• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“என்ன.. என்னது ஸார்... நாகண்ணாவா?" ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்(68)"

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

பென் ட்ரைவ் சில விநாடிகள் மெளனம் காத்துவிட்டு நாகண்ணாவின் குரலை காற்றில் சிதறடித்தது.

" கண்டிப்பா ஆறுமாசத்துக்குள்ளே ஃப்ளாட் நெம்பர் 144 கட்டி முடிக்கப்பட்டு ரெடியாயிடுமா.... நம்பலாமா திருமூர்த்தி..? "

" தாராளமாய் நம்பலாம் மிஸ்டர் நாகண்ணா.... இன்னிக்கு ஜுன் அஞ்சாம் தேதி. வர்ற டிசம்பர் மாசம் அஞ்சாம் தேதி ஃப்ளாட்டை நூறு சதவீதம் முடிச்சு சாவியை உங்க கையில குடுத்துவோம்.... "

" நான் மறுபடியும் எப்ப வரட்டும் ..? "

" உங்களோட பர்சனல் செல்போன் நெம்பரைக் குடுத்துட்டு போங்க. நான் என்னோட பார்ட்னர்ஸையும் கலந்து பேசிட்டு உங்களுக்கு தகவல் தர்றேன். அப்ப அட்வான்ஸ் அமெளண்ட் எவ்வளவுங்கிறதையும் சொல்றேன் " உரையாடல் முடிந்து போயிருக்க லேப்டாப்பை அணைத்து பென்ட்ரைவின் இயக்கத்தை நிறுத்திய திருமூர்த்தி, சந்திரசூடனை ஏறிட்டார்.

" பென் ட்ரைவ் கான்வர்சேஷன் இவ்வளவுதான் ஸார் "

" சரி, அதுக்கப்புறம் அந்த தேஜா பசவப்பாவுக்கு சொன்ன ஆறுமாச கெடுவுக்குள்ளே எக்ஸ் ப்ளாக்ல 144ம் நெம்பர் ஃப்ளாட்டை கட்டி கொடுத்துட்டீங்களா.? "

" கட்டி கொடுத்துட்டோம் ஸார். பார்ட்னர்ஸ் அருளானந்தத்துக்கும், ராவணனுக்கும் முதல் ஃப்ளாட்டே நல்ல விலைக்குப் போனதில் ரொம்பவும் சந்தோஷம் "

" ஃப்ளாட் கன்ஸ்ட்ரக்சன் நடந்துட்டு இருக்கும்போது அந்த கர்நாடகா எக்ஸ் மினிஸ்டர் தேஜா பசவப்பா ப்ளாட்டுக்கு வந்தாரா .. ? "

" ம்... நாலைஞ்சு தடவை வந்து பார்த்தார் ஸார்.. கிரகப்பிரவேசத்தை ரொம்பவும் சிம்பிளா வெச்சுகிட்டார். மொத்தமே நாலைஞ்சு பேர்தான் வந்தாங்க.... "

Flat number 144 adhira apartment episode 68

" கிரகப்பிரவேசத்துக்கு அப்புறம் 144ம் நெம்பர் ஃப்ளாட்ல யாரையாவது குடி வெச்சாரா .. ? "

, " இல்ல ஸார்.... ஆனா அதுக்குப் பதிலா ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஃப்ளாட்டுக்கு வந்து உள்ளே ஏதோ வேலைப் பார்த்துட்டு இருந்தார் "

" என்ன வேலை.. ? "

" ஃப்ளாட்டுக்குள்ளே இந்த மூணு பெரிய பெட்ரூம்ஸூக்கு நடுவுல குறுக்குச் சுவர் எழுப்பி ஃப்ளாட்டோட உட்கட்ட வடிவமைப்பையே மாத்திகிட்டு இருந்தார் "

" நீங்க காரணம் கேட்கலையா .. ? "

" கேட்டோம் ஸார்.... அதுக்கு அவரோட பி.ஏ. நாகண்ணா ஃப்ளாட்டை ஆபீஸ் நிர்வாகத்துக்காக பயன்படுத்தப் போறோம்... அதுக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்குன்னு சொன்னார் "

" சரி... குறுக்குச் சுவர் எழுப்பற வேலைக்கு எத்தனை பேரை கூட்டிட்டு வந்தாங்க. உள்ளே எவ்வளவு நாள் வேலை நடந்தது .. ? "

" ஸார்... நான் இப்ப சொல்ற விஷயத்தை நம்பறதுக்கு கொஞ்ச கஷ்டமாயிருக்கும். ஆனா அதுதான் உண்மை "
" நீ விடுகதையெல்லாம் போடாமே உடனடியாய் விஷயத்துக்கு வா.... "

திருமூர்த்தி நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்துக்கொண்டே குரலைத் தாழ்த்தினார்.

