For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: யாருக்கும் தெரியாது என்ற நினைப்புதான் பாலியல் குற்றங்களுக்கு காரணம்... திலகவதி ஐபிஎஸ்

அறியாமையே அனைத்துக்கும் காரணம் என திலகவதி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திலகவதி ஐபிஎஸ் பேட்டி வீடியோ

    சென்னை: என்னதான் மனித சமூகம் நாகரிகமடைந்துவிட்டது, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, ஹைடெக், ஸ்மார்ட்போன், ஷாப்பிங் மால்ஸ், என எத்தனை நவநாகரீகங்கள் பெருகிவிட்டன என்றாலும் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் சின்னஞ்சிறு நிர்பயாக்களுக்கும் தீர்வு ஒன்றையுமே காணோம். முடிவில்லாமல் தொடரும் இந்த பயங்கரவாதத்தைவிட கொடியதான இந்த பாலியல் வன்புணர்வுக்கு என்னதான் தீர்வு? என்னதான் குறை தமிழகத்தில்? என்ன செய்தால் இதுபோன்ற வெறிபிடித்த மிருகங்களிடமிருந்து பிஞ்சுகளை பாதுகாக்கலாம் என்பது குறித்து தீர்வை நோக்கி பயணிக்க எண்ணினோம்.

    அந்த தீர்வுகளை யாரிடம் கேட்கலாம் என்று நினைத்தபோது, முதலில் நம் மனதில் வந்து நின்றவர் பெண்ணியம் குறித்த கருத்துக்களை துணிச்சலாகவும், யதார்த்தமாகவும், எளிமையாகவும், எந்த இடத்திலும் தயக்கமின்றி சொல்லக்கூடியவரான திலகவதி ஐபிஎஸ் அவர்கள்தான். தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறந்த பேச்சாளருமான திலகவதியிடம் இத்தகைய கேள்விகளை ஒன் இந்தியா தமிழ் சார்பாக முன்வைத்தோம். அவர் அளித்த சிறப்பு தகவல்கள்தான் இவை. அதுமட்டுமல்ல... எதிர்கால பிஞ்சுகளை கொடூரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக ஒன் இந்தியா எடுத்த சிறு விழிப்புணர்வு முயற்சியும் கூட. இதோ திலகவதி பேசுகிறார்:

    "சமீபத்தில் நமது பார்வைக்கு வந்திருக்கக்கூடியது அயனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம். இது அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக இது நடந்துள்ளது. இதில் இதுவரை 24 பேர் குற்றவாளிகளாக கவனத்திற்கு வந்துள்ளனர். அதிலும் 23 வயதிலிருந்து 66 வயது வரையுள்ளவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் இந்த வக்கிரத்துக்கு உடன்போயுள்ளனர். இதையெல்லாம பார்க்கும்போது சமூகம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கவலை நமக்கு ஏற்படுகிறது. காலம் மாறி கொண்டே செல்கிறது. அதற்கேற்றார்போல், சமூக ஒழுக்க நியதிகளிலும், கட்டுப்பாடுகளிலும், சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கற்றுத்தர வேண்டும். அதேபோல பாதுகாப்பு முறைகளையும் நாம அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். 300 குடும்பங்கள் கொண்ட ஒரு அமைப்பு என்பது ஒரு சின்ன கிராமம் மாதிரி. சிக்கனம் பார்க்காமல் அடுக்குமாடி குடியிருப்புகள், ஜிம், போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

    குடியிருப்போர் குழந்தைகள் நல சங்கம்

    குடியிருப்போர் குழந்தைகள் நல சங்கம்

    பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஒரு கமிட்டியை போட வேண்டும் என அரசு சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இங்கு அந்த சட்டம் கடைப்பிடிக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, நிறைய இடங்களில் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளனவே தவிர, குடியிருப்போரின் குழந்தைகள் நல சங்கம் என ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதேபோல, குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டி நிறைய சட்டங்களும் அமைப்புகளும் உள்ளன. பாலியல் வன்கொடுமைகளுக்கு 2012-ல் போக்சோ என்னும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டது. இதன் விளைவாக குற்றங்களும் குறைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்கூட 12-லிருந்து 16 வயதான பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினால் மரண தண்டனை கூட அத்தகைய குற்றவாளிகளுக்கு வழங்கலாம் என்றும் ஒரு மசோதா தாக்கலாகியுள்ளது.

    அனைத்துக்கும் காரணம் அறியாமையே

    அனைத்துக்கும் காரணம் அறியாமையே

    ஆனால் இதுபோல சட்டங்கள் எல்லாம் இயற்றப்பட்டிருக்கின்றன என்பது இத்தகைய பாலியல் தொல்லை தருவோருக்கு தெரிவதில்லை. காரணம், தாங்கள் இந்த பாலியல் துன்புறுத்தல்களை எல்லாம் ஒரு ரகசிய இடத்தில் வைத்து நடத்துகிறோம், யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, அதனால் தப்பித்துவிடலாம், பெண் குழந்தைகளையும் கொலை செய்வதாக பயமுறுத்தி வைத்துள்ளோம், நம்மைகண்டாலே அந்த குழந்தை நடுங்குகிறது, அதனால் விஷயம் வெளியே வராது என்கிற தைரியம்தான் அடுத்தடுத்து தவறுகளை செய்ய தூண்டுகிறது. இதற்கு அனைத்து மட்டங்களிலும் உள்ள அறியாமைதான் முக்கிய காரணம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குற்றவாளிகள், பாலியலுக்கு பலியாவோரின் மட்டத்திலும் இந்த அறியாமைதான் உள்ளது.

