போராட்டத்தில் தீ வைப்பது தமிழக காவல்துறை அதிகாரிகளின் டிரெண்ட் ஆகிவிட்டது.. மு.க.ஸ்டாலின் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்கள் போராட்டத்தில் தீ வைப்பது போலீசாரின் டிரெண்ட் ஆகிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி குறித்து கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.வி.செழியன் அவர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், "பொதுமக்கள் போலீஸை தாக்கியதாலும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாலும், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழக அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்ததாலும்", கைது செய்யப்பட்டார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய்யை அவையில் அவிழ்த்து விட்டுள்ளார்.

மக்களை சந்திக்காமல் கலெக்டருக்கு வேறு வேலை என்ன?

மக்களை சந்திக்காமல் கலெக்டருக்கு வேறு வேலை என்ன?

முதலமைச்சரின் பதிலிலேயே, "மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வர வேண்டும்", என்று வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் போராடும் மக்களை சந்தித்துப் பேசுவதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது? அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று மக்களிடம் பிரச்சினையை விளக்கிக் கூறியிருந்தால் இந்தப் போலீஸ் தடியடியே நடைபெறாமல், இன்றைக்கு அந்த கிராமத்தை போலீஸ் முற்றுகையிட வேண்டிய நிலையே ஏற்படாமல் போயிருக்கலாம்.

பொய் சொல்வது முதல்வருக்கு அழகல்ல

பொய் சொல்வது முதல்வருக்கு அழகல்ல

இவ்வளவு மோசமாக மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் தடியடி நடத்தப்பட்டதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களை நேரில் சந்திக்காதது ஒரு மிக முக்கியக் காரணம் என்றால், அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மீது இதுவரை ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்காமல், உண்மைத் தகவலைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒப்பற்ற சட்டமன்றத்தில், இப்படிப் பூசி மெழுகிப் பொய் தகவலை பதிவுசெய்வது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தீ வைப்பது டிரெண்ட்

தீ வைப்பது டிரெண்ட்

"தீ வைப்பது", இப்போதைக்கு தமிழக காவல்துறையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின் "டிரென்ட்" ஆகிவிட்டது. ஏதாவது போராட்டம் என்றால், எங்காவது தீ வைத்துவிட்டு, உடனே போராட்டக்காரர்கள் மீது
பழிசுமத்தி, தடியடி நடத்தும் புதுக் கலையை அதிமுக அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதோ என்றே சந்தேகிக்க வேண்டியதிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீஸாரே "தீ வைத்த" காட்சிகளை பார்த்த மக்களுக்கு, கதிராமங்கலத்தில் உள்ள "வைக்கோல் போரில் போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்", என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை என்றாலும், இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை அப்பாவி விவசாயிகள் மீது முதலமைச்சர் சுமத்தியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சியின் அடிவருடிகள்

ஆளுங்கட்சியின் அடிவருடிகள்

"குறைந்த அளவு பலப்பிரயோகம் மட்டுமே செய்து காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்", என்று கூறியிருக்கும் முதலமைச்சர், பெண்களையும், அப்பாவி விவசாயிகளையும் போலீசார் அடித்து விரட்டிய காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததை பார்க்கத் தவறி விட்டார் என்று நினைக்கிறேன். வீடியோ ஆதாரங்கள் உள்ள விஷயங்களில் கூட இவ்வளவு முரட்டுத்தனமான பொய்த் தகவல்களை போலீஸ் அதிகாரிகள் முதலமைச்சருக்கு கொடுப்பதிலிருந்தே இந்த ஆட்சியில் காவல்துறையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் எந்த அளவிற்கு, "ஆளுங்கட்சியின் அடிவருடிகளாக" செயல்படுகிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் தெரிய வருகிறது.

கதிராமங்கலத்தில் சுமூக நிலை நிலவுகிறதா?

கதிராமங்கலத்தில் சுமூக நிலை நிலவுகிறதா?

இறுதியாக, "கதிராமங்கலத்தில் சுமூக நிலை நிலவுகிறது", என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இன்றுதான் பள்ளி மாணவ - மாணவியர் போலீஸ் வன்முறையை எதிர்த்துப் பேரணி நடத்தியிருக்கிறார்கள். கிராமத்தில் உள்ள கடைகளை எல்லாம் அடைத்திருக்கிறார்கள். போலீஸார் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிராமத்தில், "சுமூக நிலை நிலவுகிறது", என்று முதலமைச்சர் கூறியிருப்பது, அங்கு நடைபெற்ற போலீஸ் அராஜகத்தை, அங்கே தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கும் போலீஸாரின் செயல்களை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. அதுமட்டுமல்ல, மாநில உளவுத்துறையும் உண்மையான தகவல்களை கொடுக்காமல் தோல்வி அடைந்துவிட்டது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறது.

குட்கா டைரி அதிகாரிக்கு பதவி உயர்வு

குட்கா டைரி அதிகாரிக்கு பதவி உயர்வு

அதேபோல், குட்கா டைரி விவகாரத்தில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிக்கு டி.ஜி.பி., பதவி உயர்வு கொடுத்தது பற்றியும், 40 கோடி ரூபாய் லஞ்சம் பரிமாற்றம் நடைபெற்றது குறித்தும், இன்றைக்கு தி.மு.க., எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் எழுப்பியும், அதற்கு, பேரவைத்தலைவர் அனுமதி மறுத்திருப்பது வருத்தமளிக்கிறது. முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காகத்தான் சட்டமன்ற கூட்டம் நடக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய "குட்கா டைரி" ஊழல் பற்றி விவாதிக்க பேரவைத்தலைவரே முன்னின்று மறுப்பது ஆரோக்கியமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ற நடவடிக்கை அல்ல.

கைவிலங்கு

கைவிலங்கு

பேச்சு சுதந்திரத்திற்கு "கைவிலங்கு" போடும் இந்த "அதிமுக கலாச்சாரத்தை" பேரவைத் தலைவரும் சரி, மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சரி முடிவுக்குக் கொண்டு வந்து, ஜனநாயக மாண்புகளைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்

பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்

ஆகவே, கதிராமங்கலத்தில் போலீஸார் போட்டுள்ள அனைத்துப் பொய் வழக்குகளையும் உடனடியாக ரத்துசெய்து, சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகளையும், பொது மக்களையும் விடுதலை செய்து, போராடும் மக்களை சந்திக்க மறுத்து இப்படியொரு மோசமான நிகழ்வுக்கு வித்திட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். "தீ" வைப்பில் ஈடுபட்ட உண்மையான போலீஸ் அதிகாரிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் போராட்டத்தில் இதுபோன்ற கலாச்சாரத்தை புகுத்துவதை வேரறுக்க வேண்டும் என்றும், கதிராமங்கலத்தில் உள்ள போலீஸாரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The opposition leader MK Stalin attacks CM and police department over Kathiramangalam issue.
Please Wait while comments are loading...