• search
keyboard_backspace

தெருப்பூசணிக்காய் முதல் பொதுப்போராட்டம் வரை - சமூக அக்கறையின் நிலை - அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

புதிதாகக் கட்டப்படுகிறது ஒரு வீடு. கட்டி முடிக்கப்பட்ட பிறகு புதுமணை புகுவிழாவில், பெரிய கண்களும் மீசையும் வரையப்பட்டிருக்கும் அந்தப் பூசணிக்காய் தெருவில் போட்டு உடைக்கப்படுகிறது. அத்துடன் அந்தப் புதுவீட்டின் மீது, தெருவில் அந்த வழியாகப் போனவர்கள் வந்தவர்களின் கண்களிலிருந்தும், விழாவுக்கு வந்துவிட்டுச் சென்றவர்களின் கண்களிலிருந்தும் விழுந்திருந்த காழ்ப்புப் பார்வைகள் (திருஷ்டிகள்) சிதறித் தொலைகின்றன. தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களையும் விழாவுக்கு வந்துசெல்கிற உற்றார்கள் உறவினர்களையும் பொறாமைக்காரர்களாகச் சிறுமைப்படுத்துகிறது இந்தப் பழக்கம். அத்துடன், அந்த உடைந்து கிடக்கும் பூசணிக்காய்த் துண்டுகள், சம்பந்தமே இல்லாமல் அவ்வழியாக வருகிறவர்களின் இருசக்கர வண்டிகளைச் சரியவைத்து முட்டிக்கால்களை உடைத்து அனுப்புகின்றன.

மற்றவர்களின் திருஷ்டிப் பார்வையால் தீங்கு ஏற்படும் என்பதாக சமூகத்தில் ஊறிப்போயிருக்கிற நம்பிக்கை அவர்களை அவமதிக்கிறது. திருஷ்டிப் பரிகாரமாக சமூகத்தில் பின்பற்றப்படுகிற பூசணி உடைப்புச் சடங்கு மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறது. உண்மையிலேயே யாராவது பொறாமைப்படுவார்களானால், அவர்கள் அந்த வீடு கட்டப்பட்டதில் சட்ட விதி மீறல் ஏதாவது நடந்திருக்குமானால் அதை அதிகாரிகளிடம் போட்டுக்கொடுப்பது போன்ற இடையூறு ஏற்படுத்துகிற செயல்களில் இறங்கினாலன்றி, அவர்களுடைய பார்வையால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாது. ஆனால் பூசணியோ சாலையில் செல்லும் எல்லோருக்குமே பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவேதான், இவ்வாறு பூசணியைத் தெருவிலே போட்டு உடைக்காதீர்கள் என்று அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

"செய்வினை" தடுப்பதற்காகப் பூசணியை வண்ணம் பூசித் தொங்கவிடுவதைப் பற்றியே ஒரு பாட்டெழுதினார் புரட்சிக்கவி பாரதிதாசன். அதனைக் கறிசமைத்து உண்டதாகக் கூறி, "பொய்வண்ணப் பூசணிக்காய,... உன் கைவண்ணம் அங்கு கண்டேன், கறிவண்ணம் இங்கு கண்டேன்," என்றார். இலக்கிய நிகழ்வுகளில் அந்தப் பாட்டு ரசிக்கப்படுகிறது. அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறபோது மட்டும் அரசாங்க வேண்டுகோள் பின்பற்றப்படுகிறது.

Writer Kumaresans Article on Social Concern

சமூக அக்கறை

இது எதைக் காட்டுகிறது? தானும் தன் வீடும் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கிறவர்களுக்கு, மற்றவர்கள் பாதிகப்படக்கூடாது என்கிற அக்கறை இல்லை. தன்னுடைய ஒரு செயல் அல்லது செயலின்மை மற்றவர்களுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்று அக்கறை கொள்வதுதான் "சமூக அக்கறை" (சோசியல் மைண்ட்ஃபுல்னெஸ்) எனப்படுகிறது. மற்றவர்கள் என்றால் தனக்கு அடுத்தாற்போல இருக்கிற மற்றவர்கள், தெருவிலும் ஊரிலும் இருக்கிற மற்றவர்கள், நாட்டிலும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் இருக்கிற மற்றவர்கள் என அனைத்து வகையான மற்றவர்களும் வருகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்துவதுதான் "சமூக அக்கறை" என்று விரித்துச் சொல்லலாம்.

அப்படியெல்லாம் பொருட்படுத்தத் தவறுவது சமூக அக்கறையின்மை. கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், அரசாங்கம் எவ்வளவு கேட்டுக்கொண்டும் பொறுப்பில்லாமல் தெருவில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது முதல், அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளால் பொதுச் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பாதகங்களைப் பொருட்படுத்தாமல் கட்சி சார்பு அடிப்படையில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது வரையில் சமூக அக்கறையின்மைதான். நடப்புக் காலத்தோடு பொருத்திச் சொல்வதென்றால், கொரோனாவால் செத்துப்போனவர்கள் மீது மரியாதையே இல்லாமல், பொதுவழிபாடு நடத்துவதற்குத் தடை விதிப்பதா என்று பேசித் தூண்டிவிடுகிறவர்களின் தூண்டிலில் சிக்கிக்கொள்வது கூட சமூக அக்கறையின்மைதான்.

அன்றாட வாழ்க்கையில் பார்ப்பதென்றால் தெருவில் குழந்தைகள் நடமாடுவது பற்றிய கவலையே இல்லாமல் வண்டிகளை வேகமாக ஓட்டிப் பறப்பது, நடைமேடையில் எதிரே வருகிறவர்களுக்கும் பின்னால் வருகிறவர்களுக்கும் இடைஞ்சலாக கைகோர்த்துக்கொண்டு நடப்பது, காலில் செருப்பின்றி வருகிறவர்களை இளக்காரமாகக் கருதி சிகரெட்-பீடியை அணைக்காமல் கீழே போடுவது, வீட்டின் முகப்பில் செடிவளர்ப்பு என்ற போர்வையில் இரண்டடி அகலமாவது உள்ள பொதுஇடத்தை ஆக்கிரமிப்பது, கடைவாசலில் விற்பனைப் பொருள்களையும் விளம்பரங்களையும் வைத்து மக்கள் நடப்பதற்கான பாதையைத் தடுப்பது, பொதுமருத்துவமனையில் கழிப்பறையைப் பயன்படுத்திய பின் தண்ணீர் விடாமல் வருவது .... இப்படியான பல காட்சிகள் சமூக அக்கறையின்மையின் சாட்சிகளாகின்றன. (பல நேரங்களில் பொது மருத்துவமனைக் கழிப்பறைக் குழாய்களில் தண்ணீரே வருவதில்லையே என்கிறீர்களா? அது நிர்வாகத்தின் அல்லது அதிகாரிகளின் சமூகப் பொறுப்பின்மைதான். பொது நீர்நிலைகளில் சிகிச்சைக் கழிவுகளைக் கொட்டுவது தனியார் மருத்துவ நிறுவனங்களின் சமூக அலட்சியம்தான்.

இதற்காக ஒரு ஆய்வு

இப்படியான பொது சமூக அக்கறையின்மை பற்றிய ஆய்வு ஒன்று அக்கறையோடு நடத்தப்பட்டுள்ளது. அந்த அக்கறை குறைவாக உள்ள சமுதாயங்களில் ஒன்றாக இந்தியா இடம்பிடிக்கிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நெதர்லாந்து நாட்டின் லேய்டன் பல்கலைக்கழக சமூக உளவியல் துறை சார்பில், உதவிப் பேராசிரியர் நைல்ஸ் வான் டோசம் தலைமையிலான குழு பல நாடுகளிலும் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.

குழுவினரின் ஆய்வறிக்கை 'புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகடமி ஆஃப் சயின்ஸஸ்' என்ற அறிவியல் ஏட்டில் வெளியிடப்பட்டிருப்பதைத் தெரிவிக்கிறது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி. குழுவோடு இணைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 ஆராய்ச்சியாளர்கள் 12 வகையான தலைப்புகளின் கீழ் பல கேள்விகளை உருவாக்கி ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் 8,354 பேர் ஆய்வுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு பதிலளித்திருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு என்ன விளைவு ஏற்படும் என்ற சமூக அக்கறையுடன் முடிவுகளை எடுப்பதில் ஜப்பானியர்கள் முதலிடம் பிடிக்கிறார்கள். அவர்கள் எடுக்கிற முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் (72 சதவீதம்) சமூக அக்கறையோடு இருக்கின்றன. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரிய நாட்டவர்கள் (69 சதவீதம்), அதற்கடுத்து மெக்சிகோ மக்கள் (68 சதவீதம்) வருகிறார்கள். பிரிட்டன் நாட்டவர்கள் 64 சதவீதம் என்ற நிலையில் நான்காவது இடத்திலும், சீன மக்கள் 62 சதவீதம் என்ற புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திலும், அமெரிக்கர்கள் ஆறாவது இடத்திலும் (58 சதவீதம்) இருக்கிறார்கள். கனடா 57 சதவீத அளவோடு இருக்கிறது.

மிகக்குறைவான சமூக அக்கறையைத் தங்களின் முடிவுகளில் வெளிப்படுத்துகிறவர்கள் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் - 46 சதவீதம்தான். அவர்களை விடக் கொஞ்சம் முன்னேறியிருப்பவர்கள் துருக்கி மக்கள் (47 சதவீதம்). ஆய்வறிக்கையின்படி கீழேயிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இங்கே தனி மனிதர்கள் முடிவெடுப்பதில் 50 சதவீதம் அளவுக்கே சமூக அக்கறை இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

ஆய்வு ஏற்கத்தக்கதுதானா?

ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீட்டின்படி உலக மக்கள்தொகை இப்போது 790 கோடி. நாடுகளின் ஆட்சி முறைகள், சமுதாய மரபுகள், பொருளாதார நிலைகள், கல்விச் சூழல்கள், பண்பாட்டுப் பின்னணிகள் போன்றவற்றில் கூர்மையான வேறுபாடுகள் இருக்கின்றன. அரசின் மதச்சார்பின்மை மாண்பு ஓங்கியுள்ள நாடுகள், ஆட்சிபீடத்தில் ஏதோவொரு மதம் உட்கார்ந்திருக்கிற நாடுகள், குடிமக்களிடையே மதங்களுக்கும் சமூக வேறுபாடுகளுக்கும் செல்வாக்கு உள்ள நாடுகள், பயங்கரக் கட்டுப்பாடுகளோடு பழமைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், வறுமையோடு போராடிக்கொண்டிருக்கிற நாடுகள், சமத்துவ வாய்ப்புகளை நிலைநாட்டியுள்ள நாடுகள், மக்களின் கருத்துச் சுதந்திரத்தில் முன்னணிக்கு வந்துள்ள நாடுகள், அதில் பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடுகளும் உள்ளன.

இந்த நிலையில், ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கூடத் தொடாத, பத்தாயிரத்தைக் கூடத் தாண்டாத 8,354 பேரின் பதில்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு துல்லியமான கணிப்புக்கு வர முடியுமா? அதை வைத்துக் குறிப்பிட்ட நாட்டினரின் அல்லது சமுதாயத்தினரின் சமூக அக்கறை இவ்வளவுதான் என்று மதிப்பிடுவது பொருத்தமாக இருக்குமா? இப்படியான பல கேள்விகள் இனி புறப்படும்.

ஒருவேளை ஏற்கெனவே இத்தகைய கேள்விகள் வந்துவிட்டனவோ என்னவோ, ஆய்வுக்குழு தலைவர் நைல்ஸ் வான் இவ்வாறு கூறுகிறார்: "முக்கியமாக, இவ்வாறு தரவரிசைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பான மதிப்பீட்டுத் தீர்ப்புகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடுகளின் மட்டத்தில் சமூக அக்கறையில் வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம், இதுவரையில் அது குறித்து ஆராயப்பட்டதில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த வேறுபாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்கு நாங்கள் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியிருக்கிறது."

