நெல்லையில் பயங்கரம்.. சரமாரியாக மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. கத்திக்குத்து.. மாணவன் கவலைக்கிடம்
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடில் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில், ஒரு மாணவன் கத்தியால் குத்தப்பட்டான்.
கத்தியால் குத்தப்பட்ட அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் கொட்டிய உணவு.. சட்டென மாணவன் செய்த காரியம்.. 'வாவ்'.. குவியும் பாராட்டு

மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரம்
தமிழகத்தில் சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரம் அதிகரித்திருப்பைத பார்க்க முடிகிறது. கல்லூரி மாணவர்களை போல, பொது இடங்களில் பள்ளி மாணவர்களும் தற்போது மோதிக்கொள்வது அதிகரித்துள்ளது. ரவுடியிசம் செய்பவர்களை கதாநாயகர்களாக காட்டும் திரைப்படங்களும் இதற்கு முக்கிய காரணம் என மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். படிக்க வேண்டிய வயதில் வன்முறையில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் நெல்லையில் நடந்த

களக்காடு அரசுப் பள்ளி
நெல்லை மாவட்டம் களக்காடில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் சிலரின் நோட்டு புத்தகங்கள் காணாமல் போய் இருக்கின்றன. இது, இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையேயான மோதலாக மாறியுள்ளது.

மோதிக்கொண்ட மாணவர்கள்
இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவர்கள் இடையே பள்ளி வளாகத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் பல மாணவர்களுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மோதலுக்கு காரணமான மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும், அந்த மாணவனை பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படியும் கூறியிருக்கிறார். இதனால் அந்த மாணவன் எதிர்தரப்பு மாணவர்கள் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மாணவனுக்கு கத்திக்குத்து
இந்நிலையில், இன்று கத்தியுடன் அந்த மாணவன் பள்ளிக்கு வந்திருக்கிறான். பின்னர் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக எதிர்தரப்பு மாணவனின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவனை சக மாணவர்களும், ஆசிரியர்களும் களக்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் சேர்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.