Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இப்ப நீங்க என்ன சொன்னீங்க ..?? ​- ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (49)

Subscribe to Oneindia Tamil

-ராஜேஷ்குமார்

டி.ஜி.பி. ராம்பாபுவின் இரண்டு புருவங்களும் விநாடி நேரத்தில் சட்டென்று உயர்ந்து தாழ்ந்தன. சந்திரசூடனை விழிகள் விரியப் பார்த்தார்.

" இப்ப நீங்க என்ன சொன்னீங்க ....... ? "

" குற்றவாளிகளை நெருங்கிட்டேன்னு சொன்னேன் ஸார் "

" ஹூ ஈஸ் தட் கல்ப்ரிட்ஸ் ....... ? "

" அவங்க யார்ன்னு தெரியாது ஸார்.. ஆனா இருக்கிற இடத்தை ஸ்மெல் பண்ணிட்டேன்.. கொஞ்சம் அவசரப்பட்டாலும் அவங்க தப்பிக்க வாய்ப்பு அதிகம். பட் தே கேன் நெவர் எஸ்கேப் ஃப்ரம் மீ " சந்திரசூடன் கோபமாய் பேச டி.ஜி.பி. பெருமூச்செறிந்தார்.

" இந்த கேஸ்ல மட்டும் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டறீங்கன்னு எனக்குப் புரியலை "

" அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த மரணங்களுக்குப்பின்னாடி ஒரு மிகப்பெரிய கொடூரம் இருக்கு ஸார்.... அந்த கொடூரத்துக்கு காரணமானவங்களை சட்டத்துக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்த வேண்டியது நம்ம டிபார்ட்மெண்ட்டோட கடமை"

" அந்தக் கடமையைப்பத்தி நீங்க எனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டாம்... இந்த கேஸ்ல இவ்வளவு வேகம் வேண்டாம்.. ஆறப்போடுங்க.. இந்த கேஸை டீல் பண்றது நெருப்போடு விளையாடறதுக்கு சமம்"

" ஸாரி ஸார்.. இந்த விளையாட்டு எனக்குப் பிடிச்சிருக்கு "

" உங்களுக்கு மனைவி, மகன், மகள்ன்னு ஒரு அழகான நிறைவான குடும்பம் இருக்கு.... அதை மறந்துடாதீங்க. நாளைக்கு என்ன பிரச்சினை வேணும்ன்னாலும் வரலாம் "

" என்ன ஸார்.... ஒரு டி.ஜி.பி. மாதிரி பேசாமே பேட்டை தாதா மாதிரி பிஹேவ் பண்றீங்க ஆர் யூ அஷேம்ட் டு பி ஏ போலீஸ் ஆபீஸர் "

சற்றே ஆவேசமான கோபத்தில் முகம் சிவநது பேசிய சந்திரசூடனை ஒரு சிறு புன்னகையோடு பார்த்தார் டி.ஜி.பி. அந்தப் புன்னகை ஒரு சிறு சிரிப்பாக மாறியது. சந்திரசூடன் திகைத்தார்.

Flat number 144 adhira apartment episode 49

" இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் ஸார்...... ? "

" உங்களோட கோபமும் நீங்க கேட்ட கேள்வியும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு அர்த்தம். ஐ லைக் திஸ் ஏங்கர் "

" ஸார்... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை.... "

" நான் உங்களுக்கு ஒரு பரீட்சை வெச்சேன். அதுல நீங்க பாஸாயிட்டீங்கன்னு சொல்ல வர்றேன் "

" பரீட்சையா ....... ? "

" எஸ்.... விர்ச்சுவல் எக்ஸாம்.... அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸை இன்வெஸ்டிகேட் பண்றதுல நீங்க எந்த அளவுக்கு உறுதியாய் இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட நீங்க ரொம்பவும் ஸ்ட்ராங்க்கா இருக்கீங்க... நான் உங்களுக்கு ஹை அஃபீஷியல்ன்னு தெரிஞ்சும் அந்த புரோடோகால் சட்ட விதிமுறைகளையெல்லாம் பார்க்காமே எனக்கு எதிராய் குரலை உயர்த்திப் பேசிய வார்த்தைகளே போதும். யூ ஆர் த ரைட் பர்ஸன் டு இன்வெஸ்டிகேட் தட் கேஸ் "

" ஸ...ஸ....ஸார்... "

டி.ஜி.பி. புன்னகை பெரிதாயிற்று. " இப்படி நான் பேசறது உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட் நேர்மையான முறையில் செயல்படணுன்னு உங்களை மாதிரியே நினைக்கிற வெகு அரிதான அதிகாரிகளில் நானும் ஒருத்தன். என்னோட ரிடையர்மெண்ட்டுக்கு இன்னும் ஆறுமாசம்தான் இருக்கு... முப்பது வருஷ சர்வீஸ்... எனக்கு தெரிஞ்சு ஒரு நாள் கூட நான் சட்ட விதிகளுக்கு எதிராய் செயல்பட்டதில்லை. ஆனா கடந்த சில நாட்களாகவே மேலிடத்திலிருந்து எனக்கொரு ப்ரஷ்ஷர் வந்துட்டேயிருக்கு. அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸ்ல தீவிரமான இன்வெஸ்டிகேஷன் இருக்கக்கூடாது. அது சம்பந்தப்பட்ட செய்திகள் எந்த ந்யூஸ் பேப்பரிலும் வரக்கூடாது, முக்கியமா ஸ்மேஷ் பத்திரிக்கையில் வரவே கூடாது. சந்திரசூடனை உங்க கட்டுப்பாட்டுக்குள்ளே வெச்சுகிட்டு அவரை ஹேண்டில் பண்ணுங்க. முடிஞ்சா அவரை லா அண்ட் ஆர்டரிலிருந்து எடுத்து வேற ஒரு டிபார்ட்மெண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க.. இப்படிப்பட்ட ஓரல் ஆர்டர்ஸ் கடந்த ரெண்டு வார காலமாய் தொடர்ச்சியாய் வந்துட்டிருக்கு.... நானும் அந்த ஆர்டர்களுக்கு கட்டுப்படற மாதிரி நடிச்சு, உங்களை இங்கே வரவழைச்சுப் பேசிட்டிருக்கேன் "

ராம்பாபு பேசி முடிக்க சந்திரசூடன் எழுந்து நின்று ஒரு சல்யூட் வைத்தார்.

" வெரி ஸாரி ஸார்.... உங்க மனசுக்குள்ளே இருக்கிற உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சுக்காமே நான் கோபத்துல ஏதேதோ பேசிட்டேன் "

" மிஸ்டர் சந்திரசூடன்.... முதல்ல உட்கார்ங்க. நீங்க காட்டினது நியாயமான கோபம். ஆனா இனிமே அந்த கோபத்தை வெளிப்படையா காட்டாதீங்க. அப்படி காட்டறதால ஒரு பிரயோஜனமும் இல்லை.... மேலிடத்துக்கு பயப்படறமாதிரி நடிச்சுகிட்டே இந்த அப்பார்ட்மெண்ட் கேஸை டீல் பண்ணனும். குற்றவாளிகளை நெருங்கணும் "

" அது சாத்தியமா ஸார் ....... ? "

" சாத்தியம்தான்.... எப்படின்னு நான் சொல்றேன். மேலிடம் எனக்குத் தர்ற இன்ஸ்ட்ரக்சனை உங்களுக்கு நான் கன்வே பண்றேன். ஆனா நீங்க என்ன பண்றீங்கன்னு மேலிடம் கவனிப்பாங்க. அவங்களுக்கு நம்பிக்கை தர்ற மாதிரி உங்களோட நடவடிக்கைகள் இருக்கணும். அதுக்கு நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை என்ன தெரியுமா....... ? "

