For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு அலுவலகங்களில் குற்றவாளி ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவை இணையதளம் உள்ளிட்ட அனைத்துத் துறை இணையதளங்களிலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் உருவப்படங்களை உடனே அகற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Jaya continues to be CM in TN assembly website: Ramadoss

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பதவி நீக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில் அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் படங்கள் இதுவரை அகற்றப்படவில்லை.

மக்கள் பிரதிநிதிகளுக்கும், நாடு போற்றும் தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் தான் அரசு அலுவலகங்களில் அவர்களின் புகைப்படங்கள் மாட்டப்படுகின்றன. 24.10.1980 அன்று பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசு ஆணையின்படி பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் உருவப்படங்களுடன் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் படங்கள் தமிழக அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இந்த தலைவர்களின் புகைப்படங்களை வைப்பதை விடுத்து முதல்வரின் புகைப்படங்களை மட்டுமே வைப்பது வழக்கமாக உள்ளது. இதை மரபுசார்ந்த விஷயமாக வைத்துக் கொண்டாலும் கூட, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே அரசு அலுவலகங்களில் இருந்து அவரது படங்கள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாதாரண கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் ஜெயலலிதா புகைப்படமே நடுநாயகமாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்கள், பண்ணை பசுமைக் கடைகள், கூட்டுறவு வங்கிகள் போன்ற இடங்களிலும் ஜெயலலிதாவின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து திரையரங்குகளிலும் பல்வேறு தலைப்புகளில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் விளம்பரப் படங்கள் அரசு செலவில் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழக அரசின் முதன்மை இணையதளம் தவிர, தமிழக சட்டப்பேரவை இணையதளம் உள்ளிட்ட அனைத்துத் துறை இணையதளங்களிலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக புதிய அரசின் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் ஆளுனர் முன்னிலையில் ஜெயலலிதா படத்தை மேடையில் வைத்து வணங்கிவிட்டு தான் முதல்வராக பதவியேற்றார். அரசியல் சாசனப்படி உறுதியேற்கும் விழாவில், முதல்வராக பதவியேற்கும் ஒருவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படத்தை ஆளுனர் முன்னிலையில் வணங்குவது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தின் கீழ் அமர்ந்து அதிகாரிகள் பணியாற்றினால், அவர்களும் ஊழல்வாதிகள் என்ற எண்ணம் அலுவலகத்திற்கு வருபவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிடாதா?

அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் இன்னும் ஜெயலலிதாவின் பெயரும், படமும் நீடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஓ.பன்னீர் செல்வம் என்ற தனிநபருக்கு வேண்டுமானால் ஜெயலலிதா இதயதெய்வமாக இருக்கலாம். இதற்காக அவரது சொந்த இல்லத்திலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ ஜெயலலிதாவின் படத்தை வைத்து வணங்கிக் கொள்ளலாம். அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஆனால், ஏழரை கோடி தமிழக மக்களின் பிரதிநிதி என்ற முறையில், தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை வணங்குவது மக்களுக்கு செய்யும் அவமரியாதை ஆகும்.

அரசு அலுவலகங்கள் விடுமுறையில் இருப்பதால் தான் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே, அவரின் படத்தை அனைத்து அரசு அலுவகங்களிலும் மாட்டும் அளவுக்கு மின்னல் வேகத்தில் செயல்படும் அதிகாரிகள், இப்போது அரசு விடுமுறையால் தான் ஜெயலலிதா படத்தை அகற்றமுடியவில்லை என்று சொல்வதை அவர்களின் மனசாட்சியே நம்பாது. ஜெயலலிதாவின் படங்கள் திட்டமிட்டே தான் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அதிகாரிகளின் விளக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தில் நடைபெறும் அத்துமீறல்களையும், சட்டமீறல்களையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டாம். தமிழக நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதால் தான், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்றுவதுடன், அனைத்து சட்டங்களையும் மதித்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss said in a statement that Jayalalithaa continues to be CM in the TN assembly website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X