இது பத்திரபதிவு அலுவலகம் அல்ல... சட்டசபைக்கு ஆதாரம் அவசியம் - சபாநாயகர் தனபால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆதாரமாக வைத்து சட்டசபையில் விவாதிக்கக் கூடாது, ஆதாரம் இருந்தால் கொடுங்கள், விவாதிக்க அனுமதி தருகிறேன் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். பேரவைத் தலைவரின் தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடியது. எம்எல்ஏ சரவணன் வீடியோ தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் இந்த பிரச்சினையை எழுப்பினார். அதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சபாநாயகர் தனபால் அளித்த நீண்ட விளக்கம்:

பொறுமை காத்தேன்

பொறுமை காத்தேன்

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக உறுப்பினர்கள் நேற்றைக்கே இந்தப் பிரச்சினையை எழுப்பினார்கள். நானும் மிகவும் பொறுமை காத்தேன். திமுக உறுப்பினர்களை அமைதி காக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நான் போராடினேன்.

ஆதாரம் என்ன?

ஆதாரம் என்ன?

தாங்கள் தற்போது எழுப்பும் பிரச்சினை சம்பந்தமாக ஒருசிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் இங்கே பேசியபோது பத்திரிகையில் வந்துள்ளது என்று சொன்னார்கள். பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்துப் பேசினார்கள்.

சபாநாயகர் தீர்ப்பு

சபாநாயகர் தீர்ப்பு

எட்டாவது சட்டப்பேரவையில் அப்போதைய பேரவைத் தலைவர் 1985 ஆம் ஆண்டுகளில் பத்திரிகையை மேற்கோள் காட்டி பேசக் கூடாது என அன்றைய பேரவைத் தலைவர் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல, பத்தாவது சட்டப் பேரவையிலே இன்றைய பத்திரிகைகளில் என்னென்ன வந்திருக்கிறது என்பது விவாதம் அல்ல என்று 1996 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்துள்ளார்.

விதிகளில் இடமில்லை

விதிகளில் இடமில்லை

பதினோராவது சட்டப் பேரவையில் பத்திரிகையில் வந்த செய்தியை ஆதாரமாகக் கூறுவது சரியல்ல என்று அன்றைய பேரவைத் தலைவர் தீர்ப்புரைத்துள்ளார். இதுபோன்று நிறைய தீர்ப்புரைகள் உள்ளன. இதுவரையில் 15 சட்டப் பேரவைகளிலும் பேரவைத் தலைவர் விதிகளைப் பின்பற்றி, மரபினைப் பின்பற்றி தீர்ப்புரைகளை வழங்கி உள்ளார்.

ஏன் விவாதிக்க முடியாது?

ஏன் விவாதிக்க முடியாது?

ஏன் பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து இங்கே விவாதிக்கக் கூடாது என்பதற்கு ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து 27-3-1997 அன்று இதே சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றது. பேரவையில் நடைபெற்றது. அன்றைக்கு உறுப்பினராக இருந்த சி. ஞானசேகரன் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

எம்எல்ஏக்கள் விவாதம்

எம்எல்ஏக்கள் விவாதம்

அன்றைக்கு அவர் பேசியது,"இன்று பத்திரிகைகளில் உண்மையிலேயே தமிழ் மாநிலக் காங்கிரசைச் சார்ந்திருக்கிற எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு கலர் போட்டோவை நாங்கள் பார்த்தோம்" என்றும் சொல்லி, ஒருசில கருத்துக்களைச் சொல்கிறார். பின்னர் பேசிய உறுப்பினர்கள் கே. சுப்பராயன், டாக்டர் தே. குமாரதாஸ், சோ. பாலகிருஷ்ணன், ஆர். சொக்கர் ஆகியோரும் உறுப்பினர் சி. ஞானசேகரன் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்திலேயே தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கருணாநிதி பதில்

கருணாநிதி பதில்

திருநாவுக்கரசு பத்திரிகையில் வந்த புகைப்படம் உண்மையல்ல என்று பேசுகிறார். பதிலுரை வழங்கிய அன்றைய முதல்வர் கருணாநிதி, ஏடுகளில் வந்துள்ள இந்தப் புகைப்படம் ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது, இதுகுறித்து மாநில அரசு விசாரித்து, மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்று சொல்லியுள்ளார்.

