• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“ அந்த சம்பவத்தைப் பார்த்தது யார்..?“ ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (41)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சந்திரசூடன் செல்போனில் பேச்சைத் தொடர்ந்தார்.

" மிஸ்டர் வால்சந்த்..... ஹாஸ்பிடல் ஊழியர் ஒருவரிடம் இருந்து, ஜெயராஜ் செல்போனை வாங்கி யார்க்கோ போன் பேசியதாய் சொன்னீர்கள் இல்லையா .......? "

" ஆமாம் .......... "

" அந்த சம்பவத்தைப் பார்த்தது யார்.......? "

" அறையை சுத்தம் செய்ய வந்த ஸ்கேவன்ஞ்சர் ஸார்... ஆனால் ஸ்கேவன்ஞ்சரால் ஜெயராஜூக்கு செல்போனை கொடுத்த நபர் யார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. குழப்பமாய் இருப்பதாக சொல்லிவிட்டார் "

" அவர் சொன்ன பதில் நம்பும்படியாய் இருந்ததா.......? "

" நம்பும்படியாக இருந்தது ஸார்.... காரணம் ஒரு நபர் இன்னொரு நபரிடமிருந்து செல்போனை வாங்கி பேசுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதை உன்னிப்பாய் கவனிக்க தவறிவிட்டார் அந்த ஸ்கேவன்ஞ்சர்....."

" சீஃப் டாக்டரிடம் இதைப்பற்றி பேசினீர்களா .......? "

" இல்லை ஸார்.... இனிமேல்தான் பேச வேண்டும். அவர் எமர்ஜென்ஸி கேஸ் ஒன்றை கவனிக்கப் போய்விட்டார். அவரைச் சந்திக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. எப்படியும் இன்று மாலை ஆறுமணிக்குள் கூடுதலான தகவலேகளோடு உங்கள் லைனுக்கு வருகிறேன் ஸார் "

" வால்சந்த்..... உங்களுக்கு முக்கியமான வேறு வேலைகள் ஏதாவது இருந்தால் அவைகளை கவனியுங்கள். இந்த விஷயத்தை நாளைக்குக்கூட பார்த்துக்கொள்ளலாம்...."

மறுமுனையில் வால்சந்த் சிரித்தார்.

" எனக்கு இப்போது நீங்கள் கொடுத்து இருப்பதே ஒரு முக்கியமான வேலைதான் ஸார். ஜெயராஜூக்கு செல்போனைக் கொடுத்தது யார் என்கிற விஷயத்தில் இந்த ஹாஸ்பிடலில் இன்னமும் சில பேரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அந்த விசாரிப்பிலேயே நேரம் கரைந்துவிடும். பிறகு சர்ச்சுக்குப் போய் ஜெயராஜின் அறையை சோதனை போட்டு விடுகிறேன் "

" தேங்க்.....யூ.... ஸோ....மச் ஃபார் யுவர் ஹெல்ப் டூ த அவுட் ஸ்டேட் போலீஸ் "

" ப்ளஷர் ஈஸ் மைன் ஸார்........ "

மறுமுனையில் வால்சந்த் செல்போனை அணைத்துவிட சந்திரசூடனும் இணைப்பைத் துண்டித்துவிட்டு சர்வேசனிடம் பேச முயன்ற விநாடி, லேண்ட் லைன் டெலிபோன் மெலிதாய் முணுமுணுப்பாய் கூப்பிட்டது.
சந்திரசூடன் ரிஸீவரை எடுத்து காதில் வைத்தார். அவருடைய உதவியாளர் பேசினார்.

