For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபாலி எங்கள் கதை... ஒரு மலேசியத் தமிழரின் நெகிழ்ச்சிக் கட்டுரை!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த தமிழர் விசித்திர மாணிக்கம். இவர் ஒரு அட்டகாசமான கட்டுரையை எழுதியுள்ளார். ஊரெங்கும் பேச்சாக உள்ள கபாலி படம் பற்றிய கட்டுரைதான் இது. ஆனால் கபாலி படத்தை நாம் புரிந்த கொள்வதற்காக இவர் எழுதியுள்ள சூப்பர் கட்டுரை. மலேசியா குறித்து சற்றும் அறியாத இந்தியர்களுக்கான கட்டுரை இது.

மலேசிய இந்தியரான விசித்திர மாணிக்கம், மலேசியா குறித்து சற்றும் அறிந்திராத தமிழர்கள், இந்த கட்டுரையைப் படித்துப் பார்த்த பிறகு கபாலி படத்தைப் பார்த்தால் அது அவர்களுக்கு எளிதில் புரியும் என்று சொல்கிறார். http://www.kualalumpurpost.net என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையைப் படித்து முடித்தால் மலேசியாவுக்கே போய் வந்த பிரமை ஏற்படுகிறது.

அந்தக் கட்டுரையிலிருந்து..

நான் மலேசிய இந்தியன்

நான் மலேசிய இந்தியன்

நீங்கள் மலேசியர்கள் குறித்து அறிந்திராத இந்தியரா. அப்படியானால் முதலில் இதைப் படியுங்கள், பிறகு கபாலி படம் பாருங்கள். நீங்கள் மலேசிய கலாச்சாரம் குறித்து சற்று அறிந்தவரா, அப்படியானால் படத்தைப் பார்த்து விட்டு பிறகு இதைப் படியுங்கள். நீங்கள் மலேசியரா, அப்படியானால் படத்தைப் பாருங்கள், பிறகு படியுங்கள்.

அனைவரும் குடியேறிகள் அல்ல

அனைவரும் குடியேறிகள் அல்ல

மலேசிய இந்தியர்களில் சமீப கால தலைமுறையினர் இந்தியாவிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் அல்ல. நாங்கள் மலேசியாவிலேயே பிறந்தவர்கள். தோற்றத்தில் இந்தியர்களாக இருந்தாலும் நாங்கள் மலேசியர்கள். இந்தியக் கலாச்சாரம் என்பது எங்களது முன்னோர்கள் மூலமாக மட்டுமே எங்களுக்குத் தெரியும். நான் 5வது தலைமுறை மலேசியர். எனது குடும்பம் 18வது நூற்றாண்டிலிருந்து இங்கு வசித்து வருகிறது.

கபாலி எங்கள் கதை

கபாலி எங்கள் கதை

கபாலி எங்கள் கதை. இந்திய மலேசியர்கள் குறித்த கதை இது. இந்திய குடியேறிகள் குறித்த கதை அல்ல. மலேசியாவுக்கு வேலை நிமித்தமாக வந்து பின்னர் என்ஆர்ஐ ஆகிப் போன இந்தியர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பு கிடையாது.

அருமையான படம்

அருமையான படம்

இயக்குநர் பா. ரஞ்சித் மிகச் சிறப்பான முறையில் இந்திய மலேசியர்கள், அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றை கபாலியில் பதிவு செய்துள்ளார். உண்மையான மலேசிய இந்தியர்களை இந்தப் படம் சித்தரிக்கிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பல மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகளை இதில் சரியான முறையில் காட்டியுள்ளார் ரஞ்சித். இந்தப் படத்தை மிக புத்திசாலித்தனமாக எடுத்துள்ளார் ரஞ்சித். அதாவது இந்தப் படத்தால் மலேசிய இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்து விடாத வகையில் எடுத்துள்ளார். இல்லாவிட்டால் இப்படத்தை மலேசிய அரசு தடை செய்திருக்கும்.

