பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஒவைசி கேள்வி
ஹைதராபாத்: மக்கள்தொகை சமநிலையின்மைக்கு வங்கதேசத்தில் இருந்து நடைபெறும் ஊடுருவலே காரணம் என ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹொசபலே கூறியிருந்த நிலையில், அதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊருடுருவல் நடந்திருக்கிறது என்றால், பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் தூங்கிக் கொண்டிருந்தார்களா என ஒவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பிரித்தாளும் அரசியலை செய்து வரும் சிலர், ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் எப்படி பிளவை ஏற்படுத்தலாம் என்பது குறித்தே சதா சர்வக்காலமும் யோசித்து வருவதாக ஒவைசி விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் கோட்டையிலேயே “முட்டை”.. நாக்பூர் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக படுதோல்வி! கலக்கிய காங்கிரஸ்

தத்தாத்ரேயா ஆவேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான ஆர்எஸ்எஸ் முக்கியத் தலைவர், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: நாட்டில் மதமாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில், மதமாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. அதனை ஏற்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. இதற்கு பல மாநிலங்களில் நல்ல பலனும் கிடைத்துள்ளது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய மக்கள், மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி வருகின்றனர்.

மக்கள்தொகை சமமின்மை
இந்தியாவில் தற்போது இந்துக்களின் மக்கள்தொகை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு மதமாற்றமும் ஒரு காரணம். அதேபோல, வங்கதேசத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட மதத்தினர் இந்தியாவுக்கு ஊருடுவி வருவதாலும், இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது. பீகாரின் வடபூர்னியா மற்றும் கதிஹார் உள்ளிட்ட மாவட்டங்களுக்குள் இந்த ஊருடுவல் அதிகமாக இருப்பதால் அந்தப் பகுதிகளில் இந்துக்களின் மக்கள்தொகை குறைகிறது. இவ்வாறு தத்தாத்ரேயா ஹொசபலே பேசினார்.

ஒவைசி கேள்வி
தத்தாத்ரேயாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வேகமாக பரவி வந்தது. மேலும், அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகஅசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் நடப்பதால் தான் இந்துக்களின் மக்கள் தொகை குறைவதாக சிலர் கூறுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கருத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். அது எப்படி ஒரு நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முடியும்?

பிரியாணி சாப்பிட்டு தூங்கினார்களா?
நம் நாட்டில் ராணுவ வீரர்கள் இல்லையா? எல்லையை பாதுகாப்பதற்காகவே பிஎஸ்எப் என்ற ஒரு தனிப் படைப்பிரிவை இந்தியா வைத்துள்ளது. ஊடுருவல் நடக்கும் வரை அந்த பிஎஸ்எப் படையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்கினார்களா? ஏன் இப்படி ஒரு மதத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? பிரித்தாளும் அரசியலை செய்து வரும் சிலர், ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் எப்படி பிளவை ஏற்படுத்தலாம் என்பது குறித்தே சதா சர்வக்காலமும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அதில் ஒவைசி கூறியுள்ளார்.