" அந்த தேஜா பசவப்பா 144ம் நெம்பர் ஃப்ளாட்டுக்குள்ளே குறுக்குச் சுவர்களைக் கட்டும்போது அவர் கட்டுமான வேலை தெரிஞ்ச ஆட்களை கூட்டிட்டு வரலை ஸார் "

" அப்புறம்.. ? "

" பி.ஏ. நாகண்ணாவையும், சிவில் என்ஜினியர் ஒருவரையும்தான் கூட்டிட்டு வந்தார் "

" அப்படீன்னா அந்த சிவில் என்ஜினியர்தான் கட்டுமான வேலையைப் பண்ணியிருக்கார் "

" ஆமா ஸார் "

" இந்த விஷயத்துல உனக்கும் உன்னோட பார்ட்னர்ஸ் ரெண்டு பேர்க்கும் சந்தேகம் வரலையா .. ? "

" சந்தேகம் வந்தது ஸார்... ஆனா அவர் ஒரு எக்ஸ் மினிஸ்டராய் இருந்ததால அவர்கிட்ட எதையும் கேட்க முடியலை.... எதையோ பண்ணிட்டு போறார்ன்னு விட்டுட்டோம்.... ஆனா குறுக்குச்சுவரெல்லாம் கட்டி முடிச்ச பிறகு ஒரு அதிர்ச்சியான சம்பவம் எதிர்பாராதவிதமாய் நடந்தது. அதுக்குப்பிறகுதான் விஷயமே வெளியே வந்தது ஸார் "

" பில்டப் கொடுக்காமே சொல்லிட்டே வா "

" ஆறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் ஸார் இது. வழக்கம்போல தேஜா பசவப்பா, நாகண்ணாவோடவும், அந்த சிவில் என்ஜினியரோடும் ராத்திரி பதினோரு மணிக்கு மேல் ஃப்ளாட்டுக்கு வந்து வேலை பார்த்துட்டு விடியற்காலை நேரத்துல கார்ல பெங்களூர்க்குப் புறப்பட்டு போனார்.... தமிழ்நாட்டு பார்டர் தாண்டி குப்பத்துக்கு பக்கத்துல கார் போயிட்டிருக்கும் போது வேகமா வந்த ஒரு லாரி மோதி ஸ்பாட்லயே தேஜா பசவப்பாவும், அந்த சிவில் என்ஜினியரும் இறந்துட்டாங்க. நாகண்ணா மட்டும் படுகாயங்களோடு உயிர் தப்பிச்சுட்டார். இருந்தாலும் தலையில் அடிபட்டதால கோமா ஸ்டேஜூக்கு போயிட்டார் "

" ஒரு நிமிஷம் " என்று சொல்லி திருமூர்த்தியை கையமர்த்திய சந்திரசூடன் ராவ்டே பிந்தரிடம் திரும்பினார்.

" மிஸ்டர் ராவ்டே..... கூகுளுக்குப்போய் எக்ஸ் மினிஸ்டர் தேஜா பசவப்பாவோட பேரை டைப் பண்ணி என்ன டீடெய்ல்ஸ் வருதுன்னு பாருங்க "

ராவ்டே உடனே செயல்பட்டார். தன்னுடைய செல்போனை எடுத்து இரண்டு நிமிடங்களை செலவழித்தவர் தலையசைத்தபடி பேச ஆரம்பித்தார்.

" ஸார்.... திருமூர்த்தி சொன்னது சரிதான். எக்ஸ் மினிஸ்டர் தேஜா பசவப்பா நாலுதடவை பொதுப்பணித்துறை அமைச்சராய் இருந்திருக்கார். இவர் பேர்ல நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்திருக்கு... ஆறு வருஷத்துக்கு முன்னால் அவர் பயணம் செய்த காரும், லாரியும் மோதியதில் சம்பவ இடத்துலயே இறந்துட்டதாய் கூகுள் சொல்லுது. மனைவியோட பேரு கல்பனா. ஒரு மகன். பேரு மானேஷ் "

சந்திரசூடனின் பார்வை இப்போது திருமூர்த்தியின் பக்கம் திரும்பியது.

" தேஜா பசவப்பா 144ம் நெம்பர் ஃப்ளாட்டுக்கு வரும்போது அவரோட மகன் மானேஷ் கூட வந்திருக்காரா .. ? "
" வந்ததில்லை ஸார் "

" மானேஷைப்பத்தி நாகண்ணா உன்கிட்ட சொல்லியிருக்காரா.. ? "

" ம்.... சொல்லியிருக்கார்... தன் அப்பாவோட நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால ஹூப்ளிக்கு போய் தனியா தங்கியிருக்கிறதாய் சொல்லியிருக்கார். தேஜா பசவப்பா விபத்துல இறந்து ஒரு மாசமானதும் மானேஷ் என்னைப் பார்க்க வந்து இருந்தார். அந்த சமயத்துல என்னோட பார்ட்னர்ஸ் அருளானந்தமும், ராவணனும் இருந்தாங்க "

" மானேஷ் எதுக்காக உன்னை பார்க்க வந்தார் .. ? "

" 144ம் நெம்பர் ஃப்ளாட்டை புனேவைச் சேர்ந்த மல்டி பிசினஸ்மேனான கன்ஷிராம் என்கிற நபர்க்கு ரெண்டு கோடி ரூபாய்க்கு வித்துட்டதாகவும், அந்த ஃப்ளாட் சம்பந்தப்பட்ட பேரண்டல் டாக்குமெண்ட்ஸோட காபி வேணும்ன்னு கேட்டார். அவர் அப்படி சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. நான் மானேஷ்கிட்ட "உங்கப்பா ஆசைப்பட்டு வாங்கின ஃப்ளாட் அது. அந்த ஃப்ளாட்டுக்குள்ளே அவர் நிறைய இன்டீரியர் டெக்கரேசன் பண்ணியிருக்கார். அதை விக்கறதுக்கு முன்னாடி எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே"ன்னு ஆதங்கப்பட்டேன். மானேஷ் அதையெல்லாம் காதுலயே போட்டுக்கலை. அப்பா வாங்கின அந்த ஃப்ளாட் இப்ப எனக்கு சொந்தம். அதை விக்க உங்ககிட்ட கேட்க வேண்டிய அவசியமில்லைன்னு மூஞ்சியில் அடிச்ச மாதிரி சொல்லிட்டு, பேரண்டல் டாக்குமெண்ட்டோட காபியை வாங்கிட்டுப் போயிட்டார் "

திருமூர்த்தி சொன்னதையெல்லாம் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்த சந்திரசூடன் இப்போது மெதுவாய் சோபாவைவிட்டு எழுந்து அவரருகே வந்து நின்று தோளின் மீது கையைப் போட்டார்.

" நான் இப்ப உன்கிட்ட கேட்கப் போகிற ஒரு முக்கியமான கேள்விக்கு ஒரு வார்த்தை கூட பொய் கலக்காத உண்மையான பதில் எனக்கு வேணும் "

" ஸார்... இப்பவும் நான் உண்மையைத்தான் பேசிட்டிருக்கேன். இனிமேலும் அதைத்தான் பேசப் போறேன் "
சரி.... தேஜா பசவப்பா 144ம் நெம்பர் ஃப்ளாட்டுக்குள்ளே சில குறுக்குச்சுவர்களை எதுக்காக கட்டினார்ன்னு நிஜமாகவே உனக்குத் தெரியாதா.. ? "

" அது வந்து ஸார்..... ஆரம்பத்துல எனக்குத் தெரியாது. ஆனா மானேஷ் அந்த ஃப்ளாட்டை புனேவில் இருக்கிற கன்ஷிராமுக்கு வித்த பிறகு ஒரு ஆறு மாசம் கழிச்சுத்தான் அந்த குறுக்குச்சுவர்கள் எதுக்காக கட்டப்பட்டதுங்கிற விபரம் எனக்குத் தெரிய வந்தது "

" எப்படி தெரியும்.. ? "

" நாகண்ணா சொன்னார் "

" என்னது.... நாகண்ணாவா... அவர்தான் கார் ஆக்ஸிடெண்ட்ல தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜூக்கு போயிட்டதாய் சொன்னியே.. ? "

" ஆமா ஸார்... ஆனா அடுத்த ஆறு மாசத்துக்குள்ளேயே அவர் கோமா ஸ்டேஜிலிருந்து மீண்டு தலைக்காயமெல்லாம் ஆறி, நார்மலான நிலைமைக்கு வந்த பிறகு என்னை வந்து பார்த்தார். ரொம்ப நேரத்துக்குப் பிறகு ஃப்ளாட்டின் உட்புறத்தில் கட்டப்பட்ட குறுக்குச்சுவர்களில் தங்க செங்கற்கள் இருக்கிற விஷயத்தை தயங்கி தயங்கி சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் "
" இந்த விஷயம் உன்னோட மத்த ரெண்டு பார்ட்னர்ஸூக்குத் தெரியுமா .. ? "

" அருளானந்தத்துக்கு மட்டும் தெரியும் ஸார் "

" ராவணனுக்கு .. ? "

" தெரியாது ஸார். அந்த சமயத்துல ராவணன் அதிரா அப்பார்ட்மெண்ட் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகி தனியா ஏதோ ஒரு பிசினஸ் பண்ண வடநாட்டுப்பக்கம் போயிட்டார். ராவணன் இப்போ எங்கேயிருக்கார்ன்னு கூட எனக்குத் தெரியாது "

