For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்னாப் கோஸ்வாமியின் புது சேனல் ரிபப்ளிக்கும், சு சாமியின் எதிர்ப்பும்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவின் முன்னணி தொலைக் காட்சி செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி தொடங்கவிருக்கும் புதிய ஆங்கில செய்தி தொலைக் காட்சி சேனலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பை கிளப்பியிருப்பவர் பாஜக தலைவரும், ராஜ்ய சபா எம் பி யுமான சுப்பிரமணியன் சுவாமி. பிரச்சனைக்கு காரணம் சேனலின் பெயர். Republic (ரிபப்ளிக்) என்று புதிய சேனலுக்கு பெயர் சூட்டப் பட்டிருப்பதுதான் சிக்கலுக்குக் காரணம். சுவாமியின் எதிர்ப்புக்கு காரணம் Republic என்ற பெயர் வர்த்தக பயன்பாடுகளுக்கு வைக்கப்படக் கூடாத சட்டப் படி தடை செய்யப்பட்ட பெயர் என்பதுதான்.

Subramanyam Swamy Vs Arnab Goswamy

Republic சேனலை நடத்தும் கம்பெனியில் முதலீடு செய்திருப்பவர்களில் முக்கியமானவர் ராஜ்ய சபா எம் பி யும், மீடியா அதிபருமான ராஜீவ் சந்திரசேகர். இவருக்கு இது சம்மந்தமாக சுவாமி எழுதிய கடிதங்களுக்கு எந்த பதிலும் இல்லை. இதனை அடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயருக்கு சுவாமி எழுதியிருக்கும் கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: "1950 ம் ஆண்டு முத்திரைகள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம் பிரிவு 6 ன் கீழ் Republic என்ற வார்த்தையை தொழில்முறையிலான பயன்பாடுகளுக்கும், வர்த்தக பயன்பாடுகளுக்கும் உபயோகப் படுத்துவது என்பது தடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தி, தடை செய்யப் பட்ட ஒரு பெயரில் தொலைக் காட்சி துவங்க அனுமதி வழங்கியது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.''

இது சம்மந்தமாகத்தான் ராஜீவ் சந்திரசேகருக்கும், அர்னாப் கோஸ்வாமிக்கும் எழுதிய கடிதங்களுக்கு எந்த பதிலும் இல்லாதது சுவாமியை கோபங் கொள்ள வைத்திருக்கிறது; "கோஸ்வாமி இந்த பூமியில் உள்ள எல்லா விஷயங்களை பற்றியும், எல்லோருக்கும் புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தற்போது சட்டப்படியான ஒரு தவறைச் செய்து கொண்டிருக்கிறார். புதிய தொலைக் காட்சிக்கு Republic என்று பெயரிட முடியாது. இது இந்திய சட்டங்களை மீறுகிறது. கோஸ்வாமி என்னை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோரையும் புரட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு கோஸ்வாமி கூறுகிறார். எந்த புரட்சியைப் பற்றி கோஸ்வாமி பேசுகிறார். நான் இந்த விஷயத்தை இப்படியே விட்டு விட மாட்டேன். Republic பெயரை மாற்ற வில்லை என்றால் நான் விஷயத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போவேன்''.

இதனது அர்த்தம் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தனக்கு சாதகமான பதிலைச் சொல்ல வில்லை என்றால் விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறார் சுவாமி என்றுதான் புரிந்து கொள்ளப் படுகிறது.

Subramanyam Swamy Vs Arnab Goswamy

இது பற்றி ராஜீவ் சந்திரசேகரின் நிறுவனத்தின் உயரதிகாரி இவ்வாறு சொல்லுகிறார்; "நாங்கள் Republic ல் பணம் போட்டிருக்கும் சில முதலீட்டாளர்களில் ஒரு முதலீட்டாளர், அவ்வளவுதான். அர்னாப் தான் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கிறார். ஆகவே இந்த விஷயம் பற்றி ஆர்னாப்தான் முடிவு செய்ய வேண்டும்''.

இந்த புதிய சேனலில் எல்லா விஷயங்களையும் கையில் வைத்திருப்பது அர்னாப் என்றுதான் சொல்லப்படுகிறது. "உண்மைதான். செய்தியாளர்களை மட்டுமல்ல, தொழில் நுட்ப, வர்த்தக, மனிதவள துறை என்று எல்லாவற்றையும் ஆர்னாப் தான் கவனிக்கிறார். ராஜீவ் சந்திரசேகர் நியமித்த கன்சல்டண்டுகளையும் ஆர்னாப் வெளியேற்றி விட்டார். Republic ஐ பொறுத்த வரையில் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆர்னாப் தான். இதனால் பெயர் மாற்றம் சம்மந்தமாக எங்கள் பாஸ் எதுவும் செய்ய முடியாது. Republic என்ற பெயரை மாற்ற ஆர்னாப் அவ்வளவு சுலபத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்,'' என்கிறார் ராஜீவ் சந்திரசேகருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர்.

இதனிடையே Republic சேனலில் புதிய முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக அர்னாப் பின் ஆட்கள் புதுதில்லியில் முகாமிட்டு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "ஆரம்பத்தில் சேனலை துவங்குவதற்கு 120 கோடி ரூபாய் தேவைப்படும் என்றே கணக்கிட்டோம். ஆனால் தற்போது குறைந்தது 200 கோடியாவது தேவைப் படுகிறது. அந்த நிதியைத் திரட்டும் பணியில் எங்களை மும்முரமாக ஈடுபடுமாறு அர்னாப் பணித்திருக்கிறார். தொழில் நுட்ப விஷயங்கள் உட்பட எல்லாவற்றையும் அர்னாப்தான் பார்த்து பார்த்து செய்கிறார்,'' என்கிறார் கோஸ்வாமிக்கு நெருக்கமான ஒருவர்.