Flat number 144 adhira apartment episode 41

" ஸார்..... அன்னபூர்ணின்னு ஒரு லேடி உங்ககூட உடனடியாய் பேசணும்ன்னு பிரியப்படறாங்க. லைன் கொடுக்கட்டுமா ஸார்.......? "

" அன்னபூர்ணியா.......? "

" ஆமா ஸார்...... அவங்க மேற்கு மாம்பலத்தில் இருக்கிற பூரணி நெஸ்ட் என்கிற பெண்கள் தங்கக்கூடிய ஹாஸ்டலோட நிர்வாகியாம். நீங்க கூட அந்த ஹாஸ்டலுக்கு போயிருக்கீங்களாம் "

" ஓ..... அந்த அன்னபூர்ணியா.......? லைன் குடுங்க "

அடுத்த சில விநாடிகளில் இணைப்பு கிடைத்து, மறுமுனையில் அந்த அன்னபூர்ணியின் குரல் கேட்டது.

" ஸார்.... நான் லேடீஸ் ஹாஸ்டல் நிர்வாகி அன்னபூர்ணி பேசறேன். நீங்க கூட நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி என்னோட ஹாஸ்டலுக்கு வந்திருந்தீங்க .......? "

" நல்லாவே ..... ஞாபகமிருக்கு..... சொல்லுங்கம்மா "

" ஸார்.... இப்போ நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா.......? "

" ஃப்ரீயாத்தான் இருக்கேன். என்ன விஷயம்ன்னு சொல்லுங்கம்மா .......? "

" ஸார்.... இந்த விஷயம் எந்த அளவுக்கு முக்கியமானதுன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் நீங்க இக்னோர் பண்ணிடாமே.... உடனடியாய் செயல்படணும் "

" முதல்ல விஷயம் என்னான்னு சொல்லுங்கம்மா "

அன்னபூர்ணி சற்றே பதட்டம் தடவிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

******

குந்தவை சொன்னதைக் கேட்டு வாஹினி தன் முகம் நிறைய வியப்பு காட்டினாள்.

" என்னது... சம்பந்தம் இருக்கா .......? "

" ஆமா மேடம்.....நான் ரிசர்ச் பண்ணி டாக்டரேட் பட்டம் வாங்கின அனிமல் ஸ்லாட்டரிங் புராஜெக்ட்டுக்கும்,

"ஜெல்பால் ப்ளாஸ்டர்" என்கிற வார்த்தைக்கும், அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அந்த ஆறு அசாதாரண மரணங்களுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு......... "

" எப்படி சம்பந்தப்படுதுன்னு சொல்ல முடியுமா .......? "

" நான் அதைச் சொல்றதுக்கு முன்னாடி நீங்க இந்த வீடியோவைப் பார்க்கணும். அதுக்கப்புறம்தான் நான் சொல்றது உங்களுக்குப் புரியும் மேடம் " என்று சொன்ன குந்தவை தன்னுடைய லேப்டாப்பை வாஹினி பார்க்கும்படியாய் எதிரேயிருந்த டீபாயின் மேல் வைத்து கீபோர்டில் இருந்த சில பட்டன்களைத் தட்டினாள்.
குந்தவையின் போட்டோவோடு லேப்டாப்பின், செவ்வகத்திரை லேசான மஞ்சள் நிறத்தோடு ஒளிர்ந்தது. திரையின் மையத்தில் சிவப்புநிற ஆங்கில எழுத்துக்கள் உருவாயிற்று. சப்மிஷன் ஆஃப் ஆர்ட்டிகள்.
" THE KILLING AND BUTCHERING OF ANIMALS (BLEED TO DEATH)"

என்று சொன்ன தலைப்புக்கு கீழே ஆங்கில வார்த்தைகள் வரிவரியாய் ஒடியிருக்க, வாஹினி மனசுக்குள் அதைப் படிக்க ஆரம்பித்தாள்.