" சொல்லுங்க ஸார் "

" ஸ்மேஷ் பத்திரிக்கையில் அதிரா அப்பார்ட்மெண்ட் பற்றிய செய்திகள் வராமே பார்த்துக்கணும் "
" நான் எடிட்டர் வாஹினிகிட்ட சொல்லிடறேன் ஸார் "

" ரெண்டாவது வேலை நீங்க ஒரு வார காலத்துக்கு வேற ஏதாவது கேஸை எடுத்து அதுல இண்ட்ரஸ்ட் இருக்கிற மாதிரி காட்டிக்கணும் "

" நோ... ப்ராப்ளம்... ரெண்டு மூணு கேஸ் பெண்டிங்கில் இருக்கு ஸார்... அதுல ஏதாவது ஒரு கேஸை எடுத்து ஹேண்டில் பண்ணிக்கறேன் "

" மூணாவதா நான் இப்ப சொல்லப் போற வேலைதான் முக்கியமான வேலை.. அதிரா அப்பார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் இறந்துபோன ஆறுபேரில் நாலு பேர் பெண்கள். ரெண்டு பேர் ஆண்கள் இல்லையா....... ? "

" ஆமா ஸார் "

" அந்த மரணங்கள் இயற்கையானது அல்ல.. கொலை செய்யப்பட்டு இருக்கலாம்ங்கிறது உங்க கெஸ்வொர்க்.. ஆறு பேர்ல நாலு பேர் மின் தகனம் செய்யப்பட்டும், மீதி ரெண்டு பேர் புதைக்கப்பட்டும் இருக்காங்க. ஏம் ஐ கரெக்ட்"

" எஸ் ஸார் "

" அந்த ரெண்டு பேர் யார்....... ? "

" வான்மதியும், அன்வர் அலியும் ஸார்.. வான்மதி கிறிஸ்துவ மதம். அன்வர் அலி இஸ்லாமியர். அதனால புதைக்கப்பட்டு இருக்காங்க. அந்த ரெண்டு பாடிகளையும் தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்த்தா மரணத்துக்கான காரணம் தெரிஞ்சுடும் ஸார் "

" ரெண்டு நாளைக்கு முந்தி என்கிட்டே பேசும்போது ஜெல்பால் ப்ளாஸ்டர் ங்கிற ரசாயனத்தைப் பற்றி சொன்னீங்க. அந்த ரசாயனம் அந்த உடம்புகளோட எலும்புகளில் ஒட்டியிருக்கலாம்ங்கிறது உங்க சந்தேகம்....... ? "

" ஆமா ஸார் "

" சரி... உடம்புகளை தோண்டி எடுக்க என்ன ஏற்பாடு பண்ணியிருக்கீங்க....... ? "

" இனிமேல்தான் ஏற்பாடு பண்ணனும் ஸார். முறைப்படி கோர்ட்டுக்குப் போய்... மாஜிஸ்ட்ரேட்கிட்டே..... "

டி.ஜி.பி. கையமர்த்தினார்.

" கோர்ட்டெல்லாம் வேண்டாம். வான்மதி, அன்வர் அலி இந்த ரெண்டு பேர் உடம்புகளையும் இந்த வாரத்துக்குள்ள தோண்டு எடுக்கப்படணும்ன்னா அதுக்கு ஒரேயொரு வழிதான் இருக்கு. கேன் யூ கெஸ் வாட் இட் ஈஸ்..? "

" நோ ஐடியா ஸார் "

" என்.ஹெச்.ஆர்.சி.க்கு போயிடவேண்டியதுதான்"

" ஸார்... யூ மீன் நேஷனல் ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷன் "

" அதேதான் ....."

