• search

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இனி நிறைவேற்ற வேண்டியது!- வீடியோ

   சென்னை: மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்களுக்கு,

   எத்தனை வருடங்கள்... எத்தனை இடையூறுகள்... எத்தனை சமாளிப்புகள்.. எத்தனை விமர்சனங்கள்... எல்லாவற்றையும் பொறுமையான அனுகுமுறையால் தவிடுபொடியாக்கிவிட்டு இதோ உச்சத்துக்கு வந்து நின்றுவிட்டீர்கள்!

   ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் என்பது அதன் நெறிமுறைக்கு எதிரானதுதான். அதே நேரத்தில் வாரிசு அரசியலில் சாதகங்களும் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் வாரிசு அரசியலில் ஜனநாயகத்துக்கு சாதகமானவராகவே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த உயர்நிலை என்றோ கனிந்து கைகளில் கிட்டியிருக்க வேண்டும். "இவருக்கு பின் இவர்தான்" என்ற முடிவு தமிழக மக்களுக்கு என்றோ தெரிந்துவிட்டது. ஆனால், அதை எப்போது கருணாநிதி அறிவிக்கப் போகிறார் என்று தெரியாமல்தான் நாட்கள் எதிர்பார்ப்புடன் பறந்தன.

    திமுக என்ன சங்கர மடமா?

   திமுக என்ன சங்கர மடமா?

   "திமுக என்ன சங்கரமடமா.. வாரிசுகளை நியமனம் செய்ய?" என்று ஒரு காலத்தில் கருணாநிதி கேட்டார். ஆனால் அதே கருணாநிதிதான், "எனக்கு பின் வழிநடத்தப் போகிற தம்பி ஸ்டாலின் அவர்களே" என்று மக்கள் முன்னிலையில் வார்த்தைகளை சிதறடிக்க, கைத்தட்டல்களோ விண்ணை பிளக்க... திமுகவின் அடுத்த வழிகாட்டி யார் என்பதை நாடே அறிய வகை செய்தது.

    அழகிரி விஷயத்தில்...

   அழகிரி விஷயத்தில்...

   கருணாநிதி அப்படி சொல்லிவிட்டாரே தவிர, தலைமைப் பொறுப்பினை உடனே தூக்கி உங்களிடம் தந்துவிடவில்லை. ஏன் பொறுப்பு எனக்கு தரவில்லை என்று நீங்கள் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட யாருமே கருணாநிதியை கேட்டதில்லை. இருந்தாலும் பொறுப்பும், பதவியும் குறித்த அனுமானம் காரணமாக அழகிரி விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே நீங்கள் எச்சரிக்கையாக இருந்தீர்கள்!

    கனிமொழி சமாச்சாரம்

   கனிமொழி சமாச்சாரம்

   கனிமொழி சமாச்சாரத்தில் எதிர்ப்பும் பகையும் இல்லாத ஒரு நடுநிலையை கடைப்பிடித்து வந்திருக்கிறீர்கள்! கூடவே உங்களது ஆதரவாளர்களையும் உங்களுடன் இருக்குமாறும். அதேசமயம், அழகிரி பக்கம் உள்ளவர்களை உங்கள் பக்கம் இழுத்து கொள்ளும் சாமர்த்தியத்தையும் அவ்வப்போது செய்துகொண்டுதான் வந்தீர்கள்! ஒருகட்டத்தில் கடுமையான களப்பணியில் இறங்கி செயல்பட துவங்கினீர்கள். எப்போது நீங்கள் களப்பணியில் இறங்கினீர்களோ, அப்போதே திமுகவின் தலைமையை ஏற்கும் தகுதியை அடைந்துவிட்டீர்கள்.

    பக்குவமுள்ள தலைவர்

   பக்குவமுள்ள தலைவர்

   அதேசமயம் எதிர்க்கட்சிகளை தரக்குறைவான வார்த்தைகள் இன்றி நாகரீக பாணியில் விமர்சனங்களை வீசி தான் ஒரு பக்குவமுள்ள தலைவர் என்பதையும் ஊன்றிக் கொண்டே வந்தீர்கள்! இதுவரை வாரிசு அரசியலை எடுத்து கொண்டால், இந்தியாவிலேயே ஒரு குடும்பத்திலிருந்து அதிகம் பதவியை நிர்வகித்தது உங்கள் குடும்பத்தில்தான்! ஆனால் அது தயாநிதி மாறன் ஆகட்டும், கனிமொழியாகட்டும், வெகுசீக்கிரத்திலேயே தங்களது பதவிகளை கருணாநிதியின் செல்வாக்கினை கொண்டு களம் கண்டுவிட்டார்கள்! ஆனால் நீங்கள் இன்று பொறுப்பேற்கும் பதவிக்கு வர 45 வருட காலம் கழக பணியாற்ற வேண்டியிருந்தது.

    திமுகவின் 'ஐகான்'

   திமுகவின் 'ஐகான்'

   "செயல் தலைவர்" என்ற பதவி வரை உறுதுணையாக உங்களுடன் கூடவே வந்த கருணாநிதி, கடைசி வரை "திமுக தலைவர்" என்ற பதவியை அதிகாரப்பூர்வமாக தராமலேயே போய்விட்டார். ஆனால் உங்களது கடுமையான உழைப்பு எனும் அஸ்திவாரத்தில் திமுக இன்னும் வேரூன்றிவிட்டது! பலம் பொருந்தி உயர்ந்துள்ளது! விளைவு... இன்று திமுகவின் ஒரு ஐகான் அந்தஸ்தை பெற்றுவிட்டீர்கள். உழைப்பு.. சொந்த முயற்சி.. முறையான தேர்தல்.. இவைகளுக்கு பின்தான் இந்த சிம்மாசனத்தை அடைந்துள்ளீர்கள்.

