For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக்கேட்பதில் மார்க்சிஸ்ட் எப்போதும் தயங்கியது இல்லை: ஜி.ராமகிருஷ்ணன்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக்கேட்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயங்கியது இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் 18.12.2015 அன்று எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில், "தற்போதைய மழை நீர் வெள்ள பிரச்சனைக்கு ஒரு சிலர் திமுக ஆட்சியையும் சேர்த்து குறை சொல்கிறார்களே?, குறிப்பாக "நால்வர் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பி அதற்கு "அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், திமுகவை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே அதிமுகவை விமர்சிக்கிறார்கள் அவர்களுடைய உள்நோக்கமும் கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து வருகிறது" என்று பதிலும் சொல்லியிருக்கிறார்.

g-ramakrishnan-allegation-on-dmk-admk

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணியை, நால்வர் அணி என்று கூறியிருப்பதன் மூலம், திமுக விரும்புகிற மாதிரி ஒரு கூட்டணியை அமைக்க முடியாது போய்விட்டதன் விரக்தி வெளிப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக்கேட்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயங்கியது இல்லை என்பதை கருணாநிதி நன்கறிவார். திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கண்ட காலத்திலேயே கூட திமுகவிடம் தவறு என்று பட்டதை பளிச்சென்று சொல்லுகிற நேர்மையும், துணிவும் வெளிப்பட்டதை அவர் அறிவார்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து 10.12.2015 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இந்த அரசாங்கத்தின் மீது கிரிமினல் நெக்லிஜென்ஸ் என்று குற்றம் சாட்டியது. முதலமைச்சர்தான் ஏற்பட்ட பேரிடருக்கும், உயிரிழப்பிற்கும், பெரும் பொருள் இழப்பிற்கும், மக்களின் நீங்காத பயத்திற்கும் பொறுப்பு என்று நேரிடையாக விமர்சனம் வைத்தது. அதன் பிறகுதான் திமுகவே கூட அத்தகைய நிலைபாட்டை எடுத்தது. அதைத் தொடர்ந்து அஇஅதிமுக அரசாங்கம் பதவி விலக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியது. இதுவெல்லாம் "அதிமுக அரசை நேரிடையாக விமர்சிக்க அஞ்சுபவர்கள்"எடுத்த நிலைபாடு என்று கருணாநிதியால் கூறமுடியுமா?

தவிரவும் அவர் சொல்லியிருப்பது போல திமுகவும் இந்நிலைக்கு காரணம் என்ற விமர்சனத்தை ‘சிலர்' அல்ல, பல பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளதை வசதியாக மறந்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விமர்சிப்பதாக சொல்லுவது பிரச்சனையை திசை திருப்புவதாகும். சந்தேகமேயில்லாமல் தற்போதைய வெள்ளம் அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பு ஆகியவற்றுக்கு அதிமுக அரசின் செயலற்ற தன்மைதான் காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகவும், அழுத்தமாகவும், எவ்வித தயக்கமுமின்றியும் தெரிவித்துள்ளது.

ஆனால், இதையும் தாண்டி கூவம், அடையாறு இன்னும் பிற நீர் நிலைகள் பல அரசியல் செல்வாக்குள்ள நபர்களின் கல்வி நிறுவனங்களாகவும், வீடுகளாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பெருநிறுவனங்களின் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதும் அதனால் ஆறுகளின் கொள்ளளவும், போக்கும் மாறியிருப்பதும் ஒரு அடிப்படையான காரணம். இவையனைத்தும் கடந்த நாலரை ஆண்டுகளில் மட்டுமே நடந்தது என்று திமுக தலைவர் சொல்ல முனைகிறாரா? திமுக ஆட்சியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகாரத்தில் இருந்தோரால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவரால் மறுக்க முடியாது.

எனவே வெள்ளத்தின் பாதிப்பை குறைக்கத் தவறியது அதிமுக அரசின் உடனடிக் குற்றம். ஆக்கிரமிப்புகளை அனுமதித்ததும், நீர்நிலைகளும், புறம்போக்குகளும், பெருநிறுவனங்களுக்காக பட்டா கொடுக்கப்பட்டதும் இரண்டு ஆட்சியிலும் நடந்த கடுமையான குற்றங்கள். இவையெல்லாம் திமுக ஆட்சியில் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா? எனவேதான் கருணாநிதி அவருடைய அறிக்கையில் ஆக்கிரமிப்புகள் பற்றி பேச மறுக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புவது தமிழக மக்களின் இந்த துயரங்களுக்கு, வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு அதிமுக உடனடி காரணம், அதிமுக, திமுகவும் தொடர்ச்சியான காரணம்.

கருணநிதி அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கேள்விகளை பல்வேறு நேரங்களில் முன்வைத்திருக்கிறது. சேஷசமுத்திரம் தலித் மக்கள் குடிசைகளும், கோயில் தேரும் எரிக்கப்பட்ட போது கருணாநிதி அவர்களும், திமுகவும் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டிருக்கிறோம். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறவில்லை என்று அரசு சொல்லும் போது அதை மறுத்துக் கூறாமல் இன்று வரையிலும் திமுக மௌனம் காப்பது ஏன்? என்று கேட்டிருக்கிறோம். ஆற்று மணலும், தாது மணலும் திருடியவர்கள் மீது இந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, முன்பிருந்த திமுக அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறோம்.

மேலும், கிரானைட் முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்துள்ளது என்றும் இதனால் அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆண்டு காலம் என்பதில் திமுக ஆட்சியும் உண்டு. இந்த கேள்விகளுக்கும் கருணாநிதி மௌனம் சாதிப்பது ஏன் என்று கேட்டிருந்தோம். கருணாநிதி மௌனம் கலைத்து கருத்துக் கூறுவார் என்று நம்புகிறோம்

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
CPM steate secretary G Ramakrishna Allegation on Dmk and Admk party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X