For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் புல்லட் ரயில்: மோடியின் அகமதாபாத் -மும்பை இடையே முதல் ரயில் - கெளடா

Google Oneindia Tamil News

டெல்லி: ஜப்பான், சீனா வரிசையில் விரைவில் இந்தியாவும் இணையப் போகிறது. மும்பை - அகமதாபாத் மார்க்கத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது கெளடாவுக்கும் முதல் பட்ஜெட்டாகும்.

Bullet Trains in India Soon, says Railway Minister

இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக புல்லட் ரயில் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை - அகமதாபாத் மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கெளடா தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் நீண்ட கால கனவு இதன் மூலம் நனவாகும் என்றும் கெளடா தெரிவித்தார்.

தற்போது ஜப்பான், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் புல்லட் ரயில்கள் உள்ளன. இந்த ரயில்கள் மணிக்கு 300 கிலோமீட்டர் என்ற அதி வேகத்தில் செல்லக் கூடியவையாகும்.

இந்த ரயில்களுக்காக பிரத்யேக பாதை அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் புல்லட் ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டால், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும்.

ஜப்பானில் புல்லட் ரயில் 1964ம் ஆண்டு அறிமுகமானது. அதன் பின்னர் பல நாடுகளும் அதை பின்பற்ற முயற்சித்தன. சீனா இதில் வெற்றி கண்டது. பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தைவான், துருக்கி, தென் கொரியா, ஸ்பெயின் நாடுகளும் இதை பின்பற்றின.

புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஏற்கனவே கான்பூர் ஐஐடியை மத்திய ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி மாநிலத்திலிருந்து தொடக்கம்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்திலிருந்து தொடங்குவது இன்னொரு முக்கிய அம்சமாகும்.

இத்திட்டம் குறித்து கெளடா மேலும் கூறுகையில், இந்த மார்க்கத்தில் புல்லட் ரயில் விடுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது அகமதாபாத் - மும்பை இடையிலான மார்க்கத்தில் அதி வேக ரயிலாக சதாப்தி எக்ஸ்பிரஸ் மட்டுமே உள்ளது. இந்த ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாகும். அறிமுகப்படுத்தப்படும் புல்லட் ரயிலானது மணிக்கு 320 கிலோமீட்டர் செல்லக் கூடியதாக அமையும்.

இதுதவிர டெல்லி - ஆக்ரா, டெல்லி - சண்டிகர், மைசூர்-பெங்களூர்-சென்னை, மும்பை -கோவா, ஹைதராபாத் - செகந்திராபாத், டெல்லி - கான்பூர், நாக்பூர் - பிலாஸ்பூர், மும்பை - கோவா, சென்னை - ஹைதராபாத், நாக்பூர் -செகந்திரபாத் ஆகிய மார்க்கங்களிலும் புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் தனியார் பங்களிப்பும் இடம் பெறும். புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மோடியின் தேர்தல் வாக்குறுதி

புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவேன் என்பது தேர்தல் பிரசாரத்தின்போது மோடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும். மேலும், புல்லட் ரயில்கள் மூலம் மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களையும் இணைக்கும் வைர நாற்கரத் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்றும் மோடி உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Union railway minister Sadananda Gowda has announced that the Bullet Trains will be introduced in India Soon in the railway budget today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X