    வலிமையான கூட்டணி

   வலிமையான கூட்டணி

   இனிதான் தோளில் சுமை கூடியுள்ளது.. கட்சிக்குள் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சிக்கு பெரும் சவாலையும் நெருக்கடியையும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வரப்போகும் இடைத்தேர்தல்களை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் கவனமாக செயல்பட்டாக வேண்டும். அதேபோல, அதிமுக இப்படி பிளவுபட்டு கிடக்கும் சூழலில் உங்கள் கட்சியின் வலிமை அதிகரிக்க வேண்டும். விரைவில் தேர்தல் களம் காணும் நீங்கள் வலிமையான கூட்டணியை கோர்க்க வேண்டும்.

    அச்சுறுத்திய ஜெயலலிதா

   அச்சுறுத்திய ஜெயலலிதா

   இதுபோன்ற நேரங்களில் நீங்கள் இரண்டு விஷயங்களை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை சட்டசபையில் திமுகவினரை பார்த்து கேட்டாரே, "எங்கே உங்கள் தளபதி.. ஓடி ஒளிந்துவிட்டாரா? யாருக்கும் தெரியாமல் வருகிறார்... யாரும் பார்க்காத நேரத்தில் கிளம்பி விடுகிறார்?" என்று. அதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.

    உங்களை காத்த சிட்டிபாபு

   உங்களை காத்த சிட்டிபாபு

   மற்றொன்று, 1976-ம் ஆண்டு மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, உங்கள் மீது அடி விழாமல் தடுத்த குற்றத்திற்காக பூட்ஸ் கால்களால் மிதிப்பட்டு, உதைபட்டு, காயங்களுடன் உயிரிழந்தாரே மேயர் சிட்டிபாபு.. அப்படி உங்கள் உயிரைக் காத்த பெருமை மிகு திமுகவையும் உங்களுக்காக உயிரையும் கொடுக்க துணியும் தொண்டர்களின் நலனை காப்பதும்தான் உங்களின் பணி என்பதை நினைத்து கொள்ளுங்கள்.

    இட ஒதுக்கீடு

   இட ஒதுக்கீடு

   ஆனால் நீங்கள் இனி தொடர போகும் பாதையில், ஒரு சில விஷயங்களை சரி செய்து கொண்டால் அது தொண்டர்களுக்கு மிகவும் உதவியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். குறிப்பாக, இடஒதுக்கீட்டை தொடர்ந்து வலிறுத்தி வரும் கட்சி திமுக ஆகும். இட ஒதுக்கீடு குறித்த ஒரு பாரம்பரியம் கட்சியில் உள்ளது. மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலும் இந்த இடஒதுக்கீட்டினை இனி கடைப்பிடிக்க வேண்டும். தலித் அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும் இந்த கொள்கையை வலியுறுத்திதான் திமுக மீது உரிமையுடன் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள். திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இன்னமும் அடிமட்ட தொண்டர்களாகவே உள்ளனர். ஆனால் நீண்ட காலத்திற்கு குறிப்பிட்டவர்களே கட்சியில் பொறுப்பை வகிக்கும் போக்கு இனியாவது மாற வேண்டும்.

    பயிற்சி பட்டறை

   பயிற்சி பட்டறை

   திமுக தொண்டர்களை கொள்கை ரீதியாக வளர்த்தெடுக்க திமுக சார்பில் மாவட்டந்தோறும் ஒரு பயிற்சி பட்டறை நடத்தினால் உதவியாக இருக்கும். கட்சியில் சேரும் இளைஞர்கள் அனைவரும் எந்த அளவுக்கு கட்சியை தெரிந்து வைத்திருக்கிறார்கள், புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த பயிற்சி பட்டறை மூலம் தெரிந்து கொள்ளவும் முடியும். அதேசமயம், சமூகவலைதளங்களை பொறுத்தவரை மாற்றுக் கட்சியினர் அளவுக்கு அதிகமாக வசைபாடுவதும், அவதூறு தூற்றுவதும், திமுக தொண்டர்கள்தான் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த பயிற்சி பட்டறை மூலம் தொண்டர்களுக்கு அரசியல் நாகரீகம் கற்பிக்கப்பட்டால், அது கட்சியின் வளர்ச்சிக்கு பலமாக இருக்கும் என்பது சந்தேகமில்லை.

    பயணம் இனிதே தொடரட்டும்

   பயணம் இனிதே தொடரட்டும்

   இனி, நீண்ட மற்றும் நெடிய ஆட்சிப் பயணத்தை ஆழ்ந்த ராஜதந்திரம், ஆட்சி நிர்வாகம், ஸ்தாபன முதிர்ச்சி, தொலைதூரப் பார்வை, மாற்றாரின் கடும் விமர்சனங்களையும் சகித்து கொள்ளும் பக்குவம், தொலைதூர நோக்கோடு திட்டமிடுதல், அதற்காக சுறுசுறுப்பாக செயல்படுதல் என தொடர்ந்து களம் கண்டு வெற்றியடைய உங்களின் பயணம் இனிதே தொடரட்டும்!!

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   DMK Cadre Letter written to MK Stalin

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more