Republic ன் வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல என்கின்றனர் இந்திய தொலைக் காட்சிகள் மற்றும் ஊடகங்களின் தற்போதய போக்குகள் பற்றி ஆய்வு செய்து வரும் ஆராய்சியாளர்கள்.

"இந்தியாவின் மொத்த தொலைக் காட்சி நேயர்களின் எண்ணிக்கையில் 1 சதவிகிதத்திற்கும் கீழேதான் உள்ளது ஆங்கிலச் செய்தி சேனல்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை. ஆகவே சேனல்களுக்கான கட்டணங்களின் மூலம் வரும் வருமானத்தை விட விளம்பரங்கள் மூலம் வரும் வருமானத்தைத்தான் ஆங்கில சேனல்கள் நம்பியிருக்க வேண்டும். சேனல்களுக்கான கேபிள் கட்டணங்கள் மூலம் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வசூலாகிறது. இதில் 10 முதல் 15 சத விகிதம்தான் கட்டணச் சேனல்களை நடத்தும் தொலைக் காட்சி நிறுவனங்களுக்குப் போகிறது. இது தவிர ஆண்டு தோறும் கேபிள்கள் மற்றும் டிடிஹெச் போன்றவற்றில் தங்கள் தொலைக் காட்சி இடம் பெறுவதற்காக, அலைவரிசைகள் கட்டணமாக குறைந்தது 18 முதல் 21 கோடி ரூபாய் வரையில் செலவிட வேண்டும். இதில் பிரைம் பேண்ட் அதாவது முன்னணி இடத்தில் இடம் வேண்டும் என்றால் அதற்காக தனியாக கூடுதலாக பெருந் தொகையை செலவிட வேண்டியிருக்கும்,'' என்கிறார் மீடியா ஆராய்ச்சியாளர் சந்தீப் பூஷண்.

"ஒரு ஆங்கில செய்திச் சேனல் இன்று இந்திய ஊடக சந்தையில் தாக்குப் பிடித்து நிற்பது என்பது மிகவும் சவாலானது. சில நூறு கோடி ரூபாய்கள் எப்போதும் கையிருப்பில் இருந்து கொண்டிருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு வரும் தொடர் நஷ்டத்தை தாக்குப் பிடிக்கும் பண பலம் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் அர்னாப்பின் பழைய நிறுவனத்திற்கு, அதாவது 'டைம்ஸ் நவ்' க்கு இருந்தது. அதனால்தான் 'டைம்ஸ் நவ்' வெற்றி பெற்றது. இன்று அதே தகுதி Republic சேனலுக்கு தேவைப்படுகிறது. ஏற்கனவே இந்திய தொலைக் காட்சி ஆங்கில செய்தி ஊடக சந்தையில் ஏராளமான நபர்கள் இருக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என்று மேலும் கூறுகிறார் சந்தீப் பூஷண்.

அர்னாப் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில் இருந்த போது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சாவந்த் தொடர்ந்த அவதூறு மற்றும் மான நஷ்ட வழக்கில் 100 கோடி ரூபாய் அபராதம் அந்த தொலைக் காட்சிக்கு விதிக்கப் பட்டது. குறிப்பிட்ட அந்த நீதிபதியின் படம் தவறுதலாக ஒரு மோசமான செய்தியில் ஒளிபரப்பானதுதான் இதற்குக் காரணம். 100 கோடி ரூபாயில் ஒரு குறிப்பிட்ட தொகை நீதிமன்றத்தில் செலுத்தப் பட்டு, வழக்கு மேல் முறையீட்டில் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது.

SC asks Times Now to deposit Rs 100 crore before HC takes up its appeal in defamation case

"இது போன்ற பிரச்சனைகள் வரலாம். காரணம் அர்னாப் பின் பலம், பலவீனம் இரண்டுமே அவரது தடாலடி, ஆவேச அணுகுமுறைதான். இதற்கு இந்திய நேயர்களிடம் அபரிதமான ஆதரவு இருக்கிறது. ஆகவே வர்த்தக ரீதியில் பார்த்தால் அர்னாப்பின் அந்த போக்கு தொடரத்தான் செய்யும். ஆனால் 100 கோடி ரூபாய் போன்ற அபராதங்கள் வந்தால் நிலைமை சிக்கலாகலாம்,'' என்கிறார் அர்னாப்புடன் பணியாற்றிய ஒரு ஊடகவியாளர்.

சமீபத்தில் புதுதில்லியில் இந்திய தொழிற் கூட்டமைப்பான சிஐஐ நடத்திய ஒரு கருத்தரங்களில் பேசிய அர்னாப் இவ்வாறு கூறினார்: "இன்னும் மூன்று அல்லது நான்காண்டுகளில் சர்வதேச ஊடகங்களுக்கு மிகப் பெரிய சவாலாக நாம் உருவாக இருக்கிறோம். ஊடகத் துறையின் ராஜாக்கள் பிபிசி, சிஎன்என் கிடையாது. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளுவதற்கு எதுவுமே கிடையாது''.

அர்னாப்பின் இந்த வார்த்தைகள் அவரது வழக்கமான வெற்று சவடால் என்று இப்போதே ஒதுக்கித் தள்ளி விட முடியாதுதான்!

English summary
R Mani's article on the recent clash between Arnab Goswamy and Subramanyan Swamy in using Republic title for the former's channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X