குடியரசு தினம்... ஆங்கிலேயரை குலைநடுங்க வைத்த கி.பி. 1755 'நத்தம் கணவாய் யுத்தம்'
சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிகோலிய யுத்தம் கி.பி. 1757-ல் நடைபெற்ற பிளாசிப் போர் என்கிறது வரலாற்று பக்கங்கள். கிழக்கிந்திய கம்பெனிக்கும் வங்காள நவாப் சிராஜ் உத்தவ்லாவுக்குமான யுத்தம் இது. இதனைத் தொடர்ந்தே இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி அடுத்தடுத்த உரிமைகளுடன் வல்லாதிக்கத்தை விரிவுபடுத்தியது.
அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதலாவது கிளர்ச்சியாக 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை வரலாற்றுப் பக்கங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான யுத்தமும் பெரும் கிளர்ச்சிகளும் தமிழர் நிலத்தில்தான் நடந்தன. வரலாறு பேசுகிற கான்சாகிபு மருதநாயகத்தின் காலமான 1750களிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான யுத்தம் தமிழ் மண்ணில் நடைபெற்றது.

இந்த முதலாவது யுத்தத்தை முன்னெடுத்தவர்கள் வீரன் அழகுமுத்துகோன், மாமன்னர் பூலித்தேவன் போன்றவர்கள். இருந்த போதும் ஆங்கிலேய படை இந்திய நிலத்தில் முதன் முதலாக மிகப் பெரிய உயிரிழப்பை சந்தித்த ஒரு யுத்தம் கி.பி. 1755-ல் நடைபெற்றது. அதன்பெயர் நத்தம் கணவாய் போர்..
1000 ஆங்கிலேய படையினரில் 30 பேர் மட்டுமே உயிர் தப்பிக்க 970 பேர் வெட்டி வீழ்த்தப்பட்ட வீரம் செறிந்த நத்தம் கணவாய் போரின் பின்னணியை பார்க்கலாம்.
கி.பி. 1752-ல் மதுரை நிர்வாகப் பொறுப்பு மியான் என்பவரிடம் இருந்தது. அப்போதுதான் ஆற்காடு நவாப்புகளுக்காக களத்துக்கு ஆங்கிலேய படைகள் வந்திருந்தன. கி.பி. 1755-ல் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான், கான்சாகிப் மருதநாயகம் ஆகியோர் இணைந்து மியானை தேடி மதுரை வந்தனர். ஆனால் மியான் தப்பி செல்கிறார்.

தப்பிய மியான் கோவில்குடி என்ற கிராமத்தில் மறவர்களின் குலதெய்வ கோவிலில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. கோவில்குடி கோவிலை முற்றுகையிட்டு சூறையாடிய கர்னல் ஹெரான் அங்கிருந்த குலதெய்வ சிலைகளை கைப்பற்றி பூலித்தேவனிடம் கப்பம் வசூலிக்க எதிர்கொள்ள படையினருடன் சென்றார். அப்போது கர்னல் ஹெரான், கான்சாகிப் படையால் பூலித்தேவனை வெல்ல முடியவில்லை.
இதனால் நெல்லை சீமையில் இருந்து திருச்சி நோக்கி திரும்புகிறது கர்னல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேய படை. இதனிடையே கோவில்குடியில் தங்களது குலதெய்வ சிலைகளை கொள்ளையடித்துவிட்டு போன கர்னல் ஹெரானை வீழ்த்துவதற்காக எவரது நிர்வாகத்தின் கீழும் வராத தன்னரசு கள்ளர் நாடுகளின் மறவர்கள் ஒருங்கிணைந்து திட்டம் தீட்டி காத்திருந்தனர்.
ஆங்கிலேய படைகளை வீழ்த்த மறவர் படை தேர்ந்தெடுத்த இடம் நத்தம் கணவாய். மலைகளுக்கு நடுவே செல்லும் இந்த கணவாய் பாதை வழியாக திருச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தது ஆங்கிலேய படை. இருந்த போதும் மறவர்களின் தாக்குதல் திட்டங்களை உளவாளிகள் மூலம் ஆங்கிலேயர்கள் அறிந்து வைத்திருந்தனர். இது தொடர்பாக கர்னல் ஹெரானுக்கும் எச்சரிக்கை ஓலை அனுப்பப்பட்டது.
கர்னல் ஹெரான் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து தமது ஆங்கிலேய படைகளை சிறு சிறு குழுக்களாக பிரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நத்தம் கணவாய் பகுதி வழியாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். கர்னல் ஹெரான் எதிர்பார்த்தபடி எந்த ஒரு தாக்குதலும் மறவர்கள் தரப்பில் இருந்து நடத்தப்படவில்லை.
ஆனால் கணவாயின் இருபக்கமும் பதுங்கி இருந்த மறவர் சேனை பாய காத்துக் கொண்டிருந்தது. ஆங்கிலேய படை ஒவ்வொன்றையும் முன்னேறவிட்டு பின்னால் வந்த படையை வழிமறித்து தாக்கியது. தமிழர் நிலத்தின் ஆகப் பெரும் ஆயுதங்கள் அத்தனையையும் அன்று மறவர் சேனை பயன்படுத்தியது.
ஆங்கிலேய படை மீதான இந்த உக்கிரமான தாக்குதல் ஈரக்குலையை நடுநடுங்க வைக்கும் வகையிலானது. மறவர் சேனையின் நோக்கமான கோவில்குடி குலதெய்வ சிலைகள் ஹெரானின் படையிடம் இருந்து மீட்கப்பட்டன.
1000 பேருடன் கணவாயை கடக்க முயன்றவர்களில் 970 பேர் வீழ்த்தப்பட்டு அந்த கணவாய் பகுதியே ரத்த காடாகிப் போனது சரித்திரம். இதனை ஆங்கிலேயர்கள் தங்களது வரலாற்று நூல்களில் பதைபதைப்புடன் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்திய நிலத்தில் ஆங்கிலேயப் படை எதிர்கொண்ட முதலாவது பேரிழப்பு நத்தம் கணவாய் யுத்தம் என்பது மிகை அல்ல. இதற்குப் பின்னர்தான் பிளாசிப் போர் எல்லாம். 1857 முதலாவது சிப்பாய் புரட்சிக்கு முன்னதாகவே வீரன் அழகுமுத்துகோன், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை சீமை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர் உள்ளிட்டோர் மாபெரும் புரட்சிகளை நிகழ்த்தியவர்கள்.
அதனால்தான் தமிழகத்தில் இருந்தே இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.