தமிழும் நாங்களும்

தமிழும் நாங்களும்

நாங்கள் பேசும் தமிழ் வேறு, தமிழகத்தில் பேசும் தமிழ் வேறு. கபாலியில் வரும் தமிழ் மலேசியாவில் தமிழர்கள் பேசும் தமிழைப் போலவே உள்ளது. வார்த்தைகளும் கூட மலேசியத் தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்தான். மேலும் நாங்கள் சென்னை அல்லது தமிழகத்தில் பேசுவதை விட மிக சுத்தமான தமிழைப் பேசுகிறோம்.

100 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்

100 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்

100 வருடங்களுக்கு முன்பு எங்களை ஆங்கிலேயர்கள் இங்கு கொண்டு வந்தபோது என்ன தமிழ் பேசப்பட்டதோ அதே தமிழைத்தான் நாங்கள் இன்று வரை பேசி வருகிறோம். எனவே எங்களது தமிழ் சற்று நன்றாக உள்ளது.

உங்களுக்கு காரு.. எங்களுக்கு காடி

உங்களுக்கு காரு.. எங்களுக்கு காடி

கார் என்பதை அப்படியே கார் என்று தமிழில், தமிழ்நாட்டில் சொல்கிறார்கள். நாங்கள் காடி என்றுதான் சொல்கிறோம். தமிழகத்தில் பேசும் தமிழில் பல ஆங்கில வார்த்தைகள் கலந்துள்ளன. மலேசியத் தமிழில் அப்படி இல்லை. அடிப்படையில் நாங்கள் அதிக அளவில் தமிழில் ஆங்கிலத்தைக் கலப்பதில்லை. மேலும் திரைபபடங்களில் வரும் தமிழைப் போலவும் நாங்கள் பேசுவதில்லை.

கபாலியும் சரக்கும்

கபாலியும் சரக்கும்

சரக்கு என்பதை தமிழ்நாட்டில் மது என்ற பொருளில் சொல்கிறார்கள். ஆனால் மலேசியாவில் சரக்கு என்பது பெண்களைக் குறிக்கும் வார்த்தையாகும். இதை கபாலியில் கூட வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார் இயக்குநர் ரஞ்சித்.

மலேசியத் தமிழும் அதன் அர்த்தமும்

மலேசியத் தமிழும் அதன் அர்த்தமும்

கபாலி படத்தில் இடம் பெற்ற மலேசிய தமிழ் வார்த்தைகளும், அதன் அர்த்தமும்.. சாவடி - சூப்பர், தெருக்குவா - மோசமாக, கோசாங் கோசாங் - ஜீரோ ஜீரோ (கபாலி குழுவின் பெயர் அப்படத்தில் 00 என்பதாகும்), காடி - கார், கட்டை - துப்பாக்கி, பூன அழகு - ரொம்ப அழகு, நாசி - அரிசி, செம - அபாரம், டீத் தண்ணி - டீ, பசியாறியாச்சா - சாப்பிட்டாச்சா, கம்போங் - கிராமம், ஆமாவா - அப்படியா, அடல கோழிக்கறி - இன்று நல்ல விருந்து இருக்கு உனக்கு, சடையன் - சீனாக்காரன், பயிக்கிறது - பயன்படுத்துவது, மாத்திரை - போதைப் பொருள், கூத்தாளி - நண்பர்கள், கேஎல் டவுன் - கோலாலம்பூர், கே டவுன்- கஜாங் நகரம், மசுக் - அறிமுகம்.

யார் யார்

யார் யார்

பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். தமிழ்நாடு இதில் அதிகம். அது போக ஆந்திரா, கேரளா, பஞ்சாப் வட இந்தியர்களும் உள்ளனர். வட இந்தியர்கள் மிகக் குறைவு. இவர்கள் தவிர பாகிஸ்தானியரக்ள், இலங்கைத் தமிழர்களும் உள்ளனர். அனைவருமே மேசிய இந்தியர்கள் என்றுதான் அழைக்கப்படுவார்கள்.

தமிழ் பேசத் தெரியாட்டி கேவலம்

தமிழ் பேசத் தெரியாட்டி கேவலம்

மலேசியாவில் வசிக்கும் ஒருவருக்கு தமிழ் பேசத் தெரியாவிட்டால் அவரை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். மலேசிய இந்தியர்கள் அனைவருமே பாகுபாடே இல்லாமல் தமிழ் பேசுவார்கள். தமிழை நன்றாகப் பேசுவார்கள்.

