.

ஆறாவதாக கவிஞர் பிரபு கங்காதரனின் அம்புயாதனத்து காளி கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. அறிமுக உரையை எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் நிகழ்த்தினார். கவிதையின் தொன்மம் குறித்தும் கவிதை வடிவத்தின் சமகாலத் தேவை குறித்தும் பேசினார். ஏற்புரையில் பிரபு கங்காதரன், எழுத்தாளார் சாரு நிவேதிதா அவர்களுக்கும் நூல் உருவாக்கத்தில் உதவிய நண்பர்களுக்கும் நன்றி கூறினார்.

ஏழாவதாக எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி' நாவல் வெளியிடப்பட்டது. அறிமுக உரையை எழுத்தாளர் தேவா சுப்பையா வழங்கினார். 'பழி' நாவல் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தை தேவா வாசித்தார். மரியோ பர்கஸ் யோசா அளவுக்குக் கதை சொல்ல தமிழில் ஆட்கள் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அய்யனார் இருக்கிறார். அவரின் 'பழி' நாவல் இதுவரை தமிழில் வெளிவந்ததிலேயே மிகவும் விறுவிறுப்பான நாவல் என சாரு நிவேதிதா பாராட்டி இருந்தார். இதை வழிமொழிந்த தேவா 'பழி' நாவல் கடத்திய உணர்வுகளை கொந்தளிப்பாய் பேசினார். ஏற்புரையை வழங்கிய அய்யனார் விஸ்வநாத் தன் படைப்புகளின் தனக்குப் பிடித்த நாவல் 'பழி' என்றும் அதை எழுதிய மனநிலையையும் பகிர்ந்து கொண்டார்.

கடைசியாக கானல் பதிப்பகம் சார்பில் ஆசிப் மீரான் தொகுத்த ஒட்டக மனிதர்கள் சிறுகதைகத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அமீரகத்தில் சிறப்பாக இயங்கி வரும் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ஒரே தொகுப்பாக ஆசிப் மீரான் கொண்டு வந்திருக்கிறார். எழுத்தாளர் ஆபிதின் நூலை வெளியிட எஸ்.எஸ்.மீரான் அவர்கள் பெற்றுக் கொண்டார். கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களையும் மேடைக்கு அழைத்து நூல் வெளியிடப்பட்டது. ஏற்புரையை வழங்கிய ஆசிப் மீரான் இத் தொகுப்பின் தேவை குறித்தும் அதற்காக தன் சொந்த செலவில் பதிப்பிக்க முன் வந்ததையும் கூறினார். மேலும் நூல் உருவாக்கத்தில் பங்கு பெற்ற நண்பர்களின் ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்தார்.

இறுதியாக விழாவில் வெளியிடப்பட்ட நூல்களின் ஆசிரியர்களுக்கு அமீரக மதிமுக பேரவை சார்பில் அமீரகத் திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் பொன்னாடைப் போர்த்தி கவுரவித்தார்.

நன்றியுரையை அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் விழா ஒருங்கிணைப்பாளர் பாலாஜி பாஸ்கரன் வழங்கினார். மதுரை வட்டார வழக்கில் கேலியும் கிண்டலுமாக இருந்த அவர் பேச்சு அரங்கை சிரிப்பால் அதிர வைத்தது. நிறைந்திருந்த அரங்கு, மகிழ்வுடனும் இலக்கிய நினைவுகளுடனும் கலைந்து சென்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Many Tamil books were introduced in UAE writers and readers forum which is got huge response.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more