For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருபூஜைக்கு தடை... 144 உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது: அரசுக்கு ஹைகோர்ட் அறிவுரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Govt can ban Guru poojas, rules Madras HC
சென்னை: குருபூஜைகளை தடை செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்; முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை என்ற பெயரில் இப்போதுள்ள மக்களைக் கொடுமைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இம்மானுவேல் சேகரன், ஒண்டிவீரன், பூலித்தேவன் ஆகியோரின் குருபூஜைக்கு வெளியூரிலிருந்து ஆட்கள் வர அனுமதி வழங்கக்கோரி 3 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அவற்றைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

தென் தமிழகம் சாதி அடிப்படையில் அதிக உணர்வு உள்ள பகுதியாகும். எனவே, சாதி மோதலைத் தூண்டும் நிகழ்ச்சிகள் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

சாதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இயக்கங்கள் அடிக்கடி தலை தூக்குவது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சாதித் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு குருபூஜை என்று பெயரிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்களின் பலத்தை மற்றவர்களுக்கு காட்டுவதாக நினைக்கிறார்கள்.

தலைவர்களும் தியாகிகளும் சாதி அடிப்படையில் இல்லாமல் அனைவராலும் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. இதன் மூலம் அந்த தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் என்று முத்திரை குத்தப்படுகிறது.

சமூக பிரச்சினை

சிறிய பிரச்னைகள்தான் பூதாகரமாக உருவெடுத்து பெரிய பிரச்னையாக மாறுகிறது. இந்த குருபூஜைகளை அரசியல்வாதிகளும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மக்கள் நலன் முக்கியம்

இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரங்களும் ஏராளமாக செய்யப்படுகின்றன. எனவே, மக்களின் நலன்கருதி அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் இருப்பார்கள் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

தலையிட முடியாது

குருபூஜைகள் நடக்கும்போது வெளியூரிலிருந்து வருபவர்களின் கோஷம் போன்றவற்றால் பிரச்னைகள் ஏற்படுவதால்தான் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பொதுவாக நீதிமன்றம் தலையிட முடியாது.

குரு பூஜைகளுக்குத் தடை

எனவே, குருபூஜைகளால் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமலிருக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நீதிமன்றம் அரசுக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இதன்படி, குருபூஜைகளுக்கு தடை விதிக்க அரசு பரிசீலிக்க வேண்டும். குருபூஜையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சாதித் தலைவர்களுக்கும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்.

அன்னதானம் கொடுக்கலாம்

தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் மரியாதை செலுத்த விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் தியாகிகளின் நினைவிடங்களுக்குச் செல்லாமலேயே மரியாதை செலுத்தலாம். இந்த நிகழ்ச்சி காலங்களில் அவர்கள் ஏழைகளுக்கு உணவு வழங்குதல், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்குச் சென்று ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யலாம். தலைவர்களின் நினைவிடங்களுக்குச் செல்லும் பயணச் செலவைக்கூட சமுதாய சேவைக்கு பயன்படுத்தலாம்.

தொந்தரவு செய்யாதீர்கள்

தொண்டர்கள் பயனுள்ள பணிகளில் தங்களை ஈடுபடுத்தலாம். இந்த நடவடிக்கைகள் மூலம் தேசத் தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கவுரவப்படுத்தலாம். முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இப்போதுள்ள சாதாரண மனிதனுக்கு தொந்தரவு கொடுப்பதோ, காயமடையச் செய்வதோ, கொடுமைப்படுத்துவதோ கூடாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

9 அறிவுரைகள்

குருபூஜைகளுக்குத் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த பூஜைகளை குறைந்த அளவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களும் சாதித் தலைவர்களும் பூஜைகளில் கலந்துகொள்ள வருவதற்கு தடை விதிக்க வேண்டும். பத்திரிகைகள் இதுபோன்ற குருபூஜைகள் குறித்து விளம்பரம் மற்றும் செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

கூட்டங்களுக்கு தடை

குருபூஜை நடைபெறும் மாதங்களில் சாதித் தலைவர்களின் வெறுக்கத்தக்க உரைகள், ஆட்சேபனைக்குரிய கோஷங்கள், கோபத்தைத் தூண்டக்கூடிய பேச்சுகள் தடை செய்யப்பட வேண்டும்.

குருபூஜை தொடர்பாக பேனர்கள் கொண்டுவருவது, போஸ்டர்கள் ஒட்டுவது, சுவர்களில் எழுதுவது தடை செய்யப்பட வேண்டும்.
குருபூஜைகளுக்கான ஆயத்த கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். பேரணி மற்றும் அதிக மக்கள் கூடுவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தடுக்க வேண்டும்.

வாகனங்களுக்கு தடை

குருபூஜைகளுக்கு செல்ல வாகனங்களை வாடகைக்கு விடுவதற்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டதுபோல் வரும் ஆண்டுகளிலும் தடை விதிக்க வேண்டும்.

அனைத்து தரப்பு சாதியினரிடமும் சுமூகமான நல்லுறவு ஏற்படும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக சேவகர்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் அடங்கிய அமைதிக்குழு உருவாக்கப்படவேண்டும்.

English summary
Madras HC has asked the govt to consider to slap ban on Guru poojas, which are creating law and order issues in some districts, it observed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X