" மெல்போர்ன் யூனிவர்ஸிடியின் பேராசிரியரும் விலங்குகளின் நலக்காப்பு அமைப்பாளருமான பீட்டர் ஸிங்கர் என்பவர் இறைச்சி, மீன், பால், முட்டை போன்றவற்றை சாப்பிடாமல், மனிதர்கள் உயிர் வாழவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடிந்தால் அத்தகைய வாழ்க்கையை மேற்க்கொள்ளத் தயாராக அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நான் சமர்ப்பிக்கும் இந்த ஆய்வுக்கட்டுரை அதிலிருந்து சற்று மாறுபட்டது என்பதை கவனிக்க வேண்டும். அசைவ உணவுப்பிரியர்கள் பால், முட்டை, மீன் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. அவர்கள் விலங்குகளின் இறைச்சிக்களைக்கூட உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இறைச்சிக்காக ஆடு, மாடு போன்ற விலங்குகள் கொடூரமாக வதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அது ஒரு உணவுப்பொருளாக மாறுவதைத்தான் என்னுடைய ஆய்வுக்கட்டுரை எதிர்க்கிறது. புலியானது மனிதனைக் கொன்று சாப்பிடுவது இயற்கையான ஒன்று என்றால், மனிதர்கள் ஆடு, மாடு போன்ற பிராணிகளை கொன்று சாப்பிடுவதில் என்ன தவறு என்ன கேட்கிறார்கள் ? அந்த வாதமும் நியாயமானதே. ஆனால் என்னுடைய வாதம் இதுதான். விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படும்போது, அதற்கு வலி இருக்கக்கூடாது. வதை செய்யப்படக்கூடாது. துடிக்க துடிக்க உயிர் போகக்கூடாது. இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல போனால் தான் சாகடிக்கப் போகிறோம் என்பதே அவைகளுக்குத் தெரியக்கூடாது. அதற்கு விஞ்ஞான ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை விலங்கு நல பாதுகாவலர்கள் யோசிக்க வேண்டும். இது குறித்து நான் உலகளவில் தேர்ந்தெடுத்து கொடுத்த பத்து வழிமுறைகளை ரிசர்ச் அனிமல் ஸ்லாட்டரிங் அண்ட் ப்ராஸ்ஸிங் கம்பெனிகளுக்கு அனுப்பியும், எந்தப் பலனும் இல்லை என்பதை கனத்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்....... "

லாப்டாப்பில் வீடியோ காட்சி முடிந்து போயிருக்க திரை வெளிச்சத்தை இழந்து நிறம் மங்கியது.
குந்தவை வாஹினியை ஏறிட்டாள்.

" என்ன மேடம்..... வீடியோவைப் பார்த்தீங்களா .......? "

வாஹினி எரிச்சலாய் கேட்டாள். " இந்த வீடியோவுக்கும், அதிரா அப்பார்ட்மெண்ட் மரணங்களுக்கும் என்ன சம்பந்தம் .......? "

" இருக்கு மேடம் "

" இருந்தா நேரிடையா விஷயத்துக்கு வாங்க. இப்படி பிரசங்கம் பண்ண வேண்டாம் "

" நேரிடையா விஷயத்தைச் சொன்னா அதுல உங்களுக்கு நம்பிக்கை வராது மேடம்.... இப்போ ரெண்டாவது வீடியோவைப் பாருங்க... அது கொஞ்சம் விஷூவலாய் இருக்கும். விஷயம் என்னான்னு புரியவும் செய்யும் "
குந்தவை சொல்லிக்கொண்டே லேப்டாப்பின் கீபோர்டில் ஒரு வார்த்தையை டைப் செய்ய, திரை உயிர்பிடித்து ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடு இருந்த ஒரு சிறிய கட்டிடத்தைக் காட்டியது. கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரில் "SLAUGHTER HOUSE" என்று கோணல்மாணலாய் எழுதப்பட்ட எழுத்துகளோடு போர்டு ஒன்று சாய்வாய் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்துவிட்டு குந்தவை சொன்னாள்.

