சாப்ஃடர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி.. பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!
நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக தற்போது இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் இயங்கி வரும் நிலையில் இன்று காலை பயங்கர விபத்து நடந்துள்ளது.
காலை 11 மணிக்கு மாணவர்கள் பள்ளியின் கழிப்பறைக்கு சென்றனர். அப்போது பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து அந்த மாணவர்கள் மீது விழுந்தது. கழிவறைக்கு சென்ற சில மாணவர்கள்
இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

3 மாணவர்கள் உயிரிழப்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பணியில் ஈடுபட்டனர்.இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து நடந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்கள்.

அமைச்சர் உறுதி
விபத்து நடந்தவுடன் உடனடியாக நெல்லை மாவட்ட கலெக்டர், உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் இனி வரும் காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலியான மாண வர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் விபத்து நடத்த இடத்தை பார்வையிட்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கு கூடி இருந்த பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.

3 பேர் கைது
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், இனிமேல் இதுபோல் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கபடும். சாப்டர் பள்ளி தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார். இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது இருப்பதால் சாப்ஃடர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை விடப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications