For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிராமத்து மாணவர்களின் கனவை சிதைக்கும்... மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்து அன்புமணி

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களின் கனவை சிதைத்து விடும். எனவே, பொது மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இளநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த ஆண்டிலிருந்தே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான இரண்டு கட்ட அட்டவணைகளையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இது ஏற்க முடியாத தீர்ப்பாகும்.

PMK oppose NEET

மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது என்று அந்த ஆண்டே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில் தவே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஏற்கனவே அளித்த தீர்ப்பு செல்லாது என்றும், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த நுழைவுத்தேர்வு செல்லும் என்றும் கடந்த 11 ஆம் தேதி ஆணையிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்ட மற்ற தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர். இப்போது உச்சநீதிமன்றம் மாணவர்கள் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் ஏப்ரல் 11 ஆம் தேதி அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதாக இருந்தாலும் அடுத்த ஆண்டு முதல் தான் செயல்படுத்த முடியும் என்பதால் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கிடையாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திந்தனர்.

ஆனால், அதற்குள்ளாகவே, மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடப்பாண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அத்துடன் நிற்காமல் இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்து பேசி, மே 1-ஆம் தேதி முதல் முதல்கட்ட நுழைவுத் தேர்வும், ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வும் நடைபெறும்; இதன்முடிவுகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அவசரத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு அவசரம் தேவையா? என்பதும் தெரியவில்லை.

உதாரணமாக மே-1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அகில இந்திய மருத்துவ/ பல் மருத்துவப் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு முதல்கட்ட நுழைவுத் தேர்வாக கருதப்படும். இத்தேர்வை எழுத தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாணவர்கள் விண்ணப்பித்திருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காக ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் 40% மதிப்பெண் பெறுபவர்கள் மட்டும் தான் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கவே முடியும். தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்த சிந்தனையே இல்லாத மாணவர்களை அடுத்த இரண்டரை மாதங்களில் நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியல்ல. இது மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்படும் பட்டசத்தில் அதன்பின் தரவரிசை தயாரித்து மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க அக்டோபர் மாதம் ஆகிவிடும். அதன்பிறகு தான் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் என்பதால் 2016-17 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை தாமதமாகும். இதனால் அதிக பாடங்களை குறுகிய காலத்தில் படிக்கும் நிலை உருவாகி மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவர். நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கும் முன் இதையெல்லாம் யோசித்தார்களா? என்று தெரியவில்லை.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில் பொது நுழைவுத் தேர்வு என்பதே ஏற்க முடியாத ஒன்றாகும். சென்னை, தில்லி போன்ற பெருநகரங்களில் வழங்கப்படும் கல்விக்கும், இராமநாதபுரம், திருவாரூர், தருமபுரி மாவட்டங்களின் குக்கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வழங்கப்படும் கல்விக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு சமமானதாகும். பல கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில், நகர்ப்புற பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் இரு ஆசிரியர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட இரு தரப்பு மாணவர்களையும் ஒன்றாக கருதுவது சமூகநீதிக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை மத்திய அரசு உணராதது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 1984ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு வரை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்தக் காலக்கட்டத்தில், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களால் 10 முதல் 15 விழுக்காடு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் பயனாக, 2006 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டப் பிறகு மருத்துவப் படிப்புகளில் சேரும் கிராமப்புற, ஏழை மாணவர்களின் அளவு 65 முதல் 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நுழைவுத் தேர்வு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், ஊரக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு சிதைந்துவிடும்.

இதற்கெல்லாம் மேலாக பொதுப் பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வி தொடர்பான முடிவை மாநில அரசுகளுடன் கலந்து பேசி எடுக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்து மாநிலங்கள் மீது திணிப்பது மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் தலையிடும் செயலாகும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கியவர்கள், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதுதான் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மாநில நலனுக்கு எதிரானது என்ற போதிலும், இதை அவர்கள் தடுக்கவில்லை என்பதிலிருந்தே மாநில நலன் மீதான அவர்களின் அக்கறையை புரிந்துகொள்ளலாம்.

இக்கட்டான இச்சூழலில் தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுகளை எதிர்க்கும் மாநில அரசுகளுடன் இணைந்து பொது மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவிப்பதுடன், இதே காரணங்களைக் கூறி பொது மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Shortly after the Supreme Court ordered the conduct of the National Entrance and Eligibility Test (NEET) for medical admission. Pattali Makkal Katchi (PMK) leader Anbumani Ramadoss contended that the NEET would destroy the dreams of rural students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X