" சரி.... ஃப்ளாட்டோட உட்புற குறுக்குச் சுவர்களில் தங்க செங்கற்கள் இருக்குங்கிற விஷயம் தெரிஞ்சதும், நீயும், அருளானந்தமும், நாகண்ணாவும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவை எடுத்திருப்பீங்க. அது எதுமாதிரியான முடிவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.. ? "

" ஸார்.... ஃப்ளாட்டுக்குள்ளே தங்கச் செங்கற்கள் இருக்கிற விஷயத்தை நாகண்ணா என்கிட்ட சொல்ல வந்த அன்னிக்குத்தான் அந்த ஃப்ளாட்டுக்கு டி.வி. நடிகை சொர்ணரேகா பால்காய்ச்சி குடி வந்தா. நானும், அருளானந்தமும் நாகண்ணாகிட்ட இந்த தங்க செங்கல் விஷயத்தை மானேஷ்கிட்ட சொல்லலாமான்னு கேட்டோம். அவர் மறுத்துட்டார். சொன்னா பிரச்சினை வேற மாதிரி போயிடும்ன்னு சொன்னார் "

" வேறமாதிரின்னா.. ? "

" மானேஷுக்கு அவரோட அப்பாவை பிடிக்காமே போக காரணம் அவர் ஊழல் பண்ணி நிறைய பணம் சம்பாதிச்சதுதான். அதனாலத்தான் அந்த வீட்ல இருக்கப் பிடிக்காமே ஹூப்ளிக்கு போய் தனியாய் இருந்தார். அப்பா விபத்துல இறந்துட்டார்ன்னு தெரிஞ்ச பிறகுதான் சிக்மகளூர்க்கு திரும்பி வந்தார். ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்கிற மானேஷ்கிட்ட போய் உங்க அப்பா வாங்கின இந்த ஃப்ளாட்ல தங்க செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் இருக்குன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே அவர் வருமானவரி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துடுவார். அந்த தங்க செங்கற்கள் விஷயம் இந்த நிமிஷம் நம்ம மூணு பேர்க்கு மட்டும்தான் தெரியும். மானேஷுக்கும் தெரியாது. மானேஷ்கிட்டயிருந்த அந்த ஃப்ளாட்டை வாங்கின கன்ஷிராமுக்கும் தெரியாது. இப்ப அந்த ஃப்ளாட்டில் குடியிருக்கிற டி.வி. நடிகை சொர்ணரேகாவுக்கும் தெரியாது. இது நமக்குக் கிடைச்சிருக்கிற ஒரு ப்ளஸ் பாயிண்ட். இந்த ப்ளஸ் பாயிண்ட்டை வெச்சுகிட்டுத்தான் நாம் அந்த ஃப்ளாட் நெம்பர் 144ஐ கைப்பற்ற முடியும்ன்னு நாகண்ணா சொன்னார் "

சந்திரசூடன் குறுக்கிட்டார்.

" அதாவது அந்த ஃப்ளாட்ல யாரும் குடியிருக்கக்கூடாது. மீறி குடியிருந்தா அவங்க உயிரோடு இருக்க மாட்டாங்க. இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தா அந்த ஃப்ளாட்டுக்கு குடி வர தயங்குவாங்க. அந்த ஃப்ளாட்டுக்கு ஒனரான கன்ஷிராமும் பயந்துகிட்டு ஃப்ளாட்டை விக்க முன் வருவார். இதுதானே உங்க திட்டம்"

" ஆமா ஸார் "

" சரி, அந்த ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த டி.வி. நடிகை சொர்ணரேகா, ஏர்ஹோஸ்ட் தர்ஷிணி, காலேஜ் தமிழ் புரபசர் நப்பின்னை, ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்த வான்மதி, ரியல் எஸ்டேட் ஒனர் அன்வர் அலி இவங்க அஞ்சு பேரைத் தவிர ஃப்ளாட்டில் தங்காத கோபிகாவின் கணவர் தனசேகரும் ஒரே மாதிரியான முறையில் கொல்லப்பட்டு இருக்காங்க... இந்தக் கொலைத் திட்டத்தை செயல்படுத்தினது யாரு.. ? "

" அ...அ...அது....வந்து.... "

" சொல்லு யாரு.. ? "

" சொல்றேன் ஸார். ஆனா நீங்க அதை நம்பணும் "

**********

(அடுத்த அத்தியாயத்துடன்
தொடர் நிறைவடையும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 , 62 , 63 , 64 , 65 , 66 , 67 ]

English summary
Flat number 144 adhira apartment episode 68 by rajesh kumar novelist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X