ஜாதி

ஜாதி

மலேசிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது. கிராமத்தைப் பொறுத்து, வேலையைப் பொறுத்து அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இங்கு எஸ்டேட்டுகளின் தலைவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் கவுண்டர்கள்தான். இவர்கள் இந்தியாவில் நிறைய சொத்து வைத்திருப்பார்கள். குவாலா செலாங்கூர் பகுதிப் பக்கம் போனால் தேயிலைத் தோட்டங்களில் அதிக அளவில் கவுண்டர்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

ஜாதி மாறி கல்யாணம்

ஜாதி மாறி கல்யாணம்

ஜாதி மாறிக் கல்யாணம் என்பது இப்போது இங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், தெலுங்கு பேசும் ஒருவரை தமிழ் பேசும் ஒருவர் திருமணம் செய்ய கடும் எதிர்ப்பு உள்ளது. அதே போல கவுண்டர் சமூகத்தவர், செட்டியாரைத் திருமணம் செய்யவும் சிக்கல் உள்ளது. இங்கு வரதட்சணை கேட்பது பெரிய அளவில் இல்லை. சிலர் கேட்கிறார்கள். சிலர் திருமணச் செலவை மட்டும் பங்கிட்டுக் கொள்ளக் கேட்பார்கள்.

கபாலியின் சாதி என்ன?

கபாலியின் சாதி என்ன?

கபாலி படத்தில் கபாலியின் ஜாதி என்ன என்பது குறிப்பிட்டுச் சொல்லியிருக்க மாட்டார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர்தான், கபாலி வேற சாதி என்று கூறுவது போல வரும். அதேபோல கபாலியை தலித் என்று எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், எஸ்டேட்டில் வேலை பார்க்கும் எல்லோருமே தலித் அல்ல என்று ஏற்கனவே நான் சொல்லியுள்ளேன்.

இந்தப் பஞ்சாயத்து வேறு

இந்தப் பஞ்சாயத்து வேறு

இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழரக்ளுக்கும், தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களுக்கும் இடையே வேறு விதமான பிரச்சினை உள்ளது. அதாவது தமிழகத் தமிழர்களை விட தாங்கள்தான் உசத்தி என்ற எண்ணம் இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதுமே உண்டு. தமிழகத் தமிழர்களை விட தாங்கள் நல்ல நிறம், தரம் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் அலுவலக வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். தமிழகத் தமிழர்கள் எஸ்டேட்டுகளில் வேலை பார்க்க அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர். அதேசமயம், இது எல்லோருக்கும் பொருந்தாது.

கபாலி கிளைமேக்ஸ்

கபாலி கிளைமேக்ஸ்

கபாலி கிளைமேக்ஸில் கபாலியை ஜாதி ரீதியாகவும் வீரசேகரன் அவமானப்படுத்துவான். வகுப்பு ரீதியாகவுமி் கேவலப்படுத்துவான். கோலாலம்பூருக்கு இடம் பெயருவதற்கு முன்பு சாதாரண எஸ்டேட் தொழிலாளியாக இருந்தவர் கபாலி. அதேபோல தமிழ்நேசனின் மகனும் கபாலியை ஜாதி ரீதியாக கேவலப்படுத்திப் பேசுவான்., உன்னை எல்லாம் வீட்டுக்குள்ளேயே விட்டிருக்கக் கூடாது என்று கூறி. மலேசியாவில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைத்தான் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே கபாலியின் ஜாதியையும் இதன் மூலமாக மறைமுகமாக அறிய முடியும்.

