• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பமுடியாத செய்தியா ? ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (38)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

கேள்வி கேட்ட அந்த டி.வி.நிருபரை சில விநாடிகள் வரை இமைக்காமல் பார்த்தாள் வாஹினி.
பொறுமை காத்த அந்த நிருபர் இறுகிப்போன முகத்தோடு கேட்டார்.

" இப்படிப் பார்த்தா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதாய் அர்த்தமா மேடம்.......? "

" மொதல்ல நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க "

" உங்க கேள்வி என்ன .......? "

" உண்மையிலேயே நீங்க டி.வி.நிருபர்தானா...... இல்லை அந்தப் போர்வையில் வந்திருக்கிற போலீஸா .......? "

" மேடம்... உண்மையிலேயே நான் 'ஃபுல் மூன்'டி.வியின் சீஃப் ரிப்போர்ட்டர்தான். என்னோட பேர் இதிகாசன்....... இது என்னோட ஐ.டி.கார்டு. இந்த கார்டைப் பார்த்த பின்னாடியும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா 'ஃபுல் மூன்'டி.வியோட எம்.டிக்கே போன் பண்ணி க்ராஸ் செக் பண்ணிக்கலாம் " சொன்ன அந்த இதிகாசன் தன்னுடைய ஐ.டி. கார்டை எடுத்து காட்டினார்.

வாஹினி அந்த ஐ.டி. கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு " இட்ஸ் ஒ.கே..... நீங்க என்கிட்ட என்ன கேள்வி கேட்டீங்க மறுபடியும் அதை ரிபீட் பண்ணுங்க " என்றாள்.

Flat number 144 adhira apartment episode 38

" ஈஞ்சாம்பாக்கம் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் கடந்த சில வருஷங்களில் ஆறு பேர் மர்மமான முறையில் ஃப்ளாட் நெம்பர் 144ல் இறந்து போயிருக்காங்க. இதில் நாலு பேர் பெண்கள். அதைப்பத்தி உங்க ஸ்மேஷ் பத்திரிக்கையில் ஏன் ஒரு வரி கூட எழுத மாட்டேங்கறீங்க ?"

" அந்த ஆறு பேரும் மர்மமான முறையில்தான் இறந்து போயிருக்காங்கன்னு எப்படி சொல்றீங்க ?"

" 144ங்கிற ஒரு குறிப்பிட்ட நெம்பர் ஃப்ளாட்டில் தொடர்ந்து மரணங்கள் நடந்தா அதுல ஏதோ மர்மம் இருக்குன்னுதானே அர்த்தம் ?"

" அப்படி மர்மமான மரணங்களாய் இருந்திருந்தா போலீஸ் டிபார்ட்மெண்ட் கையைக் கட்டிகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பாங்களா ? இதோ பாருங்க இதிகாசன்... இந்த அதிரா அப்பார்ட்மெண்ட் மரணங்கள் சம்பந்தமாய் எனக்கும் ஒரு அனினாமஸ் லெட்டர் சில மாசங்களுக்கு முன்னாடி வந்தது. அந்த லெட்டரை டைப் பண்ணி அனுப்பின நபர் நம்பமுடியாத செய்தி ஒண்ணை அதில் சொல்லியிருந்தார் "

" நம்பமுடியாத செய்தியா ? "

" ஆமா.... அவர் ஒரு பயோ மெடிக்கல் என்ஜினியராம்.... அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அந்த ஆறு மரணங்களுக்கும் காரணம் ஜெல்பால் ப்ளாஸ்டர் என்கிற விஷயமாம் "

" அதாவது அது இயற்கையான மரணங்கள் இல்லைன்னு சொல்ல வர்றார் ? "

" ஆமா.... "

அந்த"ஜெல்பால் ப்ளாஸ்டர்"என்கிற விஷயம் ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது? அதைப்பத்தி பயோ மெடிக்கல் சம்பந்தப்பட்ட யார்கிட்டயாவது கேட்டுப் பார்த்தீங்களா? "