" மேடம்..... இந்த ஸ்லாட்டர் ஹவுஸ் பிரேஸில் நாட்டில் இருக்கு..... ஓரே நாள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் இங்கே மனிதர்களின் இறைச்சி தேவைக்காக, உயிர்களை விட்டுகிட்டு இருக்கு. ஆறு வருஷங்களுக்கு முன்புவரை பிரேஸில் நாட்டில் இருக்கிற எல்லா ஸ்லாட்டர் ஹவுஸ்களிலும் கால்நடைகள் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூர்மையான ஆயுதத்தால் கழுத்து அறுபட்டும், பத்து நிமிஷம் வரை துடிச்ச பின்னாடி உயிரை விட்டுகிட்டு இருந்தது. ஆனா இன்னிக்கு நிலைமை அப்படியில்லை. அது ஆடாக இருந்தாலும், மாடாக இருந்தாலும் சரி, ஒரு துளி வலியில்லாமல் தான் கொல்லப்படுகிறோம்ன்னு, கூட தெரியாமே உயிர்களை விட்டு மனிதனோட இறைச்சி தேவைகளை பூர்த்தி பண்ணிட்டிருக்கு.... அந்த வீடியோ காட்சியைத்தான் நீங்க இப்ப பார்க்கப் போறீங்க "

சொன்ன குந்தவை ஃப்ரீஸ் செய்து வைத்திருந்த வீடியோ காட்சியை மறுபடியும் ஆன் செய்தாள். " ஹேவ் ஏ லுக் ஆன் திஸ் "

காட்சி நகர்ந்தது.

ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே அந்த சுத்தமான ஹால் தெரிய, ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் வரிசையாய் நின்றிருந்தன. அந்த மாடுகளை விட்டு சற்று தள்ளி ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்த அந்த நபர் சரளமான ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாட்டுத்தீவனம் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்.

" நான் இப்போது இந்த கால்நடைகளுக்குப் பிடித்தமான தீவனத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் அவைகளுக்கு கடைசி உணவுகூட. இப்படி சொல்வதற்கு என்னுடைய மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த கால்நடைகள் எல்லாமே வயதானவை. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடும். அவ்வாறு அவை நோயினால் கஷ்டப்பட்டு இறப்பதைக் காட்டிலும் சற்று ஆரோக்கியமாக இருக்கும்போதே அதனுடைய இறைச்சி மனிதர்களின் உணவுப்பொருளாக மாறுவது நல்லது என்கிற அடிப்படையில் அவைகளுக்கான கடைசி உணவைத்தயாரித்துக்கொண்டிருக்கிறேன். மக்காச்சோளத்தூளும், தர்ப்பூசணிப்பழச்சாறும் கலந்த இந்த உணவுக்கலவை கால்நடைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது தீவனம் தயாராகிவிட்டது. இந்த சத்தான தீவனத்தோடு அடுத்த சில நிமிஷங்களில் நான் ஒரு முக்கியமான ரசாயனப்பொருள் ஒன்றைக் கலக்கப்போகிறேன். கடந்து ஆறு வருஷகாலமாய் அந்த ரசாயனப்பொருள்தான் கால்நடைகளின் வலியில்லா மரணங்களுக்கு காரணமாய் இருந்து வருகிறது. அது எப்படிப்பட்ட ரசாயனப்பொருள் என்பதை இப்போது நாம் பார்க்கப் போகிறோம் "

அந்த நபர் பேசிக்கொண்டே எழுந்து போய், சுவரில் பதிந்திருந்த ஒரு அலமாரியின் கதவைத் திறந்து, உள்ளே பத்திப்படுத்தி வைத்து இருந்த, இரண்டடி நீளமும், அரையடி அகலமும் கொண்ட அந்த கூலிங் கண்டெய்ளரை எடுத்து வந்தார்.

வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த வாஹினிக்கு நெஞ்சு படபடத்தது. முகம் வியர்க்க ஆரம்பித்தது.

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 ]

English summary
Flat number 144 adhira apartment episode 41 by Rajesh Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X