மலேசிய இந்திய காங்கிரஸுக்குத் தொடர்பில்லை

மலேசிய இந்திய காங்கிரஸுக்குத் தொடர்பில்லை

இந்தப் படத்தில் மலேசிய இந்திய காங்கிரஸையோ அல்லது இந்திய அரசியல் அமைப்பையோ சொல்லும் வகையில் எந்தக் காட்சியும் இல்லை. கூலி உயர்வுக்காக போராடிய எஸ்விகே. மூர்த்தியை நினைவூட்டும் வகையில் நாசர் கேரக்டர் உள்ளது. இவர்களை கேங்க்ஸ்டர் என்று கூற முடியாது. இவர்கள் தொழிலாளர்களுக்காக போராடிய யூனியன்வாதிகள். தொழிற்சங்கவாதிகள். மேலும் கூலி சமச்சீர் தன்மைக்காக குரல் கொடுத்தவர்கள். இப்படிப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர் அருள். இவர் மலேசிய சோசலிச கட்சியின் தலைவர் ஆவார்.

கபாலியின் கதை கற்பனையானது

கபாலியின் கதை கற்பனையானது

கபாலியில் காட்டப்படும் கதையானது கேங்ஸ்டர்கள் திருந்தி உரிமைகளுக்காகப் போராடுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இது கற்பனையான கதையாகும். படத்திற்காக இப்படி மாற்றியமைத்துள்ளனர். ஆனால் மலேசியாவில் உண்மை நிலவரம் இப்படி இல்லை. மேலும் படத்தில் நாசருக்குப் பின்னால் மலேசியாவின முதல் பிரதமர் துங்குவின் படம் மாட்டப்பட்டுள்ளது. எனவே இது சுதந்திற்குப் பிந்தைய மலேசியாவில் நடக்கும் கதை என்று உணர முடியும்.

ஒய்.கே. மேனன் சொன்னதும் கபாலி வசனமும்

ஒய்.கே. மேனன் சொன்னதும் கபாலி வசனமும்

கபாலி படத்தில் நாங்க அடிமைகள் இல்லடா என்று கூறுவார். இது முன்பு தொழிற்சங்க தலைவர் ஒய்.கே.மேனன் சொன்ன நாங்கள் இந்தியர்கள், யாருக்கும் அடிமைகள் அல்ல என்று கூறியதற்கு ஒப்பானதாகும். அதேபோல கோவில்கள் இடிக்கப்படும் விவகாரமும் இன்று வரை மலேசியாவில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. கபாலி படத்தில் ஒரு காட்சியில் கோவில் இடிக்கப்படுவதை ரஜினி தடுத்து நிறுத்துவது போல வரும். இதை மிகச் சிறப்பான முறையில் கையாண்டுள்ளார் ரஞ்சித்.

தாதாக்கள் போதைப் பொருட்கள்

தாதாக்கள் போதைப் பொருட்கள்

19வது நூற்றாண்டில் சீனத் தொழிலாளரக்ள் ஓபியம் புகைப்பது வழக்கம். இதை இங்கிலாந்துக்காரர்கள்தான் கொண்டு வந்து சப்ளையும் செய்தனர். 19வது நூற்றாண்டின் தொடக்கம் வரை போதைப் பொருட்களை நுகர்வது சட்டரீதியாகவே இருந்துள்ளது. ஆனால் வியட்நாம் போரின்போது அமெரிக்க வீரர்கள் ஓய்வெடுக்கவும், போதை பொருட்களை பயன்படுத்தவும் மலேசியாவுக்கு அடிக்கடி வந்தனர். இதனால் இங்கு அது பெருமளவில் பெருகியது. கடத்தலும் அதிகரித்தது. மலேசியாவில் போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை என்று சட்டம் இருக்கும் போதிலும் கூட அது குறைந்தபாடில்லை.

தாதாயிசம்

தாதாயிசம்

மலேசியாவில் தாதாயிசம் எப்போது தொடங்கியது என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால் சீனர்கள்தான் இதை ஆரம்பித்து வைத்தனர். பின்னர்தான் அதில் இந்தியர்கள் இணைந்தனர். பல குழுக்கள் உருவாகின. சீனர்களிடமிருந்து பிரிந்து இந்தியர்கள் தனியாகவும் குழுக்கள் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தாதா கும்பல் இருக்கும். மலேசியாவில் உள்ள தாதாக்கள் குழுவில் உள்ள 70 சதவீதம் பேர் இந்தியர்கள்தான்.