" ம்..... எனக்கு ரொம்பவும் தெரிஞ்ச பயோ மெடிக்கல் ஃபீல்டில் புரபசராய் இருக்கிற சந்திரமெளலீஸ்வரன்கிட்ட இந்த ஜெல்பால் ப்ளாஸ்டரைப் பற்றி கேட்டேன். அவர் சிரிச்சார். இப்படிப்பட்ட ஒரு வார்த்தை பயோ மெடிக்கல் சயின்ஸில் இல்லைன்னு சொன்னார் "

" அவர் ஏன் பொய் சொல்லியிருக்கக்கூடாது ? "

" எதுக்காக அவர் பொய் சொல்லணும் ? "

" காரணத்தை அவர்கிட்டதான் கேட்கணும் மேடம் "

" திஸ் ஈஸ் டூ மச் இதிகாசன். சந்திரமெளலீஸ்வரன் ஒரு குட் பர்சன். அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. புனே பயோ மெடிக்கல் யூனிவர்ஸிடியில் முப்பது வருஷ காலம் புரபசராய் வேலை பார்த்து ரிடையரானவர் "

" அதனால்தான் அவர்க்கு "ஜெல்பால் ப்ளாஸ்டர்" பற்றி தெரியலை "

" வாட் டூ யூ மீன் ? "

" பயோ மெடிக்கல் சயின்ஸில் அவர் ஒரு புரபசராய் மட்டுமே வேலை பார்த்திருக்கார். அதுவே அவர் ஒரு ஆராய்ச்சியாளராய் இருந்திருந்தா அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கும் மேடம் "
வாஹினி சற்றே அதிர்ந்து போனவளாய் இதிகாசனைப் பார்த்தாள். " இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலை ? "

" இஃப்யூ ஹேவ்..... நோ...... அப்ஜெக்சன்..... உங்களுக்கு வந்த அந்த அனினாமஸ் லெட்டரை நான் பார்க்கலாமா .......? "

வாஹினி ஒரு சில விநாடிகள் தயங்கிவிட்டு தனக்கு முன்பாய் இருந்த செல்போனை எடுத்தாள். அதில் ஸ்கேன் எடுக்கப்பட்டு சேவ் செய்யப்பட்டிருந்த அந்த கடிதத்தைப் படிக்கக் கொடுத்தாள். இதிகாசன் செல்போனை வாங்கி நிதானமாய் படித்துவிட்டு வாஹினியை ஏறிட்டார்.

" மேடம்.... இந்த லெட்டர்ல இருக்கிற கடைசி பேராவை மறுபடியும் ஒரு தடவை படிச்சு காட்ட விரும்பறேன். படிக்கட்டுமா .......? " வாஹினி இறுகிய முகத்தோடு " ம்..... படிங்க " என்றாள்.

இதிகாசன் படிக்க ஆரம்பித்தார்.

" இதை நான் பகிரங்கமாக என்ன வெளிப்படுத்திக்கொண்டு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நான் என்னுடைய குடும்பத்துக்கு முக்கியமானவன். இந்த விஷயத்தில் என்னுடைய உயிரை பணயம் வைக்க நான் விரும்பவில்லை. உங்கள் ஸ்மேஷ் பத்திரிக்கை பிரபலமான பத்திரிக்கை. இந்தக் கடிதத்தை நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்தால் அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடைபெற்ற சம்பவங்கள் பல லட்சம் பேர்களுக்குத் தெரியவரும். அதன் விளைவாக போலீஸ் துறையின் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும். இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை. இதை ஒரு அநாமதேயக் கடிதமாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம். இப்படிக்கு பொய் பேசத் தெரியாதவன் "

கடிதத்தின் கடைசி பேராவைப் படித்து முடிந்த இதிகாசன் வாஹினியிடம் நிமிர்ந்தார்.