உண்மைக்கு மாறானது

உண்மைக்கு மாறானது

அதன் பின்னர் பேசிய ஒசூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி. வெங்கடசாமி, புகைப்படத்தில் உள்ளவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்று தெரிவித்ததால், அவருக்கு முன்னால் பேசிய அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தும் உண்மைக்கு மாறானதாகிறது. எதற்காக ஏற்கெனவே நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், பத்திரிகையிலே செய்தி வந்தாலும், நிரூபிக்கத்தக்க ஆதாரம் இல்லாத வரையில் அதுசம்பந்தமாக அவையில் பேசப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டால் அது சரியாக இருக்காது என்பதால் சொல்கிறேன்.

ஆதாரம் முக்கியம் உறுப்பினர்களே

ஆதாரம் முக்கியம் உறுப்பினர்களே

அன்றைக்கு பேரவை முன்னவராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன், 2010 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் இங்கே உரையாற்றுகையில் சொல்கிறார். 'ஒரு செய்தி தன்னுடைய காதுக்கு வந்தால்கூட, அது ஒரு குற்றச்சாட்டாக வடிவம் எடுக்கிறதென்று சொன்னால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு அறிந்த பின்னர்தான் இந்த அவையிலே சொல்ல வேண்டும்.

அவையில் அனுமதி இல்லை

அவையில் அனுமதி இல்லை

வெளியிலே எத்தனையோ செய்திகள் வரலாம். அப்படி வருகிற செய்திகளையெல்லாம் இங்கே பதிவு செய்தவற்கு இது பதிவுத் துறை அலுவலகம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இந்த அவையிலே உள்ள யாரையும் அவமதிக்கிற செய்தியை வெளியிலே யார் சொன்னாலும் அதை மறுபடியும் இங்கே வந்து சொல்வதற்கு தேவையான அனுமதி இந்த அவையிலே கிடையாது.

விதிமீறல் கூடாது

விதிமீறல் கூடாது

அப்படி அவமதிக்கக்கூடிய, குறை சொல்லக்கூடிய ஒரு குற்றச்சாட்டு இருக்குமானால், முன்கூட்டி அதை அவைத் தலைவரிடத்திலே தெரிவித்து, அதற்கான ஆதாரம் காட்டிவிட்டு அதற்குப் பிறகுதான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். அப்படியல்லாமல் விதியை மீறிச் சொல்கிற செய்தி எதுவாக இருந்தாலும் இந்த அவையிலே பதிவு செய்யப்படக் கூடாதென்று கேட்டுக்கொள்கிறேன்' என்று அன்பழகன் சொல்லியுள்ளார்.

விவாதம் செய்வது அழகல்ல

விவாதம் செய்வது அழகல்ல

அதேபோல 2011 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர், அன்றைக்கு அமைச்சராக இருந்தார். அவர் உரையாற்றுகையில், பத்திரிகையிலே வரக்கூடிய செய்திகளையெல்லாம் வைத்துப் பேசுவது முறையல்ல. தயவுசெய்து ஆதாரம் இருந்தால் பேசலாம் என்கிறார். அதேபோல 1998 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி, பத்திரிகையில் வருகின்ற ஹேசியங்களை வைத்து நாம் இங்கே விவாதம் செய்வது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

யாரும் விமர்சிக்க முடியாது

யாரும் விமர்சிக்க முடியாது


மேலும் திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதுசம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இதுசம்பந்தமாக உறுப்பினர்கள் இங்கே பேசுவது சரியாக இருக்காது என்கிற காரணத்தால்தான் அதனை நான் அனுமதிக்க மறுக்கிறேன். நான் நேற்றைக்கே என்னுடைய தீர்ப்பை அளித்து விட்டேன். பேரவைத் தலைவரின் தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க முடியாது. தயவு செய்து அமருங்கள் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Speaker P. Dhanapal refused to discuss the issue on the floor of the house as it was subjudice. He further said the issue cannot be discussed also because there was no major proof to substantiate it as it only came out in the media.
Please Wait while comments are loading...