சங்கரராமன் படுகொலைக்குக் காரணமான கதிரவனைப் போட்டு தள்ளிய காது குத்து ரவி- பகுதி 8

By: Prabha
Subscribe to Oneindia Tamil
  சங்கரராமன் கொலை வழக்கு-காஞ்சி சங்கராச்சாரியார் வாக்குமூல வீடியோ

  - மெட்ராஸ்காரன்

  'எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரை நாம் ஆளனும். நாம் யார்னு தெரியனும். சிம்பிள் ஆனா பவர்ஃபுல்' - 'காக்க காக்க' படத்தில் ரவுடி பாண்டியா பேசும் வசனம் இது.

  இந்த வார்த்தைகளுக்கு அச்சுப்பிசகாமல் வாழ்ந்து வருகிறார் ரவுடி காதுகுத்து ரவி. கொலை, கட்டப் பஞ்சாயத்து என முறைகேடான வழியில் சேர்த்த 11 கோடி ரூபாயை, அமலாக்கத்துறையே முடக்கியது ரவியின் கிரைம் ஹிஸ்டரியில் மிக முக்கியமானது.

  ' பெரிதினும் பெரிது கேள்' என்பதுதான் ரவியின் ஒன்லைன் பாலிசி. அந்தளவுக்கு பெரும் வருமானம் வரக் கூடிய கொலைகளும் பஞ்சாயத்துகளும்தான் அவருடைய டார்கெட். காஞ்சி சங்கரராமன் படுகொலைக்குக் காரணமான கதிரவனைப் போட்டுத் தள்ளியது முதல் கட்டப் பஞ்சாயத்து படுகொலைகள் வரையில் ரவியின் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள் ஒருகாலத்தில் வடசென்னையில் கோலோச்சிய ரவுடிகள்.

  காது கம்மல்தான் காரணம்

  காது கம்மல்தான் காரணம்

  வியாசர்பாடிதான் ரவுடி காதுகுத்து ரவிக்குப் பூர்வீகம். 1986-ம் ஆண்டுகளில் காதுகளில் கம்மல் போட்டுக் கொண்டு ஆண்கள் யாரும் வலம் வந்ததில்லை. காதில் கம்மலோடும் ரவுடிக்குரிய கெத்தோடும் வலம் வந்ததால், பெயருக்கு முன்னால் காதுகுத்து ரவி சேர்ந்துகொண்டது. ஐந்து முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெருமைக்குரியவர். சங்கரராமன் படுகொலைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் அப்பு. இவருடைய ஆதரவாளரான கதிரவன், 2013 ஏப்ரல் மாதம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கதிரவன் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 70 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கதிரவன் குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, ' காதுகுத்து ரவியின் மூன்றாவது மனைவியும் சில பெண்களும் இந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தனர். ரவியின் பெயரை யார் கேட்டாலும் சொல்லக் கூடாது' எனக் கண்டிஷன் போட்டதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண்களைக் கைது செய்து விசாரித்தது போலீஸ். குடும்பத்துப் பெண்களை போலீஸ் கைது செய்ததை அறிந்த ரவி,வேறுவழியில்லாமல் போலீஸில் சரண் அடைந்தார்.

  கதிரவனை சாய்த்த ரவி

  கதிரவனை சாய்த்த ரவி

  ' வடசென்னை ரவுடிகள் எல்லாம் அப்பு சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்து வந்தனர். சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு அப்புவின் பெயர் பிரபலமானது. ரவுடிகள் சின்னா கோஷ்டிக்கும் வெள்ளை உமா கோஷ்டிக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சின்னாவை, உமா கோஷ்டி போட்டுத் தள்ளியது. எனக்கும் உமாவுக்கும் ஆகாது என்பதால், சின்னா ஆட்கள் என்னிடம் வந்தனர். 2011ல் அந்தக் கோஷ்டியோடு நேரடியாக மோதினேன். இதில் வெள்ளை உமா கொல்லப்பட்டான். உமாவுக்குப் பண உதவி செய்து வந்தது கதிரவனும் அப்புவும்தான். என்னைப் போட்டுத் தள்ளுவதற்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், கதிரவனையும் அப்புவையும் கொல்ல நேரம் பார்த்துக் கிடந்தேன். அப்பு வெளியூர் சென்றுவிட்டதால், கதிரவனைத் தீர்த்துக் கட்டினோம். இந்த வழக்கில் வெங்கடேசன் உள்பட 8 பேரை சரணடைய வைத்தேன். கதிரவன் குடும்பத்துக்கும் பணம் கொடுத்து அனுப்பினேன். ஆனால், போலீஸில் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டனர்' எனப் போலீஸில் வாக்குமூலம் கொடுத்தார் காதுகுத்து ரவி.

  ரவிக்கு பயந்து ஓடிய சாகுல்

  ரவிக்கு பயந்து ஓடிய சாகுல்

  வடசென்னையைப் பொறுத்தவரையில், ரவுடிகளுக்குள் தகராறு ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணமே மாமூல்தான். கொருக்குப்பேட்டை கூட்ஷெட் முதல் கண்டெய்னர் வரையில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். செம்மரக் கடத்தல், ரியல் எஸ்டேட் என சம்பாதிக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பல நூறு கோடிகளை சம்பாதித்த சாகுல் என்பவர், வெள்ளை உமா கோஷ்டிக்குப் பணத்தை வாரிக் கொடுத்தவர். உமா மரணத்துக்கு பிறகு, சாகுலை கொலை வெறியோடு தேடிக் கொண்டிருந்தார் ரவி. ' இந்த ஊரில் இருந்தால் உயிரோடு வாழ்வது கஷ்டம்' எனத் தெரிந்து கொண்ட சாகுல், துபாய் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

  ரவியின் டார்கெட் ரூ50 கோடி

  ரவியின் டார்கெட் ரூ50 கோடி

  நிலமோசடி, ஆள்கடத்தல், கொலை, கட்டப் பஞ்சாயத்து என எதை எடுத்தாலும் சிறிய ரக தகராறுகளில் ஈடுபடுவது ரவியின் வழக்கம் அல்ல. குறைந்தபட்சம் 50 கோடிக்கும் அதிகமான பஞ்சாயத்து என்றால்தான் களமிறங்குவார். ' சின்ன பஞ்சாயத்துகளில் ஈடுபட்டால் எளிதில் சிக்கிவிடுவோம். பெரிய பஞ்சாயத்துகளில் பணமும் கிடைக்கும். போலீஸ் தொல்லை வந்தால், கொடுப்பதற்கும் போதிய பணம் இருக்கும். வருடத்துக்கு இரண்டு மூன்று பஞ்சாயத்துகள் கிடைத்தால் போதும்' என்பதுதான் ரவியின் ஃபார்முலா. இப்படிச் சேர்ந்த பணத்தில்தான் 11.68 கோடியை அமலாக்கத்துறை முடக்கியது. போலீஸாரின் தொடர்ச்சியான வேட்டை காரணமாக, அண்டை மாநிலம் ஒன்றில் அடைக்கலமாகியிருக்கிறார் காதுகுத்து ரவி. அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு சில ரவுடிகள் இப்போதும் வடசென்னையை வலம் வருகிறார்கள்.

  பகுதி [1][2][3][4][5] [6][7] [8]

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  This Column on Chennai Rowdies Crime History of past few years.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற