For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாட்டு சாமீ பாட்டு...

By Staff
Google Oneindia Tamil News

அப்பறம் எப்படி இருக்கீக...

செளக்கியந்தானே...

நேத்து ஓலக்கூரு போயிருந்தேன். அங்கனதான் என் பொண்ணு வாக்கப்பட்டிருக்கா. அவளுக்கு ரெண்டாவது புள்ள பொறந்திருக்கு. பொம்பளப் புள்ள. போயி,பாத்து வந்தேன்.

நாம் போன நேரம் பாருங்க, பச்சப் புள்ள ஒரே அழுகை. ஆத்த மாட்டாம எம் பொண்ணு திணறிக்கிட்டு கிடந்தா. தூக்கி ஆராட்டிப் பாக்குறா, சும்மாகிட, சும்மா கிடங்கிறா. ம்ஹூம். அது அழுகய நிப்பாட்டுற மாதிரியில்ல. எனக்கு சிரிப்பா வந்துச்சு. பின்ன, பெத்த புள்ளய ஆத்த முடியாம ஒரு ஆத்தாளா?

இந்த நேரத்துலதான் எனக்குத் தாலாட்டுப் பாட்டு ஞாபகம் வந்துச்சு. அடடா..என்னா ஒரு சொகமான பாட்டு. எந்த வயசானாலுஞ் சரி. தாலாட்டுப்பாட்டக் கேட்டா, அப்படியே கண்ணச் சொக்கிட்டு வரும்.

கொழந்தகள தூங்க வக்கிறதுக்காக பாடுறதுதான் தாலாட்டுப் பாட்டு. வாய் மொழி இலக்கியம்னு ஒன்னு உண்டு. அதுல தாலாட்டுப் பாட்டுக்குமுக்கிய எடம் கண்டிப்பா உண்டு.

படிப்பறிவில்ாத பாமர தாய்மார்களோட எண்ணத்துல உதிக்கிறதுதான் இந்தப் பாட்டுங்க. அப்படியே பரம்பர, பரம்பரயா இந்தப் பாட்டுங்கஇன்னக்கிம் நம்மகூட சுத்திக்கிட்டு இருக்குது.

இப்பல்லாம் தாலாட்டுப் பாட்டு தெரியாத பொம்பளக சாஸ்தியாயிட்டாங்க. பாட்டுப் பாடத் தெரியாம ரொம்பக் கஷ்டப்பட்டு புள்ளகள தூங்கவைக்கறாங்க. இல்லாட்டி, அம்மா, பாட்டி அப்படி யாருகிட்டயாவது கொடுத்திட்டு தப்பிச்சுறாங்க. இப்படி இருக்குது இப்ப கதை.

எங்க ஆத்தா என்னத் தூங்க வைக்க நிலாவைக் காட்டி பாட்டு பாடும்.

காலம்பற கண் முழிக்கணும்

கண்ண மூடு ராசா...

எட்டுப்பட்டி சுத்த வேணும்

வெரசா தூங்கு ராசா...

தாய்மாமன் நாள வருவான்

படுத்துத் தூங்கு ராசா...

மாமன் பொண்ணு மால சூட வருவா

கனவோடு தூங்கு ராசா...

அப்படின்னு பாட்டு போகும். தங்களோட கனவுகள, ஆசைகள, அப்படியே பாட்டுல கொட்டிப் பாடுவாங்க.

இன்னொரு தாலாட்டு இருக்கு. இது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு பொண்ணு, தன்னோட தங்கச்சிய தூங்க வைக்கப் பாட்டுப் பாடுறா. வழக்கமா,புள்ளங்கள தூங்க வக்க அம்மாக்கதான் பாட்டுப் பாடுவாங்க.

இங்க பாருங்க..

அவர கலகலென்ன

அங்குவில்லு சாத்தாம

அவர மல்லி ஆம்படியான்

அரமனைக்கு போறான்..

செஞ்சி மல தாசி

சென்றால் மலைக்காட்ட

பில்லு ருசியென்று

பொழுதேறி மேயாதே

தண்ணி ருசியென்று

தலைதப்பி மேயாதே

அங்கங் கண்ணுறங்கி

அப்புறமே போய் வாரும்.

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ...

இந்தப் பாட்டு, தென் ஆர்க்காடு மாவட்டம் கொங்காரப்பட்டு கிராமத்தச் சேர்ந்த வள்ளியம்மா சொன்னது.

பாட்டோட அர்த்தம் இதுதான். அதாவது, அம்மாக்காரிக்கு ஒருத்தன்கூட கள்ளக் காதல். அந்தக் கள்ளக் காதலன், தன்னோட அம்மாவோடகொஞ்சிக் குலாவுறது புடிக்காம இந்தச் சின்னப் பொண்ணு தவிக்கிறா. அப்பப் பார்த்து, தங்கச்சிக்காரி தூங்காம அழுவுறா. அவள தூங்க வக்கிறசாக்கிலயும், அம்மாக்காரியப் பாக்க வர்ற கள்ளக் காதலனுக்கு ஒரக்கிற மாதிரியும் தாலாட்டுப் பாடுறா மகக்காரி.

அவர மல்லி ஆம்படியான்

அரமனைக்கு போறான்... அப்படின்னா, தன்னோட அம்மாவப் பாக்க, அவளோட காதலன் வர்றதா அர்த்தம்.

அம்மாக்காரி வீட்டல இல்லாததச் சொல்ல

செஞ்சி மல தாசி

சென்றால் மலைக்காட்ட... அப்படிங்கறா. அம்மாக்காரி வீட்டுல இல்ல. மரம் வெட்ட செஞ்சி மலக்குப் போயிருக்கா அப்படிங்கிறது இதோடஅர்த்தம்.

அதோட விடுறாளா..கெடயாது.

பில்லு ருசியென்று

பொழுதேறி மேயாதே

தண்ணி ருசியென்று

தலைதப்பி மேயாதே..அப்படிங்கறா.

அதாவது, நீ அடிக்கடி வந்து என் அம்மாக்காரி கூட சேராத. புல்லு ருசிக்குதேன்னு அடிக்கடி வந்து தின்னாத, தண்ணி கிடக்கிதேன்னு அடிக்கடி குடிக்கவராத, அப்படின்னு இதுக்கு அர்த்தம். வெறுப்பா இப்படிப் பாடுறா.

இது வெறும் தாலாட்டுப் பாட்டு மட்டும் கெடயாது. மனசுக்குள்ள இருக்கிறத ஒரு பச்சப் புள்ள பாட்டுல வெளிப்படுத்துது. இது எல்லா வகைதாலாட்டுப் பாட்டுலயும் இருக்கும்.

அடுத்த வாட்டி வாங்க...ஏத்தப் பாட்டுப் பத்திச் சொல்றேன்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X