தள்ளிவிடக்கூடாது

ஆக, விளக்கங்கள் இல்லாத புள்ளிவிவரங்கள் மட்டுமே இப்போதைக்கு இந்த ஆய்விலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதிலிருந்து ஒரு திட்டவட்டமான சமூக மதிப்பீட்டிற்கு வந்துவிட முடியாது என்றாலும், சில நடைமுறை உண்மைகள் இந்த ஆய்வின் சதவீதக் கணக்குக்குத் துணையாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றைக் கூறலாம். ஒரு பொதுப் பிரச்சினைக்காக ஒரு அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக வைத்துக்கொள்வோம். மறியல், முற்றுகை போன்ற, கைது நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லாத, காவல்துறையிடமிருந்து முறைப்பட ஒப்புதல் பெற்று, ஓரிடத்தில் கூடிநின்று, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கோரிக்கை முழக்கங்களை மட்டும் எழுப்பிக் கலைகிற ஆர்ப்பாட்டமாக அது இருக்கும்.

அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கோரி நடத்தப்படுகிற அந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்கிறார்களா? பொதுமக்களில் பெரும்பாலானவர்களாவது கலந்துகொள்கிறார்களா? அதை நடத்துகிற ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை போலக் கலந்துகொண்டு, தொண்டை கிழிய முழக்கங்களை எழுப்பிவிட்டு, ஒரு சிலர் உரையாற்றிவிட்டுச் செல்கிறார்கள். பொது சமூக அக்கறை இருந்தால் மக்கள் பெருவாரியாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளத்தானே செய்வார்கள்? ஆனால், ஒரு பெரும்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்கிறது என்றால், "இந்தக் கட்சிக்காரங்கெல்லாம் என்னதான் செய்றாங்க," என்று அலுத்துக்கொள்வார்கள்!

இணையத்தில் ஆய்வறிக்கைச் செய்திகளைப் படித்தபோது, எதிர்வினைகளையும் காண முடிந்தது. பொதுவாக இந்த நிலைமை குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொள்வதாகப் பல பதிவுகள் உள்ளன. சிலர், அரசு அதிகாரத்தில் மதம் வீற்றிருக்கிற நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய அரசுகள் உள்ள நாடுகளில் இந்த அக்கறை குறைவாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பல்வேறு வகையிலும் சக மனிதர்கள் மீதான அக்கறையை வலியுறுத்துகிற மார்க்கம் இது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவருகிறார்கள். அவர்கள் மேற்கண்ட கருத்துக் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?

அரியணையில் எந்தவொரு மதம் கோலோச்சுமானாலும் இப்படிப்பட்ட நிலைமையே சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் என ஊகிக்கலாம். அரச அதிகாரத்தில் இல்லையென்றாலும், சமுதாயத்தில் மதத்தின் பிடிப்பு உள்ள நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவக்கூடும். அவரவர் இன்ப துன்பங்கள் ஏற்கெனவே எழுதி இறுதிப்படுத்தப்பட்டுவிட்ட விதிக்கு உட்பட்டே தீர்மானிக்கப்படுகிறது என்ற தத்துவம் கெட்டிப்பட்டுள்ள சமுதாயங்களில், பிறருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய அக்கறை எந்த அளவுக்கு இருக்கும்?

தேசப்பற்ற்றின் பெயரால், நாட்டைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறது என்று ஆய்வறிக்கையைத் தள்ளுபடி செய்துவிடலாகாது. அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதும், உண்மை நிலவரங்களோடு ஒப்பிட்டு மாற்றங்களுக்கு முயல்வதுமே பொது சமூக அக்கறையின் வெளிப்பாடாக இருக்கும்.

English summary
Here is an article has written by Writer Kumaresan on Social Concern.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In