" மேடம்..... இந்த லெட்டரை நீங்க ஒரு பொருட்டா நினைச்சு கூடுதல் முயற்சி எடுத்திருந்தா கண்டிப்பா பலன் கிடைச்சிருக்கும். பட் நீங்க அந்த முயற்சியை எடுக்கவேயில்லைன்னு நினைக்கிறேன். அந்த லெட்டரை இக்னோர் பண்ணிட்டீங்க "

" நான் இக்னோர் பண்ணிட்டதாய் நீங்க எப்படி நினைக்கிறீங்க ? நானும் முயற்சி எடுத்தேன். அது உங்களுக்குத் தெரியுமா .......? "

" அது எதுமாதிரியான முயற்சின்னு நான் தெரிஞ்சுக்கலாமா .......? "

" தாராளமாய்..... அந்த ஆறுபேரோட மர்ம மரணங்களை போலீஸ்ல இருக்கிற கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மெண்ட்டில் எனக்கு தெரிஞ்ச சில அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு போனேன். அவங்க ஏற்கனவே அதைப்பற்றின ஒரு இன்வெஸ்டிகேஷனை நடத்தி, அது இயற்கையான மரணங்கள்தான் என்கிற முடிவுக்கு வந்து ஃபைலை க்ளோஸ் பண்ணியிருந்தாங்க "

" இயற்கையான மரணங்கள் என்கிற முடிவுக்கு அவங்க எப்படி வந்தாங்கன்னு நீங்க கேட்கலையா மேடம் .......? "
" கேட்டேன் "

" வாட் வாஸ் த ரிப்ளை .......? "

" இறந்து போனவர்களின் குடும்ப டாக்டர்கள் கொடுத்த ரிப்போர்ட்படி கார்டியோ வாஸ்குலர் அரஸ்ட் என்கிற முறையில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம்ன்னு சொன்னாங்க..... அந்த டாக்டர்ஸ் கொடுத்த டெத் சர்ட்டிபிகேட்களையும் காட்டினாங்க "

" நீங்களும் நம்பிட்டீங்க .......? "

" வேற வழி.... போலீஸ் அதிகாரிகள் சொல்றதை நம்பித்தானே ஆகணும் .......? "

" மேடம்.....உண்மையிலேயே உங்களுக்கு பெண்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை இருந்தா நான் ஒரு விஷயத்தைச் சொன்னா நீங்க நம்பணும் "

" சொல்லுங்க ...... "

" அந்த ஆறு பேர்களோட மரணங்களுக்குப் பின்னாடி ஏதோ ஒரு மர்மம் இருக்குங்கிறது என்னோட அஸ்ஸெம்ஷன் "

" அது என்னான்னு உங்களுக்குத் தெரியுமா .......? "

" தெரியாது..... ஆனா உங்க மாரல் சப்போர்ட் இருந்தா அதை வெளியே கொண்டு வந்து, இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டமுடியும். உங்க உதவி எனக்கு கிடைக்குமா மேடம் .......? "

வாஹினி இதிகாசனையே சில விநாடிகள் வரைக்கும் மெளனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கேட்டாள்.
" என்கிட்டயிருந்து நீங்க எதுமாதிரியான உதவியை எதிர்பார்க்கறீங்க .......? "

" இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டோட ஆறு மரணங்களை மறுபடியும் கிளறிவிடணும்..... அதாவது உங்க ஸ்மேஷ் மேகஸின்ல அந்த செய்தி வரணும் "

" அப்படி செய்தி வரணும்ன்னா சரியான காரணம் வேணும். நம்ம இஷ்டத்துக்கு ஒரு ந்யூஸை போட முடியாது "
" காரணம் உங்ககிட்டயே இருக்கு மேடம்...... "

" என்ன காரணம் .......? "

" அந்த "ஜெல்பால் ப்ளாஸ்டர்" பற்றிய லெட்டரையே பப்ளிஷ் பண்ணலாமே .......? "

" அது ஒரு அனினாமஸ் லெட்டர்.... அதாவது மொட்டை கடிதம்.... நம்பகத்தன்மை இல்லாமே எந்த ஒரு செய்தியும் என்னோட ஸ்மேஷ் பத்திரிக்கையில் இதுவரைக்கும் வந்தது இல்லை "

" நீங்க நினைக்கிற மாதிரி அது மொட்டை கடிதம் இல்லை மேடம்..... அந்த லெட்டரை எழுதின நபர் யார்ன்னு எனக்குத் தெரியும்....... "

வாஹினியின் நெற்றியில் ஒரு ஆச்சர்ய வரி உற்பத்தியாகி அப்படியே நின்றது.
" என்னது..... அந்த லெட்டரை எழுதினது யார்ன்னு தெரியுமா ? "

" தெரியும் "

" யாரது.....?"