" அங்கே போனா ஆர்டர் கிடைக்க லேட்டாகுமே ஸார் "

" லேட்டாகாமே நான் பார்த்துக்கிறேன் "

" எப்படி ஸார் ? "

" இப்போ மனித உரிமை கமிஷன்ல தலைவராயிருக்கிறவர் என்னோட நண்பர்தான். பேரு தெய்வசிகாமணி. அவர் தலைவராய் வந்த பிறகுதான் லாக் அப் டெத்ஸ் எழுபது சதவீதம் குறைஞ்சிருக்கிறதா சர்வே ஒண்ணு சொல்லுது. தெய்வசிகாமணிக்கு அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த மரணங்களைக் குறிப்பிட்டு பெட்டிஷன் ரிக்கார்டிங் வித் சஸ்பீஷியஸ் டெத்ங்கிற கேப்ஷன்ல ஒரு மனு போட்டா போதும். உடம்புகளை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்கான ஆர்டர் ஒரு வாரத்துக்குள்ளே வந்துடும் "

" க்ரேட் ஸார்... நான் இன்னிக்கே பெட்டிஷன் போட்டுடறேன் "

ராம்பாபு குரலைத் தாழ்த்தினார்.

" பெட்டிஷனை நீங்க போடக்கூடாது....? "

" தென் ஹூ எலஸ் ஸார் "

" அன்வர் அலி ஃபேமிலியும், வான்மதி ஃபேமிலியும் கலந்து பேசி பெட்டிஷனை தயார் பண்ணி அனுப்பி வைக்கணும். பாதிக்கப்பட்டவங்க மனு போட்டாத்தான் மனித உரிமை கமிஷன்ல எடுபடும். பெட்டிஷனை அனுப்பிவிட்டு எனக்கு தகவல் கொடுங்க. நான் தெய்வசிகாமணிகிட்ட பேசிடறேன் "

" ஸார்.... உங்க நண்பர் இதை செய்வாரா ....? "

" கண்டிப்பா செய்வார். தெய்வசிகாமணியும் என்னை மாதிரியே ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட்தான். யாரைப்பத்தியும், எதைப்பத்தியும் கவலைப்படாமே நீதி நியாயத்தைப் பத்தி மட்டுமே கவலைப்படுபவர்... ஆர்டர் கண்டிப்பா கிடைச்சுடும்"

" ஸ..ஸ..ஸார் " சந்திரசூடன் குரலை இழுத்தார்.

" என்ன சொல்லுங்க "

" உங்க மேலிடத்துக்கு இந்த விஷயம் தெரியவரும்போது அவங்க ரியாக்சன் எப்படியிருக்கும்ன்னு தெரியலையே ....? "

" அவங்க காதுக்கு விஷயம் போய் சேர்றதுக்கு முந்தியே மனித உரிமை கமிஷன்லிருந்து நமக்கு சாதகமான ஆர்டர் வந்துடும்... ஒரு மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னாடி ரெண்டு உடம்புகளையும் தோண்டி எடுத்து மார்ச்சுவரிக்கு அனுப்பி வெச்சு சூட்டோடு சூடாய் ரிப்போர்ட்டுகளை வாங்கிட வேண்டியதுதான... .நீங்க உடனடியாய் கிளம்பிப்போய் அன்வர் அலியோட ஃபேமிலி மெம்பர்ஸையும், வான்மதியோட ஃபேமிலி மெம்பர்ஸையும் பார்த்து பேசி ஒரு பெட்டிஷனை தயார் செஞ்சு என்.ஹெச்.ஆர்.சி.க்கு அனுப்பிடுங்க. நான் அதை ஃபாலோ பண்ணிக்கறேன் "

டி.ஜி.பி. சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரசூடனின் செல்போன் முணுமுணுப்பாய் அழைத்தது.