கபாலி கேங்

கபாலி கேங்

கபாலி படத்தில் கோசாங் கோசாங் அதாவது 00 என்ற குழுவை கபாலி வைத்திருப்பார். உண்மையில் 08 அல்லது 04 என்று அழைக்கப்படும் கும்பலைத் தழுவியே இந்தப் பெயரப் சூட்டப்பட்டது. இது இந்தியர்கள் அடங்கிய தாதா கும்பலாகும். அதேபோல டோனி லீயின் கும்பலான 43 என்பது உண்மையிலேயே உள்ள 36 என்ற குழுவின் தழுவல் ஆகும்.

பல வருடங்களாக

பல வருடங்களாக

08 மற்றும் 36 ஆகிய இரு குழுக்களும் பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றன. 60களிலிருந்து இவை இயங்குவதாக கூறப்படுகிறது. இவரக்ளுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். கொலைகள் சர்வ சாதாரணம்.

படித்த டான்கள்

படித்த டான்கள்

கபாலி படத்தில் டோனி லீ மட்டுமே அவரது குழுக்குத் தலைவராக இருப்பது போல காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. மேலும் டான்கள் எல்லாம் நன்கு படித்தவர்களாக, அறிவாளிகளாக இருப்பார்கள். நீட்டாக டிரஸ் செய்திருப்பார்கள்.

குட்டி தாதாக்கள்

குட்டி தாதாக்கள்

ஒரு குழுவுக்கு ஒரு தாதா மட்டும் இருக்க மாட்டார். மாறாக, வீரசேகரன், சம்பத் போன்ற பல ஏரியா வாரியான குட்டி தாதாக்களும் இந்த குழுக்களில் இடம் பெற்றிருப்பார்கள். எனவே இதில் இருப்பவர்கள் எல்லாம் அடியாட்கள் என்று கூறி விட முடியாது. மாறாக, பல தாதாக்கள் அடங்கிய குழு என்று கூறலாம்.

டேபிள் டாக் வர்றியா...

டேபிள் டாக் வர்றியா...

கேங் கூட்டங்கள் பெரும்பாலும் ஏதாவது சீன காபி ஷாப் அல்லது ஹோட்டல்களில் நடக்கும். இந்தக் கூட்டங்களுக்கு டேபிள் டாக் வர்றியா என்று கூறி அழைப்பார்கள். சீன ஹோட்டல்கள், காபி ஷாப்களில்தான் மதுவும் தருவார்கள் என்பதால் அங்குதான் கூட்டம் பெரும்பாலும் நடக்கும். இந்திய ஹோட்டல்களில் மது தர மாட்டார்கள்.

வீரசேகரன்- ஜீவா சந்திப்பு

வீரசேகரன்- ஜீவா சந்திப்பு

இந்த விஷயத்தை ரஞ்சித் கபாலியில் வைத்திருப்பார். அதுதான் வீரசேகரன், தனியாக ஜீவாவை அழைத்துப் பேசும் காட்சி. இருவர் மட்டும்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது டோனி லீயைப் பார்க்க போகும் ஜீவா அவரது காலரை பிடித்து இழுக்கும்போது டோனி லீயின் ஆட்கள் திரண்டு வந்து விடுவார்கள். சீனர்கள் மட்டுமல்லாமல் இந்தியர்களும் அப்போது உடன் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் வீரசேகரனின் ஆட்கள். இப்படிததான் இப்போதும் நிஜமாகவே கூட்டங்கள் நடக்கும். ஏதாவது பிரச்சினை என்றால் துப்பாக்கிச் சூடுதான். ஆனால் பெரும்பாலும் வெளியில்தான் மோதிக் கொள்வார்கள்.

நல்லவர்கள் கிடையாது

நல்லவர்கள் கிடையாது

கபாலி படத்தில் கபாலி மக்களுக்கு நல்லது செய்வது போல காட்சி வரும். ஆனால் உண்மையில் கேங்ஸ்டர்கள் நல்லவர்கள் கிடையாது. இதுபோல செய்யவும் மாட்டார்கள். கபாலி படத்தில் வைக்கப்பட்ட காட்சி கற்பனையானது. வர்த்தக நோக்கத்திற்காக இவ்வாறு இயக்குநர் காட்சியமைத்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் பெரும்பாலான இந்திய கேங்ஸ்டர்கள் இங்குள்ள இந்திய அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பார்கள். அரசியல் தொடர்பு இல்லாமல் இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் அவர்கள் தேர்தலில் கூட நிற்க ஆரம்பித்து விடடார்கள்.