    தயக்கமின்றி புகார்தர வேண்டும்

    தயக்கமின்றி புகார்தர வேண்டும்

    ஒரு வழக்கு சம்பவம் நினைவுக்கு வருகிறது. வாழப்பாடி என்று நினைக்கிறேன். ஒரு குடிசை வீட்டினுள் நுழைந்த நான்கைந்து பேர், அங்கிருந்த ஒரு 5 வயது சிறுமியை தூக்கி கொண்டு போய் ஒரு குகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அதில் அந்த சிறுமி இறந்தும் விடுகிறாள். இதுகுறித்து புகார் அளிக்க பெற்றோர் தயங்குவதாக தகவல் வந்தது. இதேபோல பள்ளி ஆசிரியர்களும் இதேபோல குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி நிரூபணமும் ஆகியுள்ளது. இதுமிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது. ஒழுக்கத்தை கற்பித்து தரக்கூடிய கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது ஜீரணிக்கவே முடியவில்லை. இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தால் ஆசிரியர் மீது புகார் கொடுக்க செல்ல முயல்கிறார்கள். அப்போது, குற்றவாளி ஆசிரியருடன் பணிபுரியும் 3 பெண் ஆசிரியைகளும் அந்த பெற்றோரை புகார் தர வேண்டாம் என தடுக்கின்றனர். பெண்களாக இருந்தும்கூட, ஒரு ஆசிரியையாக இருந்தும்கூட மனசு பதறவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள்ளன.

    வக்கிரப்பட்டு போய்விட்ட மனம்

    வக்கிரப்பட்டு போய்விட்ட மனம்

    இதற்கு முக்கிய காரணம், எல்லாருக்கும், எல்லா இடத்திலும், எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய மதுவும், போதைப்பொருட்களும்தான். இது அத்தகைய மக்களுக்கு ஒரு மயக்க மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எண்ணங்களை குலைத்து போட்டுவிடுகிறது. இதற்கு அடுத்த காரணம், பாலியல் தொடர்பான பல புகைப்படங்கள், வீடியோக்களும்தான். இவை எல்லோரும் பார்க்ககூடிய வகையிலேதான் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலானோர் கைகளில் தற்போது ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதில் ப்ளூபிலிம்கள் முதல்கொண்டு அனைத்தையும் பார்த்து பார்த்து மனம் வக்கிரப்பட்டுபோய்விட்டது. பெண்கள் மீதான மரியாதை மிகவும் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது.

    பெற்றோர்களே முக்கிய பங்கு

    பெற்றோர்களே முக்கிய பங்கு

    எனவே மறுபடியும் ஒரு புத்தாக்க பயிற்சி கொடுத்து, பள்ளி நிலையிலிருந்து மாணவ, மாணவிகளுக்கு இது கற்பிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் முக்கியத்துவங்கள் குறித்தும் சட்டங்களையும் சொல்லித் தர வேண்டும். அதேபோல, பெற்றோர்களுக்கும் பள்ளிக்கூடங்கள் தனி நிகழ்ச்சிகள் நடத்தி பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி அறிவுறுத்த வேண்டும். யாரையாவது கண்டு பிள்ளைகள் ஒதுங்கி சென்றாலோ, வழக்கமான கலகலப்பு அவர்களிடத்தில் இல்லையென்றாலோ, குழந்தைகளின் உடலில் காயங்கள் இருந்தாலோ, குறிப்பிட்ட நபருடன் பேசமறுத்தாலோ, பேச பயந்தாலோ இவற்றையெல்லாம் ஒரு அறிகுறியாக எடுத்து கொண்டு, குழந்தைகளை அழைத்து பொறுமையாக விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் பெற்றோரிடத்தில் அதை பகிர்ந்து கொள்ளக்கூடிய தைரியத்தை அந்த குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே கொடுக்க வேண்டும்.

    சித்திரம் எங்கே எழுதுவது?

    சித்திரம் எங்கே எழுதுவது?

    முன்பெல்லாம் சிறு பிள்ளைகளிடம், இது கெட்டது, இதை பார்க்ககூடாது, இதெல்லாம் தெரியக்கூடாது, இதெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லி வளர்த்தார்கள். ஆனால் அந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. இப்போது குழந்தைகளுக்கு பக்குவமான, நாகரீகமான முறையில் தெரிய வேண்டிய அளவில் ஒரு விஷயத்தை தெரியவைக்க வேண்டும். அதேபோல குழந்தைகள் தாங்களாக வந்து பேசினாலும் பெற்றோர்கள் அதை காது கொடுத்துகேட்க வேண்டும். அதேபோல ஒரு குழந்தைக்கு தனக்கு வீட்டில் போதுமான அன்பு கிடைக்காமல் ஏங்கும் நேரத்தில், வேறு யாராவது கொஞ்சம் அன்பு காட்டினாலும் அந்த பக்கம் சாய்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டும் அந்த குழந்தை செல்கிறது. பெற்றோர் இருவரும வேலைக்கு செல்லும் சமயத்தில்கூட குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்க வேண்டும், குடும்பத்தில் யாருக்காக, யாருடைய மகிழச்சிக்காக சம்பாதிக்கிறோம், யாருக்காக சேமித்து வைக்கிறோம் என்பதை அறிய வேண்டும். இல்லையென்றால் சுவரே இல்லாமல் போய்விட்டால், சித்திரம் எங்கே எழுதுவது?

    இவ்வாறு ஆழமிக்க, தீர்க்கமான கருத்துக்களை கூறிய திலகவதி, இவையெல்லாம் பின்பற்றினாலே ஓரளவு பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்விலிருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறி முடித்தார்.

    English summary
    Ignorance is the reason for all, says retired IPS offier Thilagavathi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X