" எக்ஸ்யூஸ் மீ ஸார் " டி.ஜி.பி.யிடம் சொல்லிக்கொண்டு செல்போனை எடுத்துப் பார்த்தார். டிஸ்ப்ளேயில் சர்வேஷ் பெயர் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

" ஸார்.. போன்ல சர்வேஷ்.... "

" இந்த கேஸ்ல உங்களுக்கு உதவியாய் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருக்கிற ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சர்வேஷைத்தானே சொல்றீங்க ....... ? "

" ஆமா ஸார் "

" ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க "

சந்திரசூடன் செல்போனின் ஸ்பீக்கர் பட்டனைத் தொட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.
" சொல்லுங்க சர்வேஷ்.... "

" ஸார்.... சூளைமேடு உதயா இப்போ சாலிக்கிராமத்தில் இருக்கிற ஒரு துணை நடிகையோட வீட்டில் தங்கியிருக்கிறதா தகவல் கிடைச்சு அங்கே போயிட்டிருக்கேன் "

" அரஸ்ட் வாரண்ட் கையில இருக்கா... ? "

" இருக்கு ஸார் "

" உங்களோடு எத்தனை போலீஸ் கமெண்டோக்களை கூட்டிட்டு போறீங்க ... ? "

" அஞ்சு பேர் ஸார் "

" போதுமா ... ? "

" போதும் ஸார்.... தே ஆர் வித் ஆர்மஸ்.. உதயாவை அரெஸ்ட் பண்றதுல எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது
" அவனை எங்கே கூட்டிட்டு போறீங்க... ? "

" கமிஷனர் ஆபீஸுக்கு கூட்டிட்டு போயிடறேன் ஸார். அங்கே இருக்கிற செல்லில் வெச்சே விசாரணை பண்ணிடலாம் "

" தட்ஸ் குட்.... நானும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே கமிஷனர் ஆபீஸுக்கு போயிடுவேன் "
" ஒ.கே.ஸார்.... வி வில் மீட் தேர் "

சந்திரசூடன் செல்போனை அணைத்து, சட்டைப் பாக்கெட்டுகளை திணித்துக்கொள்ள டி.ஜி.பி. குழப்பமான முகத்தோடு கேட்டார்.

" யார் இந்த சூளைமேடு உதயா....... ? "

" இவனும் இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் கேஸூக்குள்ளே இருக்கான் ஸார் " என்று பேச்சை ஆரம்பித்த சந்திரசூடன் ஒரு ஐந்து நிமிஷ நேரத்தை செலவழித்து ஜெயராஜ், இனிகோ செல்வராஜ் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் சொல்லி முடித்தார்.

டி.ஜி.பி. அகலமாய் முகம் மலர்ந்தார்.

" ஆல்மோஸ்ட் குற்றவாளிகளை நெருங்கிட்டோம்ன்னு நினைக்கிறேன் "

" தட் ஈஸ் வாட் ஐ ஆல்ரெடி ஸெட் ஸார் " என்று சொன்ன சந்திரசூடன் எழுந்து கொண்டார்.

" நான் இப்பவே புறப்பட்டால்தான் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே கமிஷனர் ஆபீஸுக்கு போய் சேர முடியும் ஸார் "

"ஒ.கே. நீங்க புறப்படுங்க.மறக்காமே அந்த பெட்டிஷனை என்.எச்.ஆர்.சிக்கு அனுப்பிடுங்க "

" ஷ்யூர்... நாளைக்கு காலையில் முதல் வேலை அதுதான் ஸார் "

ஒரு புன்னகையோடு சொன்ன சந்திரசூடன் சல்யூட் செய்துவிட்டு அறையினின்றும் வெளியேறினார்.

அவர் வராந்தாவில் நடந்து பார்வையிலிருந்து மறையும்வரைப் பார்த்துக்கொண்டிருந்த டி.ஜி.பி.ராம்பாபு அதற்குப் பிறகு தன்னுடைய செல்போனை எடுத்து காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத் தேடிப்பிடித்து தேய்த்துவிட்டு காதில் வைத்தார்.

மறுமுனையில் ரிங் போய்க் கொண்டிருந்தது.

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+