சீனி மரணம்

சீனி மரணம்

படத்தில் சீனி மரணத்தின்போது மிகப் பெரிய அளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாக காட்சி வரும். நிஜத்திலும் இங்கு அப்படிததான் நடைபெறும். சாதாரணாக இறுதி ஊர்வலம் இருக்காது.

7% இந்தியர்கள்.. ஆனால் கேங்ஸ்டர்கள் 70%!

7% இந்தியர்கள்.. ஆனால் கேங்ஸ்டர்கள் 70%!

மலேசியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் 7 சதவீதம்தான். ஆனால் மலேசியாவில் உள்ள கேங்குகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாகும். இதற்குக் காரணம், மலேசியாவில் வசிக்கும் ஏழை இந்தியர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. அவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சரியான கூலி கிடைப்பதில்லை. 15 வயதிலேயே இவர்கள் வேலைக்கு வந்து விடுகிறார்கள். 17 வயதில் கேர்ள் பிரண்ட் கிடைத்து விடுவார். இளம் வயதிலேயே திருமணம், பிள்ளைப் பேறு என குடும்பமாகி விடுகிறார்கள். 15 வயதில் இங்கு இளம் தாய்மார்களைப் பார்க்க முடியும்.

பணத்துக்காக மட்டுமல்ல

பணத்துக்காக மட்டுமல்ல

இங்குள்ள தமிழர்கள் கேங்ஸ்டர்களாக மாறுவது அல்லது அதில் இணைவது பணத்துக்காக மட்டுமல்ல. மாறாக மரியாதைக்காகவும். தங்களுக்கு ஒரு முத்திரை கிடைக்கிறது. நாலு பேர் பார்க்கிறார்கள், பயப்படுகிறார்கள் என்பதால்தான் இவ்வாறு இணைகின்றனர். அதை விட முக்கியமாக ஏழையான நம்மைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெருமிதமாகவும், கர்வமாகவும் கருதுகிறார்கள். சமூக ரீதியாக தங்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைப்பதாகவும் உணர்கிறார்கள்.

மீனாவின் கதை

மீனாவின் கதை

இந்தப் படத்தில் வரும் மீனாவின் கதை இதுதான். போதைப் பொருளுக்கு அடிமையாகி, இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் கதையை மீனா மூலமாக காட்டியுள்ளார் ரஞ்சித்.

வசதி படைத்த இந்தியர்கள்

வசதி படைத்த இந்தியர்கள்

அதேபோல அமீர், பாத்திமா, குமரன் போன்றோர், மலேசியாவில் வசிக்கும் வசதி படைத்த இந்தியர்களின் கேரக்டர்களாகும். இவர்களைப் போன்ற இந்தியர்களையும் இங்கு நிறைய பார்க்க முடியும். அமீர் வீட்டையும், ஜீவா வீட்டையும் பார்த்தாலே வித்தியாசத்தை அறிய முடியும். மலேசிய இந்தியர்கள் மாறுபட்ட பொருளாதார சூழலில் வாழ்ந்து வருவதைத்தான் இப்படிக் காட்டியுள்ளார் ரஞ்சித்.

பல உண்மைகள்

பல உண்மைகள்

இவ்வாறு விவரித்துள்ள விசித்திர மாணிக்கம், கபாலி படத்தில் காட்டப்பட்டும் பல காட்சிகள் உண்மையின் பிரதிபலிப்பு என்றும் சில வர்த்தக நோக்கத்திற்காக வைக்கப்பட்டவை என்றும் விளக்கியுள்ளார். மலேசியாவுக்குப் போய் வந்த உணர்வைத் தருகிறது இவரது பதிவு.

நீங்களும் படித்துப் பாருங்கள்:

English summary
Visithra Manikam, A Malaysian Indian has narrated about the life of Malaysian Indians and Kabali movie in an article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X