" அவர் ஒரு டாக்டர் "

" பேரு .....? "

" ஸாரி மேடம்..... நீங்க அந்த "ஜெல்பால் ப்ளாஸ்டர்" பற்றிய லெட்டரை உங்க பத்திரிக்கையில் பப்ளிஷ் பண்றதாய் எனக்கு அஸ்யூரன்ஸ் கொடுங்க. நான் அந்த டாக்டரை உங்ககிட்ட பேச வைக்கிறேன் "

" நான் உங்களை எப்படி நம்பறது .....? "

" உங்களை நம்பி நான் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது நீங்க என்ன நம்பக்கூடாதா மேடம் .....? "

வாஹினி தன்னுடைய நெற்றியைப் பிடித்தபடி யோசிக்க இதிகாசன் தொடர்ந்தார்.

" இதோ பாருங்க மேடம்..... நானும் உங்களைப் போன்ற ஜர்னலிஸ்ட்தான். ஆனா டி.வி. மீடியாவில் இருக்கேன். சமூக நலன் சார்ந்த விஷயங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்... தப்பு எங்கே நடந்தாலும் அதைத் தட்டிக் கேக்காமே நான் இருந்ததில்லை... அப்படி தட்டிக்கேட்டதினால் ரெண்டு தடவை போலீஸ் லாக்கப்புக்குள்ளே போய் ராத்திரி பூராவும் இருந்துவிட்டு வந்திருக்கேன்.... ஒரு அரசியல் தலைவரோட லஞ்ச ஊழலைப்பத்தி நான் பேசினதால என் மேல் கோர்ட்ல ஒரு வழக்கு இருக்கு..... எனக்கு உங்க ஸ்மேஷ் பத்திரிக்கையும், நீங்க பெண்களோட நலனுக்காக குரல் கொடுக்கிற போராட்ட குணமும் ரொம்பவே பிடிக்கும்.... அதனால்தான் உங்களை பேட்டி எடுக்கவே வந்தேன். அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டில் அதுவும் ஒரே குறிப்பிட்ட ஃப்ளாட்டில் நடந்த மரணங்கள் அசாதாரணமானது..... ஸ்மேஷ் பத்திரிக்கையில் அதைப்பத்தி நீங்க எழுதணும். அந்த "ஜெல்பால் ப்ளாஸ்டர்" லெட்டரையும் பிரசுரிக்கணும். இந்த அஸ்யூரன்ஸை எனக்குக் கொடுங்க.... அந்த டாக்டரை உங்க கூட பேச வைக்கிறேன் "

மேற்கொண்டு ஏதோ பேச முயன்ற இதிகாசனை கையமர்த்தினாள் வாஹினி. பால்பாயிண்ட் பேனாவின் முனையைப் பிதுக்கி ஒரு A4 சீட்டை எடுத்து சில வார்த்தைகளை எழுதி இதிகாசனிடம் நீட்டினாள்.
" இதைப்படிங்க.... நாளைக்கு வரப்போகிற ஸ்மேஷ் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி இது "

ஃப்ளாட் நெம்பர் 144 '

அதிரா அப்பார்ட்மெண்ட்'

ஆறு மரணங்கள் '

இதன் பின்னணியில்.... இருப்பது.... '

யார்.....? "

" இந்த தலைப்பு ஓ.கே.வா..... இதிகாசன் .....? "

" ஓ.கே. மேடம் "

" இப்ப அந்த டாக்டர்க்கு போன் பண்